You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காட்டிக் கொடுத்த ஷூ' - செயின் பறிப்பு முதல் என்கவுன்டர் வரை 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முழு விவரம்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் நடந்த செயின் பறிப்பு நிகழ்வுகள் அடுத்த 24 மணி நேரத்தில் பல முக்கிய திருப்பங்களை கடந்துவிட்டிருக்கிறது. காலையில் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு, அடுத்த 4 மணி நேரத்தில் விமானத்தில் 2 பேர் கைது, நள்ளிரவில் ஒருவர் என்கவுன்டர், மறுநாள் ஆந்திராவில் மூன்றாவது நபர் கைது என்பன போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகள் மக்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளன.
காலையில் அடுத்தடுத்து 6 பெண்களிடம் செயின் பறித்தது தொடர்பாக சிசிடிவி உதவியுடன் காவல்துறை துப்பு துலக்கியது எப்படி? விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தது எப்படி? காலையில் கைதானவரை நள்ளிரவில் போலீசார் என்கவுன்டர் செய்யும் நிலை ஏற்பட்டது ஏன்?
என்ன நடந்தது? காவல் ஆணையர் விளக்கம்
இதுதொடர்பாக சென்னை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
" காலை (மார்ச் 25) ஆறரை மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தது தொடர்பாக உளவுத்துறை தகவல் அளித்தது. உடனே காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சங்கிலி பறிப்பு தடுப்பு ரோந்து குழு (Anti snatching patrol) அலெர்ட் செய்யப்பட்டது.
காலை 6 மணிக்கு சைதாப்பேட்டையில் முதல் சங்கிலி பறிப்பு நடந்தது. அடுத்து திருவான்மியூர் முதல் கிண்டி வரை ஆறு இடங்களில் சங்கிலிகளை பறித்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
கொள்ளை திட்டம் முடிந்ததும் விமான நிலையம் சென்று டிக்கெட் வாங்கிவிட்டு மும்பை அல்லது ஐதராபாத் என எந்த விமானம் கிடைக்கிறதோ அதில் ஏறிச் செல்வது கொள்ளைக் கும்பலின் பயணத் திட்டமாக இருந்ததாகக் கூறிய அருண், "முன்கூட்டியே டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வழக்கம் இந்தக் குழுவுக்கு இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கைதான நபர்களிடம் இருந்து 6 தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது 26.5 சவரன் ஆகும். சங்கிலி பறிப்பின் போது 65 வயதுப் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்" எனக் கூறினார்.
கொள்ளை சம்பவம் நடந்த பிறகு சுமார் நூறுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ததாகவும் அருண் குறிப்பிட்டார்.
"சம்பவம் நடந்த தெற்கு மண்டலத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்கு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 3 மணி நேரத்தில் அவர்களைப் பிடித்துவிட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் வைத்து இரண்டு பேரை கைது செய்தது குறித்து விவரித்த மாநகர காவல் ஆணையர் அருண், " காலை (மார்ச் 25 ) 4.15 மணிக்கு அவர்கள் சென்னை வந்துள்ளனர். 6 மணிக்கு கொள்ளை சம்பவம் நடந்த பிறகு 10 மணிக்கு விமான நிலையம் சென்றுவிட்டனர்" எனக் கூறினார்.
"சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை பின்தொடர்ந்துள்ளது. அவர்கள் தங்களின் ஆடைகளை மாற்றிக் கொண்டாலும் ஷூக்களை மாற்றவில்லை. அதை வைத்தே அவர்களில் ஒருவரை விமானத்தின் உள்ளே கைது செய்தோம்" எனக் கூறுகிறார் அருண்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை, விமான நிலைய அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்து, மீனம்பாக்கம் விமான நிலைய காவல் ஆய்வாளர் பாண்டியன், விமானத்தில் ஏறி கைது செய்ததாகவும் மாநகர ஆணையர் அருண் தெரிவித்தார்.
அப்போது சக பயணிகளிடம், 'எதற்காக இவரைக் கைது செய்கிறோம்?' என்ற விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த நபரை கீழே இறக்குவதற்கு சக பயணிகள் உதவி செய்ததாகவும் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
குற்றத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒரு நபரின் ஆதார் அடையாள சான்று சரியாக இல்லாததால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேறு ஒரு டிக்கெட் கவுன்டரில் காத்திருந்த அவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கொள்ளை கும்பலின் பின்னணி குறித்துப் பேசியுள்ள அருண், "இரண்டு பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இன்று (மார்ச் 26) கைதான மூன்றாவது நபர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் தான் கொள்ளையடிப்பதற்கான இரு சக்கர வாகனத்தைக் கொண்டு வந்துள்ளார்" எனக் கூறினார்.
"இரானி கொள்ளையர்கள் பாணியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதா?" என செய்தியாளர்கள் கேட்டபோது, "இரானி கொள்ளையர்கள், கவனத்தை திசை திருப்புவார்கள். செயின் பறிப்பு, கொள்ளை என்பது இப்போது தான் நடக்கிறது. சென்னையில் உள்ள சாலைகள், இவர்களுக்கு நன்கு பழக்கப்பட்டதாக உள்ளது" எனக் கூறினார்.
மக்களை திசை திருப்பி கொள்ளையடிப்பது இரானி கொள்ளையர்களின் வழக்கமாக உள்ளது. இரானை பூர்வீகமாக கொண்ட இவர்கள், மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் கொள்ளை பாணியை, 'இரானி ஸ்டைல்' என தமிழக காவல்துறை கூறுகிறது.
இவர்கள் ஒரு பெரிய குழுவாக செயல்படுவதாகக் கூறிய அருண், " இந்தியா முழுவதும் சென்று செயல்படக் கூடிய குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர். மகாராஷ்டிராவில் இவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அங்குள்ள 20 குற்றப் பின்னணி குழுக்களில் மூன்றாவது நபராக ஜாபர் குலாம் ஹூசைன் இருந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
விமானத்தில் ஏறி தப்பிச் சென்றிருந்தால் இந்தக் கும்பலை அவ்வளவு எளிதாக பிடித்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
என்கவுன்டர் நடத்தப்பட்ட பின்னணி குறித்துக் கேட்டபோது, "என்கவுன்டரை திட்டமிட்டு செய்வதில்லை. காவல்துறை அவர்கள் வேலையைச் செய்யும்போது தன்னிச்சையாக நடந்துள்ளது" என அருண் கூறினார்.
குலாமை அழைத்துச் சென்றபோது நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியால் காவல்துறையை நோக்கி 2 முறை சுட்டதாக கூறிய ஆணையர் அருண், "இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீஸ் வாகனம் மட்டும் சேதம் அடைந்தது. அப்போது தற்காப்புக்காக ஆய்வாளர் முகமது புகாரி அவரை துப்பாக்கியால் ஒருமுறை சுட்டார்" எனத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்தில் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு
சென்னை சைதாபேட்டை உள்ளிட்ட ஆறு இடங்களில் செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலை ஆறு மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஒரு மணிநேரத்திற்குள் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததால் சென்னை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட அடையாறு, புனித தோமையர் மலை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலை 6 மணியளவில் திருவான்மியூர், இந்திரா நகர் பகுதியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த 54 வயது பெண்மணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 8 சவரன் நகையைப் பறித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்மணி புகார் மனு கொடுத்துள்ளார். அடுத்து சாஸ்திரி நகரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 66 வயது மூதாட்டியிடம் இருந்து 4 கிராம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதாக பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப் பகுதி, சைதாப்பேட்டை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வயதான பெண்களைக் குறிவைத்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக அங்குள்ள காவல் நிலையங்களில் புகார் பதிவானது.
விமான நிலையத்தில் இருவர் கைது
இதில் சில சம்பவங்கள் அடையாறு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு ஹைதராபாத் செல்வதற்குத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வைத்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக ஊடங்களில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக அடையாறு துணை ஆணையர் பொன்.கார்த்திக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. " கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல் எதுவும் எனக்கு வரவில்லை. இதுதொடர்பாக மாநகர காவல்துறை தலைமை தரப்பில் இருந்து செய்தி அறிக்கை வெளியிடப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார்.
இதையடுத்து, விமான நிலையத்தில் வைத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள், சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாக அறியப்பட்டதன் அடிப்படையில் தனிப்படையினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை விமான நிலைய நுழைவு வாயிலிலும் மற்றொரு நபரை விமானத்தின் உள்ளேயும் சென்று கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது நபர் கைதானது எப்படி?
மூன்றாவது நபரான சல்மான் என்பவரை ஆந்திரா மாநிலம் ஓங்கோலில் வைத்து தனிப்படை போலீஸ் கைது செய்தது. கொள்ளை சம்பவத்துக்கு பிறகு ரயிலில் சென்று கொண்டிருந்த சல்மானை ரயில்வே போலீஸ் உதவியுடன் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தது.
தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் சிக்கியது எப்படி?
இவர்கள் இரண்டு பேரும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இதற்கு முன்னரும் இதேபோல தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை மூன்று மணிநேரத்தில் காவல்துறை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நேரத்தில் தங்கச் சங்கிலிகளைப் பறித்துவிட்டு சந்தேக நபர்கள் வந்த வாகனத்தைப் பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே அவர்கள் நிறுத்தியுள்ளனர்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அங்கிருந்து விமான நிலையம் சென்று ஹைதராபாத் சென்று பின்னர் மும்பை செல்லத் திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது" எனக் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவரின் தங்கச் சங்கிலியும் அடக்கம்.
இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய காவல்துறை உயர் அதிகாரி, "இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் என முடிவானது. அவர்களை வட மாநிலங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அதே பாணியில் கொள்ளை நடந்ததால் துரிதமாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளோம்" எனக் கூறினார்.
தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கும்பல் குறித்து தீவிர விசாரணை
தற்போது மேலதிக விசாரணை நடைபெற்று வருவதால், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கும்பலின் முழு பின்னணியும் விரைவில் தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
தங்கத்தில் விலை சவரன் 65 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பதால் தங்கச் சங்கிலிகளைப் பறிப்பதற்கு விமானம் மூலம் வந்து குறுகிய நேரத்தில் கொள்ளையடிக்கும் திட்டத்தை அரங்கேற்றி இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தங்கச் சங்கிலி பறிப்புக்காக இவர்கள் பயன்படுத்திய வாகனம் கர்நாடக மாநில பதிவெண் கொண்டதாக உள்ளது.
'இதையடுத்து, இந்த வாகனங்களை யாரிடம் இருந்து வாங்கியுள்ளனர்? கொள்ளையடித்த தங்கத்தை என்ன செய்கின்றனர்? சென்னையில் இவர்களுக்கு உதவி செய்த கும்பல் யார்?' என்பவை குறித்து போலீஸ் தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு