காணொளி: கிரீன்லாந்து, நேட்டோ குறித்து டிரம்ப் சொன்னவை உண்மையா?

காணொளிக் குறிப்பு, காணொளி: கிரீன்லாந்து, நேட்டோ குறித்து டிரம்ப் சொன்னவை உண்மையா?
காணொளி: கிரீன்லாந்து, நேட்டோ குறித்து டிரம்ப் சொன்னவை உண்மையா?

புதன்கிழமை அன்று ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில், உலக தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், பல தவறான கூற்றுகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது.

கிரீன்லாந்தைத் திருப்பிக் கொடுத்ததா அமெரிக்கா?

“போருக்குப் பிறகு நாங்கள் கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் கொடுத்துவிட்டோம். இதை செய்ய நாங்கள் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்க வேண்டும்?” என்றார் டிரம்ப்.

ஆனால், பிபினி வெரிஃபைன் படி, உண்மையில் இவர் சொல்வதைப் போல, திருப்பிக் கொடுக்க கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமானது அல்ல.

1933-ல், தற்போதைய சர்வதேச நீதிமன்றத்தின் முன்னோடியாக இருந்த ஒரு சர்வதேச நீதிமன்றம், கிரீன்லாந்து டென்மார்க்கிற்குச் சொந்தமானது என தீர்ப்பளித்தது.

1941-ல் அதற்கு முந்தைய ஆண்டு டென்மார்க் ஜெர்மனியிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து நாஜிக்கள் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, அதைப் பாதுகாக்கும் உரிமையை அமெரிக்காவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க மற்றும் டென்மார்க் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இறையாண்மை மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை. அதாவது, கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்காவின் எல்லைக்குட்பட்ட பகுதியாக மாறவில்லை.

நேட்டோ செலவை அமெரிக்கா ஏற்கிறதா?

“நேட்டோவின் செலவில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அமெரிக்காவே செலுத்துகிறது.”

மேலும் அந்த ராணுவக் கூட்டணியில் உள்ள நாடுகளின் பங்களிப்பு குறித்து கூறுகையில், "அவர்கள் இதற்கு முன் 2 சதவீதத்தைச் செலுத்தவில்லை, ஆனால் இப்போது 5 சதவீதத்தைச் செலுத்துகிறார்கள்" என்றார் டிரம்ப்.

பிபிசி வெரிஃபை-ன் படி இந்த இரண்டு கூற்றுகளுமே சரியானவை அல்ல.

சமீபத்திய ஆண்டுகளில், நேட்டோ நாடுகளின் மொத்த பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்களிப்பு சுமார் 70 சதவீதமாக இருந்தது. 2024-ல் இது 65 சதவீதமாகக் குறைந்தது.

2025-ஆம் ஆண்டில் இது 62 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், முதல் முறையாக அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2 சதவீதத்தைப் பாதுகாப்புக்காக செலவிடத் தொடங்கியுள்ளன.

பாதுகாப்புக்காக உறுப்பு நாடுகள் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒப்புக்கொள்ள வைத்தது உண்மைதான். ஆனால், டிரம்ப் குறிப்பிடும் அந்த 5% இலக்கு என்பது 2035-குள் அடையப்பட வேண்டிய நீண்டகால இலக்காகும்.

தற்போது, எந்தவொரு நேட்டோ உறுப்பு நாடும் அந்த அளவுக்குச் செலவிடவில்லை. பாதுகாப்புக்காகத் தனது ஜிடிபியில் அதிகபட்சமாகச் செலவிடும் நாடான போலந்து கூட, 2025-ல் 4.5 சதவீதத்திற்கும் சற்றுக் குறைவாகவே செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு