சீமான் - வருண்குமார் ஐபிஎஸ் மோதலின் தொடக்கப் புள்ளி என்ன? முழு பின்னணி
ஒரு அரசியல் கட்சியின் தலைவர், ஒரு ஐபிஎஸ் அதிகாரி இடையேயான இந்த மோதல் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆகியுள்ளது.
இது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் ஐபிஎஸ் இடையேயான மோதல் விவகாரம். இந்த விஷயத்தின் தொடக்க புள்ளி என்ன? தற்போதைய சர்ச்சைகள் என்ன? சற்று விரிவாக இந்த காணொளியில் பார்ப்போம்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் பிரசாரம் செய்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவர் இழிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி சைபர் கிரைம் போலீசார், தென்காசியில் தங்கியிருந்த துரைமுருகனை கைது செய்தனர்.
அடுத்து வந்த நாட்களில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குறித்து சீமான் பேசியதாக சில தனிப்பட்ட ஆடியோ பதிவுகள் இணையதளத்தில் வெளியானது. இதன் பின்னணியில் அப்போதைய திருச்சி எஸ்பியான வருண்குமார் உள்ளதாக சீமான் குற்றம் சுமத்தினார்.
சாட்டை துரைமுருகனை கைது செய்தபோது, அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த ஆடியோக்களை பொதுவெளியில் பரப்பியதாக சீமான் கூறியிருந்தார். இதுதொடர்பாக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "ஓர் அதிகாரியை எஸ்.பியாக வைத்திருக்கிறீர்கள். அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். எங்கள் மீது அவருக்கு வெறுப்பு உள்ளது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், "துரைமுருகன் மீது வழக்குப் போட்டது குறித்துக் கேட்டால் மேலிடம் அழுத்தம் என்கிறார். இன்னும் எத்தனை நாள் மேலிட ஆதரவில் இருப்பீர்கள்?" என வருண்குமாரை நோக்கி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சில சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு சீமான் விமர்சித்தார்)
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் சீமான் பேசிய வீடியோவை இணைத்து அதில், பாரதியாரின் சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை வருண்குமார் பதிவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் சீமான் விமர்சித்தார்.
இந்த விவகாரத்தில் தனது வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை சீமானுக்கு வருண்குமார் அனுப்பினார். அதை தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில், 'சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பொதுவெளியில் சீமான் பேசும் பேச்சுக்களை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்' எனப் பதிவிட்டிருந்தார்.
வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் பிபிசி தமிழிடம் பேசிய சீமான், " எனக்கு எந்தவகையிலும் அவர் எதிரி அல்ல. ஐ.பி.எஸ்., படித்தால் அதற்குரிய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தி.மு.க தலைமையிடம் நற்பெயரை பெறும் நோக்கில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. "துரைமுருகனை கைது செய்த இரண்டு முறையும் செல்போன்களை பறித்துள்ளனர். அந்த செல்போனில் உள்ள உரையாடல்களை எடுப்பதுதான் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியின் வேலையா? "என்னுடைய கட்சிக்காரர்களிடம் நான் பேசுவதில் இவருக்கு என்ன பிரச்னை? துரைமுருகனின் செல்போனில் இருந்து ஆடியோவை எடுத்து வெளியில் கசியவிட்டதே வருண்குமார் தான்" என குற்றஞ்சாட்டினார்.
வழக்கறிஞர் நோட்டீஸை வருண்குமார் அனுப்பியது குறித்து கேட்டபோது, அதை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க உள்ளதாகவும் பிபிசி தமிழிடம் சீமான் தெரிவித்தார்.
இதன்பிறகு, சமூக வலைதளங்களில் வருண்குமாருக்கு எதிராக பதிவிடத் தூண்டியதாக சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 22 பேர் மீது திருச்சி தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சண்டிகரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
டிசம்பர் முதல் வாரத்தில் சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி மீது வெளிப்படையான விமர்சனத்தை வருண்குமார் முன்வைத்தார்.
நாம் தமிழர் கட்சியை கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம் என்றுபேசிய வருண்குமார், அக்கட்சியினரின் சைபர் குற்றங்களால் தானும் தன் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த சீமான், இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியை பிரிவினைவாத இயக்கம் என கூறுவதா என எதிர்வினையாற்றினார்.

பட மூலாதாரம், Seeman/VarunkumarIPS/X
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



