போப் இறுதிச்சடங்கில் சந்தித்துக் கொண்ட உலகத்தலைவர்கள் - 4 லட்சம் பேர் பங்கேற்றதாக வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.

கடந்த 3 தினங்களாக செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் போப்பின் உடல் வைக்கப்பெட்டிருந்த சவப்பெட்டி அகற்றப்பட்டு, நுழைவுவாயிலுக்கு வெளியே உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது

அதன் வெளியே நடந்த இறுதி ஊர்வலத்தில், அரசு தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இறுதி ஊர்வலத்தில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்றதாக வாடிகன் நிர்வாகம் கூறியுள்ளது.

இறுதி ஊர்வலம் முடிந்தபிறகு போப்பின் உடல் புனித மரியா பேராலயத்துக்குக் (Santa Maria Maggiore) கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்றது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்கள் குழுவின் டீன் கியோவனி படிஸ்டா ரே இந்த சடங்குகளை வழிநடத்தினார்.

சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த நடைமுறை, போப்பின் விருப்பப்படி எளிமையான முறையில் நடைபெற்றது.

சான்டா மரியா பசிலிகா தேவாலயத்தில் போப்பிரான்சிஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக வாடிகன் நிர்வாகம் உறுதி செய்தது. இந்த தேவாலயம் வாடிகன் எல்லைக்கு வெளியே ரோம் நகரின் மையப்பகுதியில் உள்ளது.

வாடிகன் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் புனித மேரி மேஜர் பசிலிக்காவின் பக்கவாட்டுப் பகுதியில், பவுலின் சிற்றாலயத்திற்கும், அவரது அன்புக்குரிய 'சாலஸ் பாப்புலி ரோமானி' அன்னையின் சின்னம் அமைந்துள்ள இடத்திற்கும், ஸ்ஃபோர்ஸா தேவாலயத்திற்கும் இடையில், போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

போப்பின் அடக்க ஈமக்கிரியைகளுக்கு முன்னதாக நான்கு சங்கீதங்கள் பாடப்பட்டு, இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது.

நிறைவாக போப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கான சான்றளிக்கும் சட்டம் வாசிக்கப்பட்டது.

தனியாக ஆலோசனை நடத்திய டிரம்ப் - ஸெலன்ஸ்கி

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஆலோசனை செய்தனர்.

இந்த சந்திப்பு குறித்து தெரிவித்த வெள்ளை மாளிகை, "இது பயனுள்ள பேச்சுவார்த்தையாக அமைந்தது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, "அடையாள சந்திப்பான இது வரலாற்றில் முக்கியமான சந்திப்பாக மாறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு முன், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் ஆகியோரும் சந்தித்துக் கொண்டனர்.

வார்த்தை சண்டையில் முடிந்த முந்தைய சந்திப்பு

ரஷ்யா - யுக்ரேன் போர் குறித்த கேள்வியில் இருவருக்கும் இடையேயான விவாதம் சூடுபிடித்தது.

ஸெலன்ஸ்கிக்கும் டிரம்புக்கும் இடையிலான இந்த சந்திப்பு மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவருக்கும் இடையே வெடித்த வார்த்தைப் போரினால், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இரு அதிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்னர் ராஜ்ஜிய ரீதியான உறவுகள் தொடர்ந்தது. போர் நிறுத்தத்திற்கும் யுக்ரேன் முன்வந்தது. எனினும் இதன் பின்னதாக அதிபர்கள் மட்டத்திலான முதல் பேச்சுவார்த்தை இதுதான்.

திரண்ட மக்கள்

போப் பிரான்சிஸின் உடல் கடந்த மூன்று தினங்களாக செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில் வைக்கப்பட்டது. இங்கு, சுமார் 2,50,000க்கும் மேற்பட்டோர், போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

ஆனால், போப் பிரான்சிஸ் உடலுக்கு அருகே சென்று அஞ்சலி செலுத்துவது, வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. எனினும், கூடுமானவரை அருகிருந்து அவரின் உடலை காண விரும்பி பலரும் அங்கு வருகை தந்தனர்.

சமூகத்தில் பெரும் செல்வாக்கு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் விளிம்புநிலையில் உள்ள மக்களும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வருகை தந்தனர். மேலும், சிறைவாசிகள் சிலரும் போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலத்தைக் காண வந்திருந்தனர்.

"காலை 4.15 மணிக்கு இங்கு நாங்கள் வந்தோம்," என நியூயார்க்கை சேர்ந்த கைட்லின் கூறுகிறார், இவர் தற்போது ரோமில் வசித்துவருகிறார்.

"போப்பின் பாரம்பரியம் மற்றும் அவர் செய்த அனைத்துக்காகவும் அவரை பெருமைப்படுத்துவதற்காக, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அனுபவம் இது" என அவர் கூறினார்.

அயர்லாந்தில் உள்ள வாட்டர்ஃபோர்டை சேர்ந்த கேத்தரீன், தான் "அனைத்துவித வானிலைகளுக்கும் தயாராக இருப்பதாக" தெரிவித்தார். படுக்கை விரிப்புகள், சன்க்ரீம், ரெயின்கோட் என பலவற்றையும் அவர் எடுத்து வந்திருந்தார்.

உலகத் தலைவர்கள் வருகை

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக உலகத் தலைவர்கள் பலரும் வாடிகன் சென்றிருந்தனர். இந்தியாவின் சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை ரோம் சென்றடைந்தார், அவர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் ரோமுக்கு சென்றனர். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற பின், அவர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அதேபோன்று, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடனும் ரோமுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, அவருடைய மனைவி ஒலேனா ஸெலென்ஸ்கா ஆகியோரும் ரோமுக்குசென்றனர்.

பிரெஞ்சு அகரவரிசைப்படி தங்கள் நாட்டின் முதல் எழுத்துக்கு ஏற்ப, சர்வதேச தலைவர்களுக்கு அங்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் 170 நாடுகளின் அரசுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்ததாக வாடிகன் கூறியது.

எளிய முறையில் இறுதிச் சடங்கு

போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலம், வழக்கமானதாக அல்லாமல் அவர் முன்பே கேட்டுக்கொண்டபடி எளிமையான முறையிலேயே நடைபெற்றது. என்றாலும், பல சடங்குகள் நிரம்பியதாகவே இந்த இறுதிச்சடங்கு இருந்தது.

வழக்கமாக போப்பின் உடல்கள் இறுதிச் சடங்குக்கு முந்தைய தினம், சைப்ரஸ், ஓக் மரங்கள் மற்றும் ஈயத்தாலான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மூன்று சவப்பெட்டிகளில் வைக்கப்படும். இதில் சைப்ரஸ் சவப்பெட்டி பணிவையும் ஓக் சவப்பெட்டி மரியாதையையும் குறிக்கிறது. ஈய சவப்பெட்டி உடல் சேதமாகாமல் பாதுகாக்கிறது.

ஆனால், போப் பிரான்சிஸ் தன்னுடைய உடல், மரத்தாலான, துத்தம் கொண்டு உள்வேலைப்பாடுகள் செய்யப்பட்ட எளிமையான சவப்பெட்டியில் வைக்கப்பட வேண்டும் என கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்கமாக செயின்ட் பீட்டர் பசிலிகா ஆலயத்தில் அடக்கம் செய்யப்படாமல், செயின்ட் மரியா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என, போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் நூற்றாண்டு வழக்கம் மாற்றப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு