You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புஷ்பா 2: படம் எப்படி இருக்கிறது? அல்லு அர்ஜூன் ரசிகர்களை கவர்ந்தாரா? - ஊடக விமர்சனம்
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் இன்று (டிசம்பர் 5) தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் ஒரு பான்-இந்திய திரைப்படமாக வெளியானது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது.
டிரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியது. இதனால் டிக்கெட் முன்பதிவில் மட்டும் புஷ்பா 2 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது.
- புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?
- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
- நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் - தனுஷ் தரப்பு கூறும் காரணம் என்ன?
- நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் பெருவெற்றி பெற்ற 'ஸ்க்விட் கேம்' தொடரின் இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கிறது?
படத்தின் கதை என்ன?
செம்மரக் கடத்தலில் ஈடுபடும் கும்பலில், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்), எப்படி அந்த ஒட்டுமொத்த குழுவின் தலைவராக மாறுகிறார் என்பதே புஷ்பா முதல் பாகத்தின் கதை.
இரண்டாம் பாகத்தில், அவர் எவ்வாறு செம்மரக்கடத்தல் கும்பலை விரிவுபடுத்துகிறார் என்பதும் காலவல்துறை அதிகாரியான பன்வர் சிங் ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்) மற்றும் பிற போட்டியாளர்களுக்கு எதிராக புஷ்பராஜ் எவ்வாறு செயல்படுகிறார் என்பதே கதை.
'மாஸ் கமர்ஷியல் படம்'
புஷ்பா 2 படத்தை சமூக கருத்துகள், ஆக்ஷன், உணர்ச்சிபூர்வமான காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் உள்ளடக்கிய ஒரு கமர்ஷியல் படமாக இயக்குநர் சுகுமார் உருவாக்கியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.
"படத்தின் நீளம் 3 மணிநேரம் 20 நிமிடங்களாக இருந்தாலும், இந்தப் படத்தின் சிறப்பான திரைக்கதை ரசிகர்களை சலிப்புத்தட்ட வைக்கவில்லை” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
“புஷ்பா 2வின் முதல் பாதியில் புஷ்பராஜின் வளர்ச்சி, அவரது அடுத்த நோக்கம், அதை நோக்கிய ஓட்டம் என்று படம் சீராக நகர்வதாகவும், இடைவேளையின்போது வரும் காட்சிகள் சிறந்த கமர்ஷியல் அம்சங்களை உள்ளடக்கி இருப்பதால் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்குப் பஞ்சமில்லை” எனவும் தினமணி கூறியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பு எப்படி?
“இந்தப் படத்தில் புஷ்பராஜின் கதாபாத்திரம் மிகவும் ஆழமாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அல்லு அர்ஜுனின் நடிப்பு செழுமை சேர்த்துள்ளது” என இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
“அல்லு அர்ஜூன் இந்தப் படத்தின் மூலம் அவரது திரைத்துறை பயணத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். மேலும் அவரது நடனம் ரசிகர்களை கவரும் வகையும் இருந்தது. படத்தொகுப்பு, ஒளிப்பதிவு ஆகியவை அவரது நடிப்பின் தாக்கத்தை அதிகரித்து, புஷ்பராஜ் கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளது” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தின்படி, பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் ரசிக்க வைக்கிறார். "அல்லு அர்ஜுனுக்கு எதிராக ஒரு வலிமையான எதிரியாக, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் நடித்துள்ளார்."
'கதையுடன் ஒட்டாத காட்சிகள்'
படத்தில் பல காட்சிகள் திணிக்கப்பட்டதாகத் தோன்றுவதாகவும், அதனால் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.
படத்தில் உள்ள கேப்களை நிரப்ப அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹத் ஃபாசில் கதாபத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்கள் படம் முழுவதும் நிறைந்து இருப்பதாகவும் அந்த விமர்சனம் கூறுகிறது.
“ராஷ்மிகா, அல்லு அர்ஜூன் இடையிலான காதல் காட்சிகள் மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் ராஷ்மிகாவுக்கு சில காட்சிகளே உள்ளன. அதில் சிலவற்றில் சிறப்பாகவும், சில காட்சிகளில் கார்ட்டூன் கதாபாத்திரம் போலவும் அவரது நடிப்பு உள்ளது,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.
மேலும், "பான் இந்தியன் படத்தை உலக அளவில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுகுமார் ஜப்பான் துறைமுகத்தில் ஒரு சண்டைக் காட்சி மற்றும் துபாயிலும் இலங்கையிலும் படத்தின் கதை நடைபெறும் வகையில் இயக்கியுள்ளார்," எனக் குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் சூசேகி, கிஸ்ஸிகி போன்ற பாடல்கள் "படத்திற்குப் பக்கபலமாக இருக்கின்றன. காடுகளில் வரும் ஒரு சில காட்சிகளில் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது”, என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
மேலும் "இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்திற்கான குறிப்பு வெளியானது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாகவும், படத்தின் கதை இழுப்பறியாக இருந்தாலும் திரைக்கதை, அற்புதமான நடிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் ஆகியவை படத்தின் நீளம் தொடர்பான குறையை மறக்கச் செய்வதாகவும்" டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)