You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'த.வெ.க - தி.மு.க இடையில்தான் போட்டி' - பொதுக்குழுவில் விஜய் பேசியது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி" என, த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு பல்வேறு வகைகளில் தி.மு.க ஆட்சி இடையூறு செய்வதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
த.வெ.க முதல் பொதுக்குழுவில் என்ன நடந்தது?
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பேசி முடித்த பிறகு விஜய் பேசினார்.
" கதறல் சத்தம் எப்படி உள்ளது" எனத் தொண்டர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய விஜய், "ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா அல்லது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?" என பேச்சைத் தொடங்கினார்.
மன்னராட்சி விமர்சனம்
தொடர்ந்து பேசிய அவர், " எல்லாருக்கும் நல்லது நடப்பதுதான் அரசியல். அது தான் நமது அரசியல். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் எனக் கூறி மக்கள் பிரச்னைகளை மடை மாற்றி மக்களாட்சியை மன்னராட்சி போன்று நடத்துகிறார்கள்" என விமர்சித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சியில் உள்ளவர்கள் இடையூறு செய்வதாகக் கூறிய விஜய், த.வெ.க மாநாட்டில் தொடங்கி பரந்தூர் மக்கள் போராட்டம், பொதுக்குழு வரை எத்தனையோ தடைகளைத் தாண்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தான் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
தனது பேச்சில், 'மன்னராட்சி முதல்வரே' என இரண்டு முறை முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு த.வெ.க தலைவர் விஜய் பேசினார். "பெயரில் உள்ளதைப் போல செயலிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீரத்தைக் காட்ட வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், " மத்திய பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சி எனக் கூறுகிறார்கள். அதற்குக் குறைவில்லாத பாசிச ஆட்சியைத் தானே நீங்களும் கொடுக்கிறீர்கள்? கட்சித் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார்?" எனக் கேட்டவர், சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
"நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆக கனவு காண்பதாக கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது எனக் கூறுகிறீர்கள். பிறகு ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை த.வெ.க-வுக்கு கொடுக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளதாகவே தெரியவில்லை எனவும் விமர்சித்தார் விஜய்.
தி.மு.க ஆட்சியில் பள்ளிக் குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரையில் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாகக் கூறிய அவர், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என போராட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்" என்றார்.
அடுத்து மத்திய பா.ஜ.க ஆட்சியை தனது பேச்சில் விஜய் விமர்சித்தார்.
"பிரதமர் மோதியின் பெயரைச் சொல்வதற்கு பயம் உள்ளதாக கூறுகிறார்கள். மத்தியில் ஆள்கிறவர் எனக் கூறுகிறோம். அங்கு என்ன காங்கிரஸா உள்ளது? பிறகு ஏன் பெயரைக் கூற வேண்டும் என சொல்கிறார்கள் " எனக் கூறினார்.
"தமிழ்நாடு.. தமிழர்கள் என்றாலே பிரதமர் மோதிக்கு அலர்ஜி" எனக் கூறிய விஜய், "ஜி.எஸ்.டியை சரியாக வாங்கிவிட்டு நிதியை ஒதுக்குவதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் எனத் தொடங்கியபோதே உங்கள் திட்டம் தெரிந்துவிட்டது. உங்களிடம் சொல்ல விரும்புவது எல்லாம் தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள்" என பிரதமர் மோதியை சுட்டிக் காட்டி பேசினார்.
"தி.மு.க, த.வெ.க இடையில்தான் போட்டி"
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அறுதிப் பெரும்பான்மை மற்றும் அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி அமைத்ததும் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் என தனது பேச்சில் நடிகர் விஜய் தெரிவித்தார்.
"அடுத்த ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்" எனக் கூறிய விஜய், "இரண்டு கட்சிக்கும் இடையில்தான் போட்டி. ஒன்று த.வெ.க, இன்னொன்று தி.மு.க" எனவும் தெரிவித்தார்.
தி.மு.க, பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்வதால் அவர்களின் பெயரைக் கூற வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளதாக கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.
தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி உள்ளதாக விஜய் பேசியதையும் அவர் மறுக்கிறார். " தி.மு.க என்பது நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி. த.வெ.க அப்படி இல்லை" எனக் கூறுகிறார்.
முன்னதாக, த.வெ.க பொதுக்குழுவில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது; மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; இரு மொழிக் கொள்கையில் உறுதி; நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்பன உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு ஆகியவற்றை தனது தீர்மானங்களாக த.வெ.க வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு