இந்தியா-கனடா உறவு மோசமடைந்தது எப்படி? ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் என்ன?

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மோசமாகி வருகிறது.

கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்வதாக இந்தியா திங்களன்று கூறியது. கூடவே ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா நாட்டிலிருந்து வெளியேற்றியது.

ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில், தனது அரசு ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறினார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் இந்திய அரசு போதுமான ஒத்துழைப்பை அளிக்காததே இதற்கு காரணம் என பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையில் இணையுமாறும், திசை திருப்பும் அறிக்கைகளை நிறுத்துமாறும் ட்ரூடோ கடுமையான தொனியில் இந்தியாவை கேட்டுக் கொண்டார்.

ட்ரூடோ முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

வன்முறை தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஏஜெண்டுள் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றவியல் விசாரணையில் ஒத்துழைக்க இந்தியா மறுத்துவிட்டதாக கனேடியப் பிரதமர் கூறுகிறார்.

"கனேடிய மண்ணில் கனேடியர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை ஆதரிக்கும் செயலில் ஈடுபடலாம் என்று எண்ணி இந்திய அரசு ஒரு அடிப்படைத் தவறைச் செய்தது," என்று அவர் கூறினார்.

கனேடிய காவல்துறையான ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸ் அமைப்பின் (RCMP) தலைவர் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

கனடாவில் கொலைகள் உட்பட ‘பெரிய அளவிலான வன்முறைகளில்’ இந்திய அரசு பங்கு வகித்துள்ளது மற்றும் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று RCMP தலைவர் மைக் டுஹெம் திங்களன்று, குற்றம் சாட்டினார்.

கனேடிய சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கனடா இதுவரை என்ன சொன்னது?

  • கனேடிய மண்ணில் நடக்கும் வன்முறையைக் கண்டித்த ட்ரூடோ, அது கொலை, மிரட்டி பணம் பறித்தல் அல்லது வேறு எந்த வன்முறைச் செயலாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறினார்.
  • "எந்தவொரு நாடும், குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் ஜனநாயகம் அதன் இறையாண்மையின் மீதான இந்த அடிப்படை மீறலை ஏற்க முடியாது," என்று அவர் கூறினார்.
  • "இந்திய தூதரக அதிகாரிகள் கனேடிய குடிமக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு RCMP இன்று முடிவு செய்தது" என்று ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
  • "இந்த தகவல் குற்றவியல் அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டது. இது 'மிரட்டி பணம் பறித்தல் முதல் கொலை வரையிலான வன்முறை நடவடிக்கைகளுக்கு' வழிவகுத்தது,” என்றார் அவர்.
  • ஆயினும் எந்தவொரு தூதரக அதிகாரி அல்லது தூதரக பணியாளர்களின் பங்கு பற்றி ட்ரூடோ எந்த தகவலையும் வழங்கவில்லை. மேலும் இந்த விஷயங்கள் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
  • சட்ட விசாரணை முடிவடைந்ததும் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
  • செய்தியாளர் சந்திப்புடன் கூடவே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
  • "RCMP மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய அரசு மற்றும் இந்திய சட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்தனர்,” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ”அதனால்தான் இந்த வாரம் கனேடிய அதிகாரிகள் முன்னெப்போதும் நடந்திராத நடவடிக்கையை எடுத்தனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
  • “ஆறு இந்திய அரசு ஏஜெண்டுகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான RCMP யின் ஆதாரங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்திய அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்த முயற்சி செய்யப்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. ஒத்துழைப்பதில்லை என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசு ஒத்துழைக்க மறுத்து வருவதால் எனது வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலிக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது.” என்றார் அவர்.
  • “இன்று (திங்கட்கிழமை) இந்த ஆறு பேரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் இனி கனடாவில் தூதாண்மை அதிகாரிகளாக பணியாற்ற முடியாது அல்லது எக்காரணம் கொண்டும் மீண்டும் கனடாவிற்குள் நுழைய முடியாது. RCMP வழங்கிய ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்," என்று ட்ரூடோ கூறியுள்ளார்.
  • விசாரணையில் ஒத்துழைக்குமாறு கனேடிய பிரதமர் இந்திய அரசிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
  • ட்ரூடோ தனது அறிக்கையில் இந்திய அரசு விசாரணையில் சேர வேண்டும், தனது பயனற்ற மற்றும் திசை திருப்பும் அறிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கடுமையான தொனியில் கூறியுள்ளார்.

இந்தியா இதுவரை என்ன சொன்னது?

  • தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் கனடாவில் இருக்கும் மற்ற அதிகாரிகளை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளதாக இந்தியா திங்களன்று அறிவித்தது. இதனுடன், ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும் இந்தியா முடிவு செய்துள்ளது.
  • இந்த கனேடிய தூதரக அதிகாரிகள் பின்வருமாறு- ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் (தற்காலிக தூதர்), பேட்ரிக் ஹெபர்ட் (துணை தூதர்), மேரி கேத்தரின் ஜாலி (முதன்மை செயலர்), இயன் ராஸ் டேவிட் ட்ரைட்ஸ் (முதன்மை செயலர்), ஆடம் ஜேம்ஸ் சூப்கா (முதன்மை செயலர்), பெளலா ஓர்ஜூலா ( முதன்மை செயலர்).
  • அக்டோபர் 19 அன்று இரவு 11:59 மணிக்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
  • கனடாவின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா, டெல்லியில் உள்ள கனேடிய தூதரகத்தின் மூத்த தூதரக அதிகாரியை அழைத்துப் பேசியது. கனடாவில் உள்ள இந்திய ஹைகமிஷன் மற்றும் இதர தூதரக அதிகாரிகளை ஆதாரமற்ற முறையில் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • "ட்ரூடோ அரசின் அணுகுமுறையால் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. தற்போதைய அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு கனடாவில் உள்ள தூதர் உட்பட இதர தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ட்ரூடோ அரசு ஆதரிக்கும் விதத்திற்கு எதிராக பதிலளிக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று கனடாவிடம் தெரிவித்துள்ளோம்,” என்று திங்கள்கிழமை மாலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
  • நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரின் பெயர் குறிப்பிடப்பட்டதற்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் தற்போது அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியது.
  • “கனடாவிலிருந்து எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தூதரக தகவல் கிடைத்தது. கனடாவில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளின் தொடர்பு அம்பலமாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு கடுமையாக மறுக்கிறது. கனடாவின் ட்ரூடோ அரசு வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக இதைச் செய்கிறது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உறவுகள் எவ்வாறு மோசமடைந்தன?

  • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூன் 18 ஆம் தேதி குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார்.
  • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜலந்தரின் பார் சிங் புரா கிராமத்தை சேர்ந்தவர். காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக நிஜ்ஜார் இருந்தார் மற்றும் காலிஸ்தான் புலிப் படையின் உறுப்பினர்களுக்கு செயல்பாடுகள், நெட்வொர்க்கிங், பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டார் என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.
  • நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருவதாக செப்டம்பர் 18 ஆம் தேதி கனேடிய நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
  • 2023 அக்டோபரில் இந்தியா 40 கனேடிய தூதரக பணியாளர்களின் சிறப்புரிமையை (Diplomatic immunity) ரத்து செய்தது. இதன் காரணமாக கனேடிய தூதரகத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • சீக்கிய பிரிவினைவாதிகளிடம் கனடா காட்டும் நெகிழ்வுத்தன்மை இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும் நல்லது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது.
  • 2024 மே மாத முதல் வாரத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையைப் பற்றியும் அதனுடன் இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு பற்றியும் மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டார். இந்தியா இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இந்தியா - கனடா உறவு எதை நோக்கிச் செல்கிறது?

  • ஆறு கனேடிய தூதரக பணியாளர்களை வெளியேற்றிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் தொடரும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது. இவை என்ன மாதிரியான நடவடிக்கைகள் என்பதை அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை.
  • 2025 அக்டோபரில் கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வியடைவார் என்றும் பின்னர் புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர் என்று வெளிவிவகார நிபுணர் ஆனந்த் சஹாய் குறிப்பிட்டார்.
  • தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக எழுத்தாளரும் வெளி விவகார ஆய்வாளருமான பிரம்ம செல்லானி கருதுகிறார். ”கனடா தன் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது,” என்று செல்லானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 1985-ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பை அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த சம்பவத்தில் 331 பேர் உயிரிழந்தனர்.
  • கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையக் கூடும் என்று கனடாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கும் ஸ்டெபானி கார்வின், அல்-ஜசீரா தொலைகாட்சி சேனலிடம் கூறினார். இதன் காரணமாக கனடாவும் கடினமான சூழ்நிலையில் சிக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
  • திங்களன்று கனேடிய அரசு வெளியிட்ட அறிவிப்புகளை கனடா உலக சீக்கிய அமைப்பு வரவேற்றது.
  • கனடாவில் இந்தியாவின் தலையீடு இன்றுதான் உலகுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த அனுபவம் கடந்த நான்கு தசாப்த காலமாக தங்களுக்கு உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)