'வில்லன்தான் ஆனால் ஹீரோ' - ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள்

ரகுவரன்

பட மூலாதாரம், Rohinimolleti/X

நடிகர் ரகுவரனுக்கு டிசம்பர் 11 அன்று 67வது பிறந்தநாள். 49வயதில் அவர் மறைந்தாலும் அவரின் தனித்துவமான நடிப்பும், வசீகர குரலும், ஒருவித ஸ்டைலான உடல்மொழியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிலைத்து நிற்கின்றன.

ரகுவரன் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் முத்திரை பதித்திருந்தாலும், அவர் வில்லனாகவே அதிகம் அறியப்படுகிறார்.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான பழைய படங்களில் வரும் வழக்கமான வில்லன்கள் போல் அவர் பறந்து, பறந்து அதிகம் சண்டை போட்டது இல்லை. 'நான் யார் தெரியுமா' போன்ற நீண்ட வசனங்களும் அவர் பேசியது இல்லை. ஹீரோக்களிடம் வேண்டுமென்ற வம்புக்கு சென்று அவரிடமிருந்து அடிவாங்கும் காட்சிகளிலும் ரகுவரன் அதிகம் நடித்தது இல்லை.

மாறாக, வில்லத்தனத்திலும் ஒருவித ஹீரோயிசத்தைக் காண்பித்தவர். குறிப்பாக, வசனங்களை பேசும் விதம், சிறு சிறு உடல் அசைவுகளால் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தபோது கூட அரங்கம் அதிர கைதட்டல் வாங்கியவர்.

ரகுவரன் வில்லனாக நடித்த பிரபல10 படங்கள் என்ன?

1. பாட்ஷா

ரகுவரன் எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும், அவர் பெயரை சொன்னால் சட்டென பலருக்கும் நினைவுக்கு வருவது மார்க் ஆண்டனியாக நடித்த பாட்ஷாதான். 'ஆண்டனி... மார்க் ஆண்டனி' என அவர் பேசும் வசனம் தலைமுறைகளை தாண்டி நிற்கிறது. ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல் ஆண்டனியையும் எளிதில் கடந்துவிட முடியாது.

பல ஆண்டுகளை கடந்தாலும் ரகுவரனின் குரல் பலரது காதுகளுக்குள் இன்றும் ஒலிக்கிறது. சமீபத்தில் பாட்ஷா ரீ ரிலீஸ் ஆனபோது கூட மார்க் ஆண்டனியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர்.

ரகுவரன். பாஷா

பட மூலாதாரம், X

2. முதல்வன்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் முதல்வராக நடித்து இருக்கிறார்கள். ஆனால், முதல்வனில் அரங்கநாதன் என்ற பழுத்த அரசியல்வாதியாக, முதல்வராக வரும் ரகுவரனுக்கு தனித்த இடம் உண்டு. அதிலும் அர்ஜூன் அவரை பேட்டி எடுக்கும் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்திருக்கும். 'முதல்வர் பதவின்னா சாதாரணமா' என்று அவர் காட்டும் கோபம், ஒருநாள் முதல்வராக அர்ஜூன் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ரகுவரனின் முகபாவனை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

3. இரணியன்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் முரளி நடித்த படம் இரணியன். தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதியில் வாழ்ந்த இரணியன் என்பவரை மையமாக வைத்து, புனையப்பட்ட கதை இது. அதில் கொடுமைக்கார பண்ணையாராக வருவார் ரகுவரன். 'ஆண்டே, ஆண்டே' என ஊர் மக்கள் அவரை பயம் கலந்த மரியாதையுடன் அழைப்பார்கள். அந்த விவசாய தொழிலாளர்களை, கூலிகளை கொடுமைப்படுத்துகிற, வெறுப்பை உமிழ்கிற பண்ணையாராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரகுவரன்.

4. காதலன்

ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் மல்லிகார்ஜுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரகுவரன். அதில் அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும், வழக்கமான தனது நடிப்பால் தனித்து தெரிவார். குறிப்பாக, கிளைமாக்ஸில் குண்டு வெடிப்பு காட்சி அவருடைய நடிப்பில் இன்றைக்கும் நினைவிலிருக்கும் காட்சியாக உள்ளது.

ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள்

பட மூலாதாரம், Super Good Films

5. புரியாத புதிர்

தன் மனைவி மீது சந்தேகித்து அவரை கொடுமைப்படுத்துபவராக இந்த படத்தில் வருவார் ரகுவரன். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ரகுமானுக்கு வில்லனாக ரகுவரன் வருவார். பெண்கள் மீது வெறுப்பு கொண்ட சக்ரவர்த்தியாக நடித்து இருப்பார். அவரின் 'ஐ நோ... ஐ நோ' என்ற பிரபலமான வசனம் இந்த படத்தில்தான் இடம் பிடித்தது. அந்த வசனத்தை பல வித்தியாசமான குரல்களில் பேசியிருப்பார்.

6. மக்கள் என் பக்கம்

வில்லனாக நடித்து வந்த சத்யராஜ் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடித்தார். அவருக்கு விசுவாசமான நபராக, ரமேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரகுவரன். 1987ல் கார்த்திக் ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் ரகுவரன் கதாபாத்திரம் படத்துக்கு பலமாக அமைந்தது.

முதல்வன் படத்தில் ரகுவரன்

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, முதல்வன் படத்தில் ரகுவரன்

7. பூவிழி வாசலிலே

பாசில் இயக்கிய இந்த படத்தில் வில்லனாக வரும் ரகுவரனுடைய தோற்றமே வித்தியாசமாக இருக்கும். கோட் அணிந்து, கையில் ஊன்றுகோலுடன் வருவார். அவருக்கு அதிக வசனங்கள் கிடையாது. ஆனால், கண் அசைவு, புருவ அசைவில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

8. அருணாசலம்

சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தில் கொஞ்சம் ஸ்டைலான வில்லனாக வந்தார். ரஜினிகாந்துடைய பணத்தை அபகரிக்க வேண்டும் என்ற பேராசை பிடித்த வில்லனாக நடித்திருப்பார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

9. ரட்சகன்

பிரவீன்காந்தி இயக்கிய இந்த படத்தில் ஒரு தொழிற்சாலையை கைப்பற்ற நினைக்கும், நாகர்ஜுனாவின் கோபத்தை துாண்டும் வில்லனாக வருவார். அவரின் கதாபாத்திரத்தின் பின்னணி, அவரின் ஆசை ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்தது.

10. முத்து

மீண்டும் ரஜினியுடன் ரகுவரன் இணைந்து நடித்த படம். ராஜசேகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினியை ஏமாற்றுகிற கதாபாத்திரம். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து இருப்பார்.

ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள்

பட மூலாதாரம், API

குணச்சித்திர கதாபாத்திரங்கள்

வில்லன் கதாபாத்திரங்கள் தவிர, குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். அதில் அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ரன், யாரடி நீ மோகினி ஆகியவை முக்கியமான படங்கள்.

மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து, அந்த காலத்தில் வில்லனாக பல படங்களில் நடித்திருந்த பொன்னம்பலம் கூறுகையில், 'நானும் அவரும் பல படங்களி்ல இணைந்து நடித்து இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு 10க்கும் அதிகமான படங்களில் நான் 'டூப்' போட்டு இருக்கிறேன். அப்போது என்னை உற்சாகப்படுத்துவார். 'அதிக ஊதியம் இல்லாமல் நல்லா வேலை செய்றீங்க ஜி, பின்னால் பெரிய ஆளாக வருவீங்க' என்று கட்டிப்பிடித்து சொல்வார். அவருக்கு கடவுள் பக்தி அதிகம். சாய்பாபாவை அதிகம் கும்பிடுவார். தவிர, எல்லாமே சீக்கிரம் முடிய வேண்டும் என நினைப்பார். படப்பிடிப்பு தாமதமானால் கூட, 'என்ன இப்படி செய்கிறார்கள?' என்பார். அதேபோல், வாழ்க்கையையும் சீக்கிரம் முடித்துக்கொண்டார்'' என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு