You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவன் கொலை - பாலியல் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.
போக்சோ குற்றங்களுக்கு யார் காரணம்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?
இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான நில அளவைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கருக்குப்பேட்டையைச் சேர்ந்த 5 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக அவர் அத்துமீற முயன்ற போது இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் சம்பவம் - என்ன நடந்தது?
மயக்கம் அடைந்த நிலையில் சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அவனது தாய் அழைத்துச் சென்றதாகவும், சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததை காவல்துறையின் கவனத்துக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். காவல் துறையினர் சிறுவனின் தாயிடம் விசாரித்த போதுதான், சிறுவனையும், அவனது 10 வயது சகோதரியையும் ராஜேஷ் அழைத்துச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.
சிறுவனின் சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜேஷ் தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தி சிறுவனை கடுமையாக தாக்கியது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
"சிறுவனின் தாய் சற்று அலட்சியமாக இருந்துவிட்டதுதான் இந்த கொலைக்கு காரணம். சிறுவனிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டது இது முதல்முறை அல்ல. முன்னரே இதுபோன்று சில முறை அவர் நடக்க முயன்றிருக்கிறார்." என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், காஞ்சி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் சங்கரநாராயணன்.
போக்சோ குற்றங்களுக்கு அதிகம் காரணமாக இருப்பது யார்?
காஞ்சிபுரம் சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் குழந்தைகள் நல ஆர்வலர் கன்யா.
தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிபிசி தமிழிடம் அவர் கூறினார். காஞ்சிபுரம் சம்பவத்தை சுட்டிக் காட்டிப் பேசிய கன்யா, "குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்களால் தான் அவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் உறவினர்களாகவோ, குடும்ப நண்பர்களாகவோ உள்ளனர். 'குட் டச்' 'பேட் டச்' குறித்து வகுப்பெடுக்க வந்த ஆலோசகரே கூட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது." என்றார்.
குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்துப் பேசிய கன்யா, தாங்கள் சொல்லும் விஷயத்தை பெற்றோர் அடிக்காமல் கேட்க வேண்டும் என குழந்தைகள் விரும்புவதாக கூறுகிறார்.
"நெருங்கிய உறவினர் யாராவது குழந்தைக்கு அடிக்கடி முத்தம் கொடுத்தால் அந்த முத்தம் எங்கே, எவ்வாறு கொடுத்தார் எனக் கேட்டால் தெளிவாக குழந்தைகள் கூறிவிடுவார்கள். குழந்தைகளுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்து பேச வைக்க வேண்டும். அதனை பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும். குழந்தைகள் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது" என்கிறார் கன்யா.
போக்சோ வழக்குகளை கையாள்வதில் நீடிக்கும் சிக்கல்
அதேநேரம், "போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பான சிக்கல்களை தமிழக அரசு களைய வேண்டும்" என்று குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு வலியுறுத்தியுள்ளார். .
"சிறார் நீதி சட்டத்தின்படி, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் நல காவல் அலுவலர் இருக்க வேண்டும். ஆனால், அவர் முழுநேர அலுவலராக நியமிக்கப்படுவதில்லை" எனவும் அவர் கூறுகிறார்.
காவல்நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள ஓர் அதிகாரி, இதை கூடுதல் பொறுப்பாக கவனிப்பதாகவும் குழந்தைகளுக்குத் தனி அலகு (Unit) ஏற்படுத்தாத வரையில் பிரச்னை தீர வாய்ப்பில்லை எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
போக்சோ சட்டத்தைக் கண்காணிக்கும் மிக முக்கியமான தலைமை அமைப்பாக உள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
"தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் முந்தைய ஆட்சியில் ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை தி.மு.க அரசு நீக்கிவிட்டது. அவர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டனர். இன்றளவும் அந்த தடை நீக்கப்படவில்லை" என்கிறார் தேவநேயன்.
அமைச்சர் கீதாஜீவன் பதில்
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், " குழந்தைகள் நல உரிமை ஆணையம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். தீர்ப்பு வந்துவிட்டால் குறுகிய காலத்தில் ஆணையத்தின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவோம்" என்றார்.
குழந்தை திருமணம் எங்காவது நடந்தால் மட்டுமே 1098 என்ற எண்ணுக்கு பலரும் போன் செய்வதாகக் கூறும் அமைச்சர் கீதா ஜீவன், "குழந்தைகள் தொடர்பான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இந்த எண்ணில் பேசலாம். இந்த எண்ணை தொடர்பு கொண்டு தனது தந்தை மீது ஒரு குழந்தை புகார் கொடுத்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" என்று தெரிவித்தார்.
போக்சோ சட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், மருத்துவ பரிசோதனை, விசாரணை என அனைத்தையும் விரைந்து முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கீதா ஜீவன் கூறினார்.
"மீண்டும் மீண்டும் வழக்கு என்ற பெயரில் அந்தக் குழந்தையைத் தொல்லை செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து காவல்துறையினருக்கு தொடர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன." என்றார் அமைச்சர் கீதா ஜீவன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)