'அடர்ந்த காட்டில் 8 நாட்கள்' - விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பெண் தப்பியது எப்படி?

    • எழுதியவர், ஆஸ்யா ஃபௌக்ஸ் & எட்கர் மேடிகாட்
    • பதவி, பிபிசி

டச்சு பெண்ணாகிய அன்னெட் ஹெர்ஃப்கென்ஸ், தனக்கு கணவராக நிச்சயிக்கப்பட்டிருந்தவரோடு வியட்நாம் நாட்டிலிருக்கும் ஒரு எழில் நிறைந்த கடற்கரை ரிசார்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அது 1992-ம் ஆண்டு. அன்னெட் ஸ்பெயினில் நிதித் துறையில் பணிபுரிந்து வந்தார். வில்லெம் அல்லது பாஸ்ஜே (அப்படிதான் அன்னெட் அவரை அழைத்தார்) என்றழைக்கப்பட்டவரோடு காதலுற்றிருந்தார். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். பாஸ்ஜேவும் அன்னெட்டும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவர்கள்.

அவர்கள் பயணித்த சிறிய விமானம் நா டாங் விமான நிலையத்தை நெருங்கியபோது, திடீரென்று கீழே விழுவதை உணர்ந்தனர்.

"என்ஜின்கள் சத்தமிட்டன. பயணிகள் அலறுகிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். நாங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டோம், பின்னர் எல்லாம் இருண்டுவிட்டது, "என்று அன்னெட் பிபிசியின் லைவ்ஸ் லெஸ் ஆர்டினரி போட்காஸ்டில் விவரித்தார்.

அந்த விபத்து பேரழிவை ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர், அன்னெட்டைத் தவிர.

அவர் எட்டு நாட்கள் காடுகளுக்கு நடுவில் கிடந்தார், நடக்க முடியாமல், உடல் முழுவதும் காயங்கள், எலும்பு முறிவுகள், நீர் சத்து இழப்பின் விளைவுகள் மற்றும் அவரது வாழ்க்கையின் காதலை இழந்ததால் கடுமையான வலியை அனுபவித்தார்.

அந்த நேரத்தில் அவர் அனுபவித்தவை வாழ்க்கையின் இருண்ட தருணங்களில் அழகைக் கண்டுபிடிக்க அவருக்குக் கற்றுக்கொடுத்தது என்று அவர் கூறுகிறார். தனது கதையை அவரே விவரித்தார்.

நான் பாஸ்ஜேவுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினேன். அவர், 'நீ செய்யத் துணியாத ஒன்று எனக்குத் தெரியும்' என்றார். அவரை முத்தமிட சொல்லி சவால்விட்டார்.

நாங்கள் ஏற்கனவே மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தோம், நாங்கள் ஒரே மாணவர் விடுதியில் வசித்து வந்தோம்.

டேட்டிங் செய்த சிறிய காலத்திலேயே , எங்களுக்கிடையில் இருந்தது உண்மையான காதல் என்பதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் லாட்டரியை வென்றது போல் உணர்ந்தோம், அன்றிலிருந்து நாங்கள் ஒன்றாக இருந்தோம்.

எவ்வாறாயினும், நாங்கள் இருவரும் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தோம். எனவே எங்கள் உறவை நீண்ட தூரத்தில் இருந்தாலும் தொடரவும், முடிந்தவரை ஒருவருக்கொருவர் பார்க்கவும் முடிவு செய்தோம்.

1992 வாக்கில், பாஸ்ஜே வியட்நாமில் வேலை செய்து கொண்டிருந்தார், நாங்கள் அங்கு சில நாட்கள் விடுமுறையை கழிக்கலாம் என முடிவு செய்தோம்.

நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தோம், அவர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார், நாங்கள் எங்கே, எப்படி திருமணம் செய்து கொள்வோம் என்று ஆலோசித்து வந்தோம்.

நான் வியட்நாமுக்கு வந்தபோது, அங்கு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது, அவரது அலுவலகம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க விரும்பினேன். ஆனால் அவர், ஒரு நல்ல டச்சுக்காரரைப் போலவே, காலை 7 மணிக்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டிருந்தார்.

நான் இன்னும் தூங்க விரும்பியதால் கொஞ்சம் எரிச்சலுடன் எழுந்தேன். நான் விமானத்தைப் பார்த்தபோது, "நான் அதில் ஏறவில்லை" என்று சொன்னேன்.

அது மிகவும் சிறியதாக இருந்தது. சோவியத்தால் தயாரிக்கப்பட்ட யாக்-40. எனக்கு முழுதும் மூடிய சிறிய இடங்களில் இருப்பது எப்போதும் பயம்

"நீ அதைச் சொல்வாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் தயவுசெய்து நமக்காக வா ," என்று பாஸ்ஜே என்னிடம் கூறினார்.

நான் விமானத்தில் ஏறி அது எவ்வளவு சிறியது என்று பார்த்தேன். என் உள்ளுணர்வை நான் புறக்கணிக்க வேண்டியிருந்தது.

என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டே இருந்தது. நாங்கள் இரண்டாவது வரிசையில் அமர்ந்தோம், நான் நடந்து செல்லும் பாதைக்கு அருகிலான ஓரத்தில் அமர்ந்தேன்.

விமானத்தில் செல்லும் போது, எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நான் பாஸ்ஜேயின் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

நேரத்தைக் கடக்க பள்ளியில் நான் கற்றுக்கொண்ட ஒரு ஜெர்மன் கவிதையை வாசித்து வந்தேன். தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், விமானம் வேகமாக கீழே இறங்குவதை உணர முடிந்தது.

மக்கள் அலறினர். பாஸ்ஜே பயந்துபோய் என்னைப் பார்த்து, "எனக்கு இது பிடிக்கவில்லை" என்றார். நான், கொஞ்சம் கோபமாக, பதிலளித்தேன், "இது அநேகமாக சாதாரண குலுங்கலாக இருக்கலாம். இவ்வளவு சிறிய விமானம் இப்படி கீழே வருவது இயற்கைதான். கவலை வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும்" என்றேன்.

என்ஜின்கள் மீண்டும் சத்தமிட்டன, விமானம் மீண்டும் கீழே சரிந்தது. பயணிகள் இன்னும் சத்தமாக கத்தினர். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். நாங்கள் கைகோர்த்து இருந்தோம்.

எல்லாமே இருண்டுவிட்டது.

உயிர் பிழைத்த ஒரே நபர்

காட்டின் சத்தங்களால் சூழப்பட்ட நான் விழித்து பார்த்தேன் - பூச்சிகள், குரங்குகள்.

எனக்கு மேலே இருந்த கனமான ஏதோ ஒன்றை நான் தள்ளி விட்டேன்- அது ஒரு இறந்த மனிதருடன் கிடந்த விமான இருக்கைகளில் ஒன்று. நான் தள்ளியதில், உடல் இருக்கையில் இருந்து கீழே விழுந்தது.

நான் என் இடதுபுறம் பார்த்தேன், அங்கே அவர் இருந்தார், பாஸ்ஜே. இன்னும் அவரது இருக்கையில் சீட் பெல்ட் உடன் கட்டப்பட்டிருந்தார். அவரது முகத்தில் ஒரு இனிமையான புன்னகை, ஆனால் நிச்சயமாக இறந்துவிட்டார் என்று தெரியும்.

நான் எப்படி வெளியேறினேன் என்று எனக்குத் தெரியவில்லை. என் கால்கள் முறிந்திருந்தன. என் இடுப்பில் 12 எலும்பு முறிவுகள். கிட்டத்தட்ட செயலிழந்த நுரையீரல், மற்றும் உடைந்த தாடை.

விமானம் ஒரு மலையில் மோதி, ஒரு இறக்கையை இழந்து, பின் இரண்டாவது மலையில் மோதி கவிழ்ந்தது.

நான் சீட் பெல்ட் அணியவில்லை. எதிரில் இருந்த பயணியின் இருக்கையின் கீழ் சிக்கியுள்ளேன்.

சிதைந்த விமானத்திற்கு வெளியே, பார்க்கும் இடம் எல்லாம் மிகவும் பசுமையான தாவரங்கள். சில பெரிய சிவப்பு எறும்புகளைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. கிளைகள், இலைகள், என் வெற்றுக் கால்கள். என் பாவாடை எங்கே போனது என்று எனக்குத் தெரியவில்லை.

அவரது காலில் ஒரு பெரிய திறந்த காயம் இருந்தது. என்னால் அவரது எலும்பைப் பார்க்க முடிந்தது, பூச்சிகள் ஏற்கனவே அதைச் சுற்றி திரண்டு வந்தன.

பின்னர், என் வலதுபுறத்தில் ஒரு வியட்நாமிய மனிதனைப் பார்த்தேன். அவர் உயிருடன் இருந்தார்.

மீட்பவர்கள் வருவார்களா என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் ஆம் என்று கூறினார், ஏனென்றால் அவர் மிகவும் முக்கியமான மனிதர்.

வெற்று கால்களைக் கொண்டிருப்பதைப் பற்றி நான் வெட்கப்படுவதை அவர் கவனித்தார், எனவே அவர் எடுத்துச் சென்ற ஒரு சிறிய பையில் இருந்து ஒரு ஜோடி சூட் பேன்ட் எடுத்து என்னிடம் கொடுத்தார்.

நான் அந்த பேண்ட்டை மிகுந்த வலியில் அணிந்தேன், இது மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் கூட தோற்றத்தின் மீது எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் என்பதைப் பற்றி சொல்கிறது.

ஆனால் அந்த உதவியால் அவர் என் கால்களை பூச்சிகளிடமிருந்து காப்பாற்றினார் என்றும் கூறலாம்.

அந்த நாளின் இறுதியில் , அந்த மனிதன் பலவீனமடைவதை நான் பார்த்தேன், அவரிடமிருந்து உயிர் பிரிந்து சென்றுக் கொண்டிருந்தது, இறுதியாக அவர் தலையைத் தாழ்த்தி இறந்தார்.

முதலில், சிலரிடமிருந்து வலியின் முனகல்களைக் கேட்டேன். ஆனால் அந்த மலையில்பொழுது சாய்ந்தபோது, வேறு எந்த சத்தமும் கேட்க முடியவில்லை. நான் முற்றிலும் தனியாக இருந்தேன்.

காட்டில் தனியே இருந்தது எப்படி?

வியட்நாமை சேர்ந்த அந்த நபர் இறந்தபோது, நான் பீதியடைந்தேன்.

நான் என் சுவாசத்தில் கவனம் செலுத்தினேன். நிலைமையை மதிப்பிடுவதற்குப் பதிலாக, நான் அதைக் கவனித்து அப்படியே ஏற்றுக்கொண்டேன். "இதுதான் நடந்தது. நான் என் வருங்கால கணவருடன் கடற்கரையில் இல்லை." என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,

நான் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தினேன், "ஒரு புலி வந்தால் என்ன செய்வது?" போன்ற இன்னும் பேரழிவு தரும் காட்சிகள் என் மனதில் அலைபாய்வதை தடுத்தேன்.

நிச்சயமாக அவை அனைத்தும் என் மனதைக் கடந்து சென்றன. நான் காட்டில் இருந்தேன், எனவே புலி வரலாம், அல்லது எந்த ஆபத்தும் ஏற்படலாம் என்பது சாத்தியமே.

ஆனால் உண்மை என்னவென்றால், அந்த நேரத்தில் புலி அங்கு இல்லை, எனவே புலி வரும்போது நான் அதை கவனித்துக்கொள்வேன் என்று முடிவு செய்தேன்.

முதல் இரண்டு நாட்கள் நான் அந்த வியட்நாம் மனிதரின் சடலத்திற்கு அருகிலேயே கிடந்தேன்.

நேரம் செல்லச் செல்ல, நான் விலகிச் செல்ல வேண்டியிருக்கும் அளவு அது மேலும் மேலும் அருவருப்பாக மாறியது.

அதைப் பார்ப்பதற்குப் பதிலாக காட்டைப் பார்த்தேன். எனக்கு முன்னால் இருந்த ஆயிரக்கணக்கான சிறிய இலைகளைப் பார்த்தேன்.

நான் நகரத்தில் வளர்ந்த பெண். நான் நிதித் துறையில் வேலை செய்துக் கொண்டு, நியூயார்க் மற்றும் லண்டனுக்கு தொடர்ந்து பயணம் செய்தேன். திடீரென்று அந்த காடு எவ்வளவு அழகாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன்.

இலைகள், இலைகளில் உள்ள துளிகள் மற்றும் துளிகளில் ஒளி எவ்வாறு பிரதிபலித்தது என்பதில் நான் அதிக கவனம் செலுத்தினேன், அது மிகவும் அழகாக மாறியது.

அந்த அழகில் நான் மூழ்கியிருந்தேன். ஆனால் நிச்சயமாக, நான் உயிர்வாழ வேண்டியிருந்தது.

முதலில், கொஞ்சம் மழை பெய்தது, நான் என் நாக்கை வெளியே நீட்டினேன், ஆனால் அது போதுமானதாக இல்லை. நான் உயிர் வாழ ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியிருந்தது.

விமான பாகம் ஒன்றை பார்த்த போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

நான் என் முழங்கைகளில் ஊர்ந்து சென்றேன், என் காயமடைந்த இடுப்பு மற்றும் கால்களை இழுத்து மெல்ல நகர்ந்தேன். என் முழு பலத்துடனும் நான் எழுந்தேன். என்னால் முடிந்தவரை அந்த பாகத்தை எடுத்தேன், அதிலிருந்து ஏழு சிறிய கிண்ணங்களை என்னால் உருவாக்க முடிந்தது. நான் அவற்றை வரிசையாக நிறுத்தி மழைக்காக காத்திருந்தேன்.

ஒரு பெண்ணின் பையில் குளிரைச் சமாளிக்க எனக்கு உதவிய ஒரு கம்பளியைக் கண்டேன்.

அதே நாளில், மழை பெய்யத் தொடங்கியது. என் கிண்ணங்கள் நிரம்பின.

அது சிறந்த மதுவை போல சுவைத்தது. நான் என்னைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டேன்.

அந்த சூழ்நிலைகளில் உயிருடன் இருப்பது எவ்வளவு நம்பமுடியாதது என்பதை நான் உணர்ந்தேன்.

"பாஸ்ஜேவைப் பற்றி யோசிக்க வேண்டாம்"

பாஸ்ஜேவின் மரணத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நெதர்லாந்தின் லைடனில் உள்ள ஒரு நகைக்கடையில் அவர் எனக்கு வாங்கிய சிறிய, மோதிரத்தைப் பார்த்தேன். பூச்சி கடியால் வீங்கிய என் கைகளில் அது இருந்தது.

நாங்கள் ஒரு சரியான ஜோடியாக இருந்திருப்போம். நாங்கள் நல்ல நண்பர்கள், ஆத்ம தோழர்கள். அவர் ஒரு அழகான, மிகவும் அன்பான நபர்.

காட்டில் கிடந்த இத்தனை மணி நேரங்களில், அவரைப் பற்றி சிந்திக்க நான் என்னை அனுமதிக்கவில்லை. அது என்னை அழ வைக்கும் என்று எனக்குத் தெரியும், என்னால் உயிர்வாழ முடியாத அளவுக்கு பலவீனமாக்கும் என்று தெரியும்.

அங்கு மீண்டும் அவரைத் தேடும் தைரியம் கூட எனக்கு இல்லை. "பாஸ்ஜேவைப் பற்றி சிந்திக்க வேண்டாம்," என்பது என் மந்திரமாக மாறியது.

நான் என் குடும்பத்தைப் பற்றி நினைத்தேன். அவை மகிழ்ச்சியான, அன்பான எண்ணங்களாக இருந்தன. அவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன்.

ஆனால் உணவுப் பற்றாக்குறையும் காயங்களும் என்னைப் பாதிக்கத் தொடங்கின.

ஆறாவது நாளில், நான் இறந்து கொண்டிருந்தேன், ஆனால் மிகவும் அழகான மற்றும் மகிழ்ச்சியான வழியில்.

காட்டின் அழகை, அந்த வண்ணங்கள் அனைத்தையும் நான் தொடர்ந்து பார்த்தேன், ஒரு வகையான அன்பு அலை என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். நான் மேலும் மேலும் உயர்ந்து வருவதை உணர்ந்தேன்.

பின்னர், என் கண் முன், ஆரஞ்சு நிற உடை அணிந்த ஒரு மனிதரைக் கண்டேன்.

நான் என் மனநிலையிலிருந்து வெளியேறி மீண்டும் பார்த்தேன். நிச்சயமாக ஒரு மனிதர் இருந்தார். அவர் ஒரு அழகான முகமும் கொண்டிருந்தார்.

நான் கத்தத் தொடங்கினேன், நான் மீண்டும் மிகப்பெரிய வலியை உணர்ந்தேன், ஆனால் நான் அங்கிருந்து வெளியேறுவதற்கான டிக்கெட்டைப் பெற்றேன் என்பதை உணர்ந்தேன்.

"எனக்கு உதவ முடியுமா?" என நான் அவரிடம் கேட்டேன், அவர் சற்று தூரத்தில் நின்றார். எந்த பதிலும் பேசவில்லை. அவர் என்னை வெறித்துப் பார்த்தார்.

" தயவு செய்து எனக்கு உதவ முடியுமா?" நான் வலியுறுத்தினேன். அவர் எதுவும் செய்யவில்லை. அந்த நாளின் முடிவில், அவர் காணாமல் போனார். அது ஒரு மாயத்தோற்றம் என்று பிறகு உணர்ந்தேன்.

ஆனால் மறுநாள் காலையில் அவர் திரும்பி வந்தார்.

எனக்கு மிகவும் கோபம் வந்தது. நான் எல்லா மொழியிலும் அவரை சபிக்கத் தொடங்கினேன், அவர் மீண்டும் சென்று விட்டார்.

"ஓ, நான் அவரை அவமதித்து பேசிவிட்டேன், இப்போது அவர் மீண்டும் வரவே மாட்டார்." என்று நான் நினைத்தேன்.

ஆனால் எட்டாவது நாளில், எட்டு ஆண்கள் அங்கு தோன்றினர். அவர்கள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

திரும்பி வந்து சேர்ந்த தருணம்

அவர்கள் எனக்கு ஒரு பயணிகள் பட்டியலைக் காட்டினர், அதில் நான் என் பெயரைக் குறித்தேன்.

அவர்கள் ஒரு பாட்டிலில் இருந்து கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்து, முனைகளில் இரண்டு கம்பங்களில் கட்டப்பட்ட ஒரு தார்பாலினில் என்னைத் தூக்கி, காட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.

நான் பீதியடைந்தது இது இரண்டாவது முறை. நான் வெளியேற விரும்பவில்லை. நான் என் பாஸ்ஜேவுடன் அங்கேயே தங்க விரும்பினேன், நான் என் அழகான மனநிலையில் இருக்க விரும்பினேன்.

நான் மிகவும் பயந்தேன் என்பதை அவர்கள் உணர்ந்ததால் அவர்கள் என்னை கொஞ்சம் கவலையுடன் பார்த்தனர். அவர்கள் என்னை தரையில் படுக்க வைத்து காலணிகளை கழற்றினர்.

நான் அவர்கள் மீது கவனம் செலுத்தினேன். நான் என் சுயத்தை மறந்துவிட்டேன், அந்த ஆண்கள் எனக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்பதைப் பற்றி யோசித்தேன்.

நாங்கள் காட்டின் நடுவில் முகாமிட்டோம், மிகவும் தீவிரமான வலி என்னைத் தாக்கியது. அவர்கள் ஒரு சிறிய கூடாரம் அமைத்து, நெருப்பு மூட்டினர்.

அன்று இரவு மழை பெய்யத் தொடங்கியது. அவர்கள் கூடாரத்திற்குள் சென்றார்கள், நான் மிகவும் பயந்தேன். இது வேடிக்கையானது, ஏனென்றால் மற்ற நாட்களில், நான் தனியாக இருந்தபோது, நான் பயப்படவில்லை.

தயவு செய்து என்னை தனியாக விட்டுவிட வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.

அவர்கள் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். அவர்கள் நெருப்பைப் பற்ற வைத்து, எனக்கு நிறைய சோறு மற்றும் தண்ணீரைக் கொடுத்தனர்.

நான் ஹோ சி மின் நகரத்திற்கு வந்தபோது, எனது சக ஊழியரான ஜெய்மைப் பார்த்தேன்.

பின்னர் நான் பாஸ்ஜேவின் சகோதரர்களைப் பார்த்தேன், உடனடியாக அவர்களுடன் பேச விரும்பினேன். முகத்தில் அழகான புன்னகை கொண்டு, துன்பப்படாமல் அவரின் சகோதரர் எப்படி இறந்தார் என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டிய பொறுப்பை நான் உணர்ந்தேன்.

அப்போது அம்மா வந்தார். நான் அவரிடம் சொன்னது நினைவிருக்கிறது, "நீங்கள் என்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்தீர்களா?"

மருத்துவமனை உபகரணங்களின் பீப், பீப், பீப் ஒலிக்கத் தொடங்கியது, அவர்கள் என் நுரையீரலில் எதையோ பொருத்தினார்கள்.

வாழ்க்கை திருபியது

நான் அம்மாவை பார்த்ததும் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன். நிச்சயமாக, என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தார்கள். பாஸ்ஜேவின் குடும்பத்துடன் ஒரு கூட்டு இறுதிச் சடங்கை அவர்கள் திட்டமிட்டனர்.

எங்கள் மரணத்தைப் பற்றிய செய்தித்தாள் அறிவிப்புகள் ஏற்கனவே வெளிவந்தன, எனவே நான் வீட்டிற்கு வந்தபோது, இரங்கல் கடிதங்கள் குவிந்து கிடந்தன. அவற்றை படித்தது என் சுயமரியாதைக்கு மிகவும் நல்லதாக இருந்தது. நான் இன்னும் அவற்றை நினைவில் வைத்திருக்கிறேன்.

ஆம், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆனால் என் நண்பர் ஜெய்ம் நம்பிக்கை இழக்கவில்லை.

நான் இறந்துவிட்டேன் என்று நம்ப மறுத்த அவர், நான் இறந்ததாக கருதி பேசியவர்கள் மீது கோபமடைந்தார்.

நான் நெதர்லாந்திற்குத் திரும்பிய நேரத்தில், என் தாடை சீராக தொடங்கியிருந்தது, என் நுரையீரல் தேறி இருந்தது. என் இடுப்பு எலும்புகள் ஒன்றிணைய தொடங்கின.

கால்களில், திசுக்கள் அழுகியிருந்தது மிகவும் தீவிரமான பிரச்னையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, வியட்நாமிய மருத்துவர்கள் அதை சரி செய்ய நிறைய நேரத்தை ஒதுக்கினர்.

நெதர்லாந்தில் உள்ள மருத்துவர்கள், "ஓ, நாங்கள் நிச்சயமாக உங்கள் கால்களை வெட்டியிருப்போம். நாங்கள் அவ்வளவு காலம் சிகிச்சை அளிக்க மாட்டோம்." என்றனர். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருந்தேன்.

பாஸ்ஜேயின் இறுதிச் சடங்கு பயங்கரமான நிகழ்வாக இருந்தது. அவர்கள் என்னை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றார்கள், அது ஒரு திருமணம் போல இருந்தது.

என் நண்பர்கள் அனைவரும் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரும் உண்மையில் என் திருமணத்தில் இருந்திருப்பார்கள். அழகான பேச்சுகள், அழகான இசை.

பின்னர் அவர்கள் அவரை கல்லறைக்கு அழைத்துச் சென்றனர், என்னை அவருக்குப் பின்னால் அழைத்துச் சென்றனர்.

மறவா காதல் நினைவுகள்

காடு எனக்கு ஒரு பாதுகாப்பான இடமாக மாறியது. நிஜ உலகம் ஒரு பயங்கரமான இடமாக மாறியது, ஏனென்றால் நான் எப்போதும் அவருடன் இருந்திருக்கிறேன்.

நான் துக்கத்தின் அனைத்து நிலைகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது, நான் அழுதேன். நான் நிறைய அழுதேன், நான் இன்னும் அவரை இழந்து வாடுகிறேன்.

நான் எப்போதும் அவரைப் பற்றி நிறைய நினைக்கிறேன். வயதாகும்போது, அவர் தவறவிட்ட அனைத்து வாழ்க்கையையும், அவர் செய்யாத அனைத்து விஷயங்களையும் நான் காண்கிறேன். அவர் குழந்தைகள் வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.

விபத்து நடந்த சில மாதங்களில், எனது கல்லூரி நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில், நான் முடிவு செய்தேன், "சரி, நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை. அது முடிந்துவிட்டது. என்று நினைத்தேன்.

ஆனால் பின்னர் ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் பாஸ்ஜேயின் இடத்தை நிரப்பக்கூடிய ஒரே ஒரு நபர் மட்டுமே இருக்கிறார். அது ஜெய்ம். அவர் என்னைக் கண்டுபிடிக்க வியட்நாமுக்கு வந்த சக ஊழியர், வேறு யாரும் நம்பாதபோது நான் உயிருடன் இருப்பதாக நம்பினார்.

"சரி, ஏன் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது?" என்று யோசித்தேன்.

நாங்கள் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றோம்.

என் மகன் மேக்ஸ் ஒரு குழந்தையாக இருக்கும் போது ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தச் செய்தியை நான் எதிர்கொண்டபோது, காட்டில் நான் கற்றுக்கொண்டது, என்னைக் காப்பாற்றியது எது என்பது எனக்கு நினைவுக்கு வந்தது.

உங்களிடம் இருப்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, உங்களிடம் இல்லாததைப் பற்றி பிடிவாதமாக இல்லையென்றால், அழகு வெளிப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு எனது நிலைமையை நான் ஏற்றுக்கொண்டதைப் போலவே, என் மகனின் நோயறிதலையும் ஏற்றுக்கொண்டேன். பின்னர் அவன் யாரென்று நான் பார்த்தேன் - நிபந்தனையற்ற அன்பின் அழகான ஆதாரமாக அவன் இருந்தான்.

நான் என் மகளை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதைப் போலவே, அவளிடம் இன்னும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஆனால் என் மகனிடம் எதிர்பார்ப்புகள் இல்லை. அவன் எனக்கு கொடுக்கும் உண்மையான தூய அன்பு மற்றும் நான் அவனுக்காக கொண்டிருக்கும் அன்பு, அது மட்டுமே.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு