இந்தியாவில் '10 நிமிட' டெலிவரி சேவையை நிறுத்துமாறு இ-காமர்ஸ் செயலிகளுக்கு அரசு உத்தரவு

    • எழுதியவர், நிகிதா யாதவ் & அபிஷேக் டே
    • பதவி,

தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய "10 நிமிட டெலிவரி" வாக்குறுதியைக் கைவிடுமாறு அனைத்து 'விரைவு வணிக' ('குயிக்-காமர்ஸ்') தளங்களையும் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.

அபாயகரமான பணிச்சூழல் காரணமாக டெலிவரி ஊழியர்கள் சமீபத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மத்திய தொழிலாளர் அமைச்சகம் மற்றும் நிறுவன அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் ஸொமாட்டோ, பிளிங்கிட், ஜெப்டோ போன்ற முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றன. இவை நகரங்களில் வசிப்பவர்களுக்கு மளிகைப் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை அனைத்தையும் சில நிமிடங்களில் டெலிவரி செய்கின்றன.

வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த சேவை பிரபலமாக இருந்தாலும், 'கிக் தொழிலாளர்கள்' மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த மாதம், ஆயிரக்கணக்கான டெலிவரி ஊழியர்கள் நியாயமான ஊதியம், கண்ணியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது வாடிக்கையாளர்களுக்குச் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தினாலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இதுபோன்ற சேவைகளின் மனிதரீதியான விளைவுகள் குறித்து இந்த எதிர்ப்பு தீவிரமான விவாதத்தைத் தூண்டியது.

வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில், விரைவான டெலிவரி காலக்கெடு குறித்து விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு நிறுவனங்களிடம் அரசு வலியுறுத்தியதாகப் பெயர் வெளியிட விரும்பாத தொழிலாளர் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து நிறுவனங்களும் இதை முழுமையாக ஏற்றுக்கொண்டனவா என்பது இன்னும் தெளிவாகவில்லை. பிளிங்கிட் போன்ற சில தளங்கள் ஏற்கெனவே தங்களது பிராண்டிங் மற்றும் விளம்பரங்களில் இருந்து "10-நிமிட" டெலிவரி என்ற வாசகத்தை நீக்கிவிட்டதாகவும், பிற நிறுவனங்கள் வரும் நாட்களில் இதைப் பின்பற்றும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை பல இடங்களில் செயலிகளில் காட்டப்பட்ட டெலிவரி நேரம் இன்னும் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்தது. பல நிறுவனங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் 'டார்க் ஸ்டோர்களை' இயக்குவதால், தூரம் குறைவாக இருப்பதால் இன்னும் விரைவாக டெலிவரி செய்ய முடிகிறது.

இந்த விவகாரம் குறித்து பிளிங்கிட் மற்றும் ஸொமாட்டோவை உள்ளடக்கிய எடர்னல் நிறுவனம், ஸ்விக்கி, ஜெப்டோ ஆகிய நிறுவனங்களிடம் பிபிசி கருத்து கேட்டுள்ளது.

கோவிட் பேரிடருக்குப் பிறகு இந்திய நகரங்களில் 'குயிக் காமர்ஸ்' துறை வேகமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சிறிய கிடங்குகளைப் பயன்படுத்தி, மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைச் சில நிமிடங்களிலேயே விநியோகம் செய்கின்றன.

இந்தியாவின் கிக் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2021இல் 7.7 மில்லியனாக இருந்த கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 23.5 மில்லியனாக உயரும் என நிதி ஆயோக் கணித்துள்ளது.

போட்டி தீவிரமடைந்ததால், நிறுவனங்கள் இன்னும் வேகமான விநியோகங்களை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்தன. இது நகரவாசிகளின் ஷாப்பிங் பழக்கத்தையே மாற்றியமைத்தது.

இத்தகைய வாக்குறுதிகள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து இருப்பதோடு, டெலிவரி ஊழியர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தி, பெரும்பாலும் அவர்களைப் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டத் தூண்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த மாதத் தொடக்கத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டிகளில், டெலிவரி ஊழியர்கள் தங்களது நீண்டநேர வேலை மற்றும் விரைவான டெலிவரி இலக்குகளால் ஏற்படும் கடுமையான நிதி நெருக்கடி குறித்து விவரித்தனர்.

அதுகுறித்துப் பேசிய 23 வயதான மொபின் ஆலம், டெலிவரி காலக்கெடுவை தவறவிட்டால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது குறைவான ஆர்டர்களே கிடைக்கும் என்றார். "எனக்கு வேறு வழியில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியுள்ளது," என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலும் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கும் மேலாக உழைத்த பிறகும், அவர் மாதம் சுமார் 20,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்.

"பெரும்பாலான தொழிலாளர்களுக்கு, இந்த 'கிக்' (gig) வேலை என்பது ஒரு பகுதிநேர வேலை கிடையாது. அதுவே அவர்களின் முதன்மையான வருமான ஆதாரம்," என்கிறார் ஆராய்ச்சியாளரும், 'ஒடிபி பிளீஸ்! ஆன்லைன் பையர்ஸ், செல்லர்ஸ் அண்ட் கிக் வொர்க்கர்ஸ்' ('OTP Please! Online Buyers, Sellers and Gig Workers') என்ற புத்தகத்தின் ஆசிரியருமான வந்தனா வாசுதேவன்.

இருப்பினும், முழுநேரமாக உழைத்த போதிலும், இந்தச் சுதந்திரமான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

"அவர்கள் அதிகாரபூர்வமாக 'சுதந்திரமான ஒப்பந்ததாரர்கள்' என்று வகைப்படுத்தப்பட்டாலும், பிழைப்புக்காக அவர்கள் முழுக்க முழுக்க அந்தந்த நிறுவனங்களின் அல்காரிதங்களையே சார்ந்துள்ளனர்."

திங்கள் கிழமையன்று, பல தொழிற்சங்கங்கள் இந்த 10 நிமிட சேவையை நீக்கும் முடிவை வரவேற்றன.

"கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மிகவும் தேவையான நடவடிக்கை," என்று இந்திய செயலி அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ஷேக் சலாவுதீன் தெரிவித்தார்.

இருப்பினும், கடுமையான காலக்கெடு அதிகாரபூர்வமாக விதிக்கப்படாவிட்டாலும், தொழிலாளர்கள் இன்னும் அழுத்தத்தை உணர்வார்கள் என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.

"வேகம் என்பது இந்த அமைப்பிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது," என்று கூறிய வாசுதேவன், விதிகள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும், தாங்கள் எவ்வளவு வேகமாக வேலை செய்கிறோம் என்பதும், வாடிக்கையாளர் மதிப்பீடுகளும் தங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும் என்பதைத் தொழிலாளர்கள் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.

டெலிவரி தொழிலாளர்களும் கலவையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், இது உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வருமா என்று மற்றவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சத்வீர் (அவரது முதல் பெயர் மட்டுமே) பிடிஐ செய்தி முகமையிடம் கூறுகையில், முன்னரும் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும் பலனில்லை என்றார். 10 நிமிட காலக்கெடுவை நீக்குவது போக்குவரத்து நெரிசல் காலங்களில் உதவும், ஆனால் தொழிலாளர்கள் இன்னும் சிறந்த ஊதியம் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளையே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆர்டருக்கும் கிடைக்கும் குறைவான வருமானம் என்ற சிக்கலை, காலக்கெடுவை நீக்குவதால் மட்டுமே தீர்த்துவிட முடியாது என்று கூறுகிறார் அகிலேஷ் குமார்.

இருப்பினும், இந்த மாற்றம் சில அழுத்தங்களைக் குறைக்கலாம் என்று சில ஊழியர்கள் கருதுகின்றனர். இது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று மகேஷ் குமார் கூறிய வேளையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் புகார்கள் குறித்த பயத்தை இது போக்கக்கூடும் என்று ராகேஷ் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு