வரி குறைப்பு, மானியம்: இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் புதிய தொழில் முதலீடுகளை செய்யாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பதவி, பிபிசி செய்திகள், மும்பை
இந்தியாவின் தனியார் நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் முதலீடு செய்ய வைக்கும் காரணிகள் என்ன?
இது பல ஆண்டுகளாக கொள்கை வகுப்பாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு கேள்வி ஆகும். 2007 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வந்தாலும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் முதலீட்டின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது.
"நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தனியார் முதலீடுகளின் விகிதம் சற்று அதிகரித்தது, ஆனால் ஒரு முன்னணி மதிப்பீட்டு நிறுவனத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் துறையின் முதலீட்டு பங்கு மீண்டும் கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவான 33 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதலீடுகள் சற்று குறைந்துள்ளன, மறுபுறம் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் முதலீடுகள் அதைவிட மிக அதிகமாகக் குறைந்துள்ளன என்று இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 4,500 நிறுவனங்கள் மற்றும் பட்டியலிடப்படாத 8,000 நிறுவனங்கள் பற்றிய ஐக்ரா (Icra) நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
பல ஆண்டுகளாக, பல பொருளாதார வல்லுநர்கள் தனியார் முதலீடுகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை குறித்து இதே போன்ற கவலைகளை எழுப்பி வருகின்றனர்.
வங்கித் துறையில் செல்வாக்கு மிக்க நபரான உதய் கோடக், சமீபத்தில் இந்தியாவின் மங்கி வரும் தனியார் முதலீடுகள் குறித்து கவலை தெரிவித்த பலரில் ஒருவர். ஏற்கனவே நிறுவனங்களை மரபுரிமையாக பெற்ற இளம் வணிக உரிமையாளர்கள், தற்போதைய சொத்துகளை நிர்வகித்துக் கொண்டு இருப்பது மட்டும் இருக்காமல், புதிய வணிகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"முதலீட்டு ஆலோசனை நிறுவனமான வேல்யூ ரிசர்ச் (Value Research) நிறுவனத்தின் தரவுகள், இந்திய நிதி சாராத வணிகங்கள் தங்கள் மொத்த சொத்துக்களில் 11% மதிப்புள்ள பணத்தை வைத்திருப்பதாகக் காட்டுகின்றன, இது நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்வதில் பணத்தைச் செலவிடவில்லை என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது.
அப்படியானால் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் அவ்வாறு செய்கின்றன?
இந்திய நகரங்களில் மக்கள் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளது, ஏற்றுமதி தேவை குறைந்துள்ளது மற்றும் சீனாவில் இருந்து மலிவான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த காரணங்களால் இந்திய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று ஐக்ரா நிறுவனத்தின் அதிகாரி கே. ரவிச்சந்திரன் கூறினார்.
ஆனால் உடனடி காரணங்களைத் தாண்டி, 'உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அதிக உற்பத்தி திறன்' காரணமாக தனியார் நிறுவங்களின் முதலீடு குறைவாக உள்ளது என்று இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டியது.

பட மூலாதாரம், Getty Images
தனியார் முதலீடுகள் குறைவது இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தொழிற்சாலைகள், இயந்திரங்கள் அல்லது கட்டுமானம் போன்ற சொத்துகளில் நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள், அதாவது மொத்த நிலையான மூலதன உருவாக்கம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30% பங்களிக்கிறது. தனிநபர் நுகர்வு பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்குகிறது, அதற்கு அடுத்தபடியாக இந்த முதலீடுகள்தான் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் 9.2% ஆக இருந்தது. மக்களின் நுகர்வு குறைந்துவிட்டதால், இந்த ஆண்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது.
ஏற்றுமதி உட்பட வளர்ச்சியின் முக்கிய காரணிகளும் குறைந்து வருவதாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு பொருளாதார ரீதியாக உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை அதிகப்படுத்துவதாலும், இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி இலக்குகளை அடைய தனியார் முதலீட்டைத் தூண்டுவது அடிப்படையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2047 ஆம் ஆண்டிற்குள் உயர் வருவாய் நாடு என்ற தனது இலக்கை அடைய இந்திய பொருளாதாரம் அடுத்த 22 ஆண்டுகளில் சராசரியாக 7.8% என்ற விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டும்.
இதற்கு முக்கியமாக, தனியார் மற்றும் பொது முதலீட்டை தற்போதுள்ள 33 சதவீதத்தில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 40% ஆக உயர்த்துவதாக உலக வங்கி மதிப்பிடுகிறது.
இந்திய அரசாங்கம், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அதிக செலவு செய்துள்ளது. மேலும், கார்பரேட் வரி விகிதங்களை 30% லிருந்து 22% ஆகக் குறைத்ததுடன், உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி தொடர்பான மானியமான பில்லியன்கணக்கான டாலர்களை வழங்கியது. வங்கிகளில் கடன் கிடைப்பதில் இருந்த தடைகளை நீக்கி, 2003 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை பாதியாகக் குறைந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இவை எதுவும் இந்தியாவில் தனியார் நிறுவனங்களை அதன் முதலீடுகளை அதிகரிக்கத் தூண்டவில்லை.
ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் சஜ்ஜித் சினோயின் கூற்றுப்படி, உற்பத்தி திறனை அதிகரிப்பதை நியாயப்படுத்த பொருளாதாரத்தில் தேவை இல்லாததுதான் பெரிய பிரச்னை என்றார்.
கோவிட் பேரிடருக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் முழுமையாக மீளவில்லை. நுகர்வோர் வர்க்கம் போதுமான வேகத்தில் விரிவடையவில்லை. இதனால், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை பாதிக்கப்பட்டுள்ளது, ஊதியங்களில் வீழ்ச்சி ஏற்பட்டதால் செலவிடும் திறன் குறைந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு நிறுவனங்களின் லாபம் 15 ஆண்டு உயர்வை எட்டியுள்ளது.
"நிறுவனங்கள் நிதி ரீதியாக வலுவாக உள்ளன என்பதற்காக, அவை தானாகவே முன்வந்து முதலீடு செய்யும் என்று அர்த்தமல்ல. முதலீட்டில் இருந்து நல்ல வருமானத்தை எதிர்பார்த்தால் மட்டுமே நிறுவனங்கள் முதலீடு செய்யும்," என்று சஜ்ஜித் சினோய் இந்த ஆண்டு மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் ஏன் முதலீடு செய்வதில்லை?
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PMEAC) முன்னாள் உறுப்பினரான ரத்தின் ராய், தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதை தடுக்கும் மற்ற ஆழமான கட்டமைப்பு சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறார்
புதிய தேவையை உருவாக்கும் பொருட்களின் உற்பத்தியில் ஆர்வம் தொழில்முனைவோருக்கு இல்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கட்டுமானத்துறை. நகர்ப்புறங்களில் விற்கப்படாத வீடுகள் இருக்கும்போது, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களுக்குச் சென்று புதிய சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள முடியாத திறனற்ற நிலை கட்டுமான நிறுவனங்களிடையே உள்ளது," என்று ரத்தின் ராய் பிபிசியிடம் கூறினார்.
தொழில் வாரிசுகள் புதிய வணிகங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டாமல், ஏற்கனவே இருக்கும் சொத்துகளை நிர்வகிப்பவர்களாக மாறும் தற்போதைய வளர்ந்து வரும் போக்கு குறித்த கோடக்கின் கருத்துகளுடன் தானும் உடன்படுவதாக அவர் கூறினார்.
"கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், பணம் சம்பாதிக்க வணிகம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை வணிக நிறுவனங்கள் புரிந்துகொண்டன. புதிய தொழிற்சாலைகள் அல்லது வணிகங்களை உருவாக்காமல், வெறுமனே முதலீடு செய்து அதை பல மடங்காக பெருக்க முடியும். இந்த முதலீடுகள் உள்நாட்டு பங்குச் சந்தையில் மட்டும் நடக்கவில்லை. இந்தியாவிலிருந்து அதிக பணம் வெளியேறி, வெளிநாடுகளில் அதிக லாபம் தரும் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடிச் செல்கிறது", என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால், நிலைமை தலைகீழாக மாறக்கூடும் என்று ஐக்ரா தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட 12 பில்லியன் டாலர் வருமான வரி நிவாரணம் மற்றும் வட்டி விகித குறைப்புகள் ஆகியவை 'உள்நாட்டு நுகர்வு தேவையை ஆதரிப்பதற்கு சாதகமாக இருக்கும்' என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் மத்திய வங்கியும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறுகிறது, இருப்பினும் அந்த விருப்பம் எவ்வளவு உண்மையான பணமாக முதலீடு செய்யப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகளாவிய வர்த்தக வரிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் எதிர்பார்க்கப்படும் முதலீட்டு அதிகரிப்பை தாமதப்படுத்தக் கூடும் என்று ஐக்ரா தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












