பங்குச்சந்தைகளில் வரவேற்பு பெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் - முதலீட்டு சூழல் மாறுகிறதா?

லென்ஸ்கார்ட் நிறுவன புகைப்படம்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, கண் கண்ணாடி நிறுவனமான லென்ஸ்கார்ட்டின் (Lenskart) ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO) சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது
    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பொதுப் பங்கு (IPO) வெளியிடும் ஆர்வம் அண்மை காலத்தில் குறையவே இல்லை - இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு யூனிகார்ன் நிறுவனம் (ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்) நாட்டின் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இன்னும் இரண்டு நிறுவனங்கள் வரிசையில் உள்ளன.

'ஷார்க் டேங்க் இந்தியா' நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரால் நிறுவப்பட்ட, கண் கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான லென்ஸ்கார்ட்டின் 821 மில்லியன் டாலர் (623 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள பங்குகள், அவற்றின் பிரமிக்க வைக்கும் மதிப்பீடுகளையும் மீறி, சில மணி நேரங்களுக்குள்ளேயே விற்றுத் தீர்ந்தன. எனினும், அதன் அறிமுகம் நடந்த திங்கட்கிழமையில் சந்தை சற்றே தடுமாற்றத்துடன் இருந்தது.

புதன்கிழமை பங்குச் சந்தைகளில் அறிமுகமாகும் மற்றொரு பெரிய நிறுவனம், மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவின் ஆதரவு பெற்ற நாட்டின் மிகப்பெரிய சில்லறை தரகு நிறுவனமான க்ரோவ் (Groww). விற்பனைக்கு அளிக்கப்பட்ட பங்குகளை விட முதலீட்டாளர்களிடம் 17 மடங்கு அதிக தேவை இருந்தது. பின்டெக் யூனிகார்ன் நிறுவனமான பைன் லேப்ஸ் (Pine Labs) இந்த வாரத்தின் பிற்பகுதியில் பின்னர் பட்டியலிடப்படும்.

வீட்டுச் சேவை தளமான அர்பன் கம்பெனி (Urban Company) முதல், யூடியூப் சேனலாக இருந்து கல்வி தொழில்நுட்ப யூனிகார்னாக மாறிய பிசிக்ஸ் வாலா (Physics Wallah) வரை பல்வேறு புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்தைப் பெற பங்குச் சந்தையை நாடியுள்ள இந்த விறுவிறுப்பான ஐபிஓ சீசனுக்கு மத்தியில், இந்த பங்கு வெளியீடுகள் வந்துள்ளன.

இந்தத் தலைசுற்ற வைக்கும் நிதி திரட்டும் வேகம், பெரும்பாலும் லாபமற்ற இந்த புதிய நிறுவனங்களின் அதிகப்படியான மதிப்பீடுகள் குறித்து பல சங்கடமான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், ஆரம்ப நிலை துணிகர முதலீட்டாளர்கள் (Venture Capitalists) தங்கள் முதலீடுகளை பணமாக்க முடியாமல் கடுமையான நிதி பற்றாக்குறையால் துவண்டு கிடந்த காலத்திற்கு பிறகு, இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் முதிர்ச்சி அடைவதையும் இது குறிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பங்கு சந்தை பற்றிய குறியீட்டு படம்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, சிறு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் ஐபிஓ சந்தையில் பணத்தை முதலீடு செய்கின்றன.

இந்தப் புதிய ஐபிஓ அலை, பல நிதியகங்களுக்கு அவர்களின் ஆரம்பகால முதலீடுகளிலிருந்து வெளியேறும் வாய்ப்பை இறுதியாக வழங்குகிறது.

"நாங்கள் 2015-16 இல் நிதி திரட்டியபோது, எங்கள் முதலீடுகளிலிருந்து வெளியேறுவதுதான் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்தது, எனவே இப்போதுள்ள காலம் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது," என்று சுமார் 100 ஆரம்ப நிலை ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்துள்ள ஏஞ்சல் முதலீட்டாளர் அனில் ஜோஷி பிபிசியிடம் தெரிவித்தார்.

க்ரோவ் மற்றும் பைன் லேப்ஸ் உட்பட பல உயர்நிலை இந்திய ஸ்டார்ட்-அப்களில் சுமார் 9 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள உலகளாவிய துணிகர முதலீட்டு நிறுவனமான பீக்எக்ஸ்வி பார்ட்னர்ஸின் (PeakXV Partners) நிர்வாக இயக்குநர் சைலேந்திர சிங், இந்த IPO க்களுக்கான வலுவான தேவைக்கு, சிறந்த ஒழுங்குமுறை மற்றும் சிறு முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதிகள் (மியூச்சுவல் ஃபண்டுகள்) மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட பங்கேற்பாளர்களின் பங்களிப்பே காரணம் என்று கூறுகிறார்.

"வரலாற்று ரீதியாக இந்த அதிக வளர்ச்சியுள்ள நிறுவனங்களுக்கு வரவேற்பு இல்லை. இப்போது இது மாறியுள்ளது," என்று சைலேந்திர சிங் கூறினார். "காரணம் அதிக சந்தை பங்கேற்பாளர்கள் இருப்பதால், பல்வேறுபட்ட நிறுவனங்கள் சந்தையில் நுழைகின்றன." என்றார்.

இந்த புதிய முதலீட்டாளர்களிடமிருந்து வந்த பணம், இந்த ஆண்டு நவம்பர் தொடக்கம் வரை சுமார் 43 ஸ்டார்ட்-அப் ஐபிஓ களைத் தூண்டிவிட்டுள்ளது. இது 2020-இல் பொதுப் பங்கு வெளியீடு செய்த ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம் மற்றும் 2023-இல் இருந்ததை விட இரு மடங்கு அதிகம் என்று சந்தை நுண்ணறிவு நிறுவனமான டிராக்ஸன் (Tracxn) பகிர்ந்து கொண்ட தரவுகள் காட்டுகின்றன.

ஆனால், இந்த ஐபிஓ-க்களில் பல, ஆரம்பகாலத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்தாலும், புதிய முதலீட்டாளர்களுக்கு (பங்குகளை முதல்முறையாக வாங்கும் சாதாரண மக்களுக்கு) அதன் பிறகு லாபம் ஈட்ட வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்ற கவலை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மதிப்பீடுகள் "கட்டமைப்பு ரீதியாக அதிகமாக" உள்ளன என்பதை ஒப்புக்கொண்ட சைலேந்திர சிங், மிக அதிக இயக்க லாப வரம்புகளைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிக மதிப்புடன் வர்த்தகம் செய்ய முனைகின்றன என்று கூறுகிறார்.

ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் தங்கள் பங்குகளைப் பொதுமக்களுக்கு கொடுப்பதற்கான விலையை நிர்ணயம் செய்யும்போது விவேகத்துடன் இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் சிறு முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்று அவர் நம்புகிறார். இருப்பினும், அனைத்து ஸ்டார்ட்-அப் ஐபிஓவும் அதிக விலையிலோ அல்லது நியாயமற்ற முறையிலோ இருப்பதாக அவர் நினைக்கவில்லை.

ஸொமாட்டோ, நைக்கா, இக்சிகோ மற்றும் பல ஸ்டார்ட்-அப் ஐபிஓக்கள் முதலீட்டாளர்களுக்கு அற்புதமான வருமானத்தை ஈட்டித் தந்துள்ளன என்று சைலேந்திர சிங் கூறினார்.

"இன்றைய பட்டியல்கள் லாபம் மற்றும் நல்ல நிர்வாகத்தில் உறுதியாக உள்ளன," என்று துணிகர முதலீட்டு நிறுவனமான ஆக்சல் (Accel) நிறுவனத்தின் பங்குதாரர் ஆனந்த் டேனியல் பிபிசியிடம் தெரிவித்தார்.

"தெளிவான அடிப்படைகளைக் கொண்ட வலுவான வணிகங்கள் பங்குச் சந்தையில் நுழைகின்றன, அதே நேரத்தில் சில ஸ்டார்ட்-அப்கள் மீண்டும் அடிப்படைத் திட்டத்திற்குச் சென்று எதிர்காலத்தை மறுமதிப்பீடு செய்கின்றன."

ஸ்விகி நிறுவனம் பங்குசந்தையில் பட்டியலிடப்படுவது தொடர்பான புகைப்படம்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, உணவு விநியோக செயலிகள் முதல் கல்வி-தொழில்நுட்ப நிறுவனங்கள் வரை இந்திய ஸ்டார்ட்-அப்கள் அண்மையில் பங்குச் சந்தைகளைப் பயன்படுத்தியுள்ளன

டிராக்ஸனின் இணை நிறுவனர் நேஹா சிங் கூற்றுப்படி, முதிர்ச்சியடைந்த ஸ்டார்ட்-அப்கள் பொது சந்தைக்குள் நுழையும் வேளையிலும், ஒட்டுமொத்தமாக குறைவான இந்திய ஸ்டார்ட்-அப்களே மூடப்படவோ அல்லது அடிப்படைத் திட்டத்திற்குத் திரும்பவோ வேண்டியுள்ளது - இது ஒரு ஊக்கமளிக்கும் போக்காகும்.

அதிக எண்ணிக்கையிலான நிறுவனர்கள் "தீவிர விரிவாக்கத்தை" விட "நீடித்து நிலைத்தல், லாபம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மூலதனப் பயன்பாடு" ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் காரணமாக இது இருக்கலாம் என்று நேஹா சிங் கூறினார்.

டிராக்ஸன் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இதுவரை 724 ஸ்டார்ட்-அப்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. இது 2024-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் மூடப்பட்ட 3,900 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களுடன் ஒப்பிடும்போது 81% குறைவு. முந்தைய ஆண்டுகளை விடவும் 2024-இல் மூடப்பட்ட நிறுவனங்கள் குறைவாகவே இருந்தன.

இந்தத் துறை "வேகமான வளர்ச்சியில்" இருந்து "உத்தி ரீதியான நிலைத்தன்மைக்கு" மாறி வருகிறது என்று நேஹா சிங் கூறினார்.

அதிக நிறுவனர்கள் ஐபிஓகள் மூலம் நிதி திரட்டினாலும், புதிய நிறுவனங்களில் தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன நிதி கோவிட் கால உச்சத்தை இன்னும் அடையவில்லை.

2025-இல் இந்தியத் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களால் திரட்டப்பட்ட 9.8 பில்லியன் டாலர் நிதி, 2021-இல் திரட்டப்பட்ட 40 பில்லியன் டாலரின் மிகச் சிறிய நிழலாகவே உள்ளது, மேலும் இது கடந்த ஆண்டின் 12.6 பில்லியன் டாலரை விடச் சற்று குறைவாகவே உள்ளது.

"நாங்கள் அதிக மகிழ்ச்சியான கட்டத்திலிருந்து சிந்தனைமிக்க மூலதனப் பயன்பாட்டிற்கு நகர்ந்துள்ளோம். ஒப்பந்தங்களின் எண்ணிக்கை உச்ச ஆண்டை விடக் குறைவாக இருக்கலாம். ஆனால் நிதியளிக்கப்படும் நிறுவனங்களின் தரம் அதிகமாக உள்ளது," என்று டேனியல் கூறுகிறார்.

தரமான, லாபம் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்திய நிறுவனர்களுக்குத் தொடர்ந்து மூலதனம் கிடைக்கும் என்றும், சந்தை மேலும் விவேகமானதாக மாறிவிட்டது என்றும் டேனியல் கூறுகிறார், "இது இறுதியில் நீண்ட காலத்திற்குப் பணியாற்ற விரும்பும் நிறுவனர்களுக்கு நல்லது." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், ஏஞ்சல் வரி (angel tax) நீக்கம் போன்ற சமீபத்திய கொள்கை நடவடிக்கைகள் இந்தியாவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்ட்-அப் ஐபிஓகளைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டும் இந்த வேகம் தொடருமா?

"மூலதனச் சந்தைகள் இயல்பாகவே சுழற்சிக்கு உட்பட்டவை, அதனால் 2026-ஆம் ஆண்டும் இதேபோல் இருக்குமா என்று சொல்வது சாத்தியமற்றது," என்கிறார் சைலேந்திர சிங்.

இருப்பினும், இப்போதைக்கு, ஆரம்பகாலத்தில் முதலீடு செய்த தனியார் முதலீட்டாளர்கள், பொதுச் சந்தைகள் தங்கள் ஆரம்பகால பங்குகளுக்கு அதிக விலை கொடுக்க தயாராக இருப்பதால், மிகுந்த லாபம் ஈட்டுகிறார்கள்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு