ஞானவாபி மசூதி: கோவில் இருந்த இடத்தில் மசூதியா? தொல்லியல் துறை அறிக்கை என்ன?

காணொளிக் குறிப்பு, ஞானவாபி மசூதி குறித்த இந்திய தொல்லியல் துறை ஆய்வின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதி: கோவில் இருந்த இடத்தில் மசூதியா? தொல்லியல் துறை அறிக்கை என்ன?

ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வின் அறிக்கையை இந்த வழக்கு தொடர்புடைய நபர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த அறிக்கை ஞானவாபி வழக்கில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆய்வு முடிவுகளின்படி, ஞானவாபி வளாகத்தில் உள்ள தற்போதுள்ள கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு இந்து கோவில் இருந்துள்ளது. அரபு பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு கல்வெட்டும் தனக்கு கிடைத்திருப்பதாக இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது. அங்குள்ள மசூதி ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் அதாவது 1676 முதல் 1677 ஆம் ஆண்டுக்கு இடையே கட்டப்பட்டதாக அந்த கல்வெட்டில் கூறுப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்டமாக இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து இந்து மற்றும் இஸ்லாமிய தரப்புகள் ஆலோசனை செய்து வருகின்றன. இந்த வழக்கு வருகின்ற பிப்ரவரி 6 அன்று நீதிமன்றத்தில் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தங்களுக்கும் தொல்லியல் துறையின் அறிக்கையின் நகல் நள்ளிரவில் கிடைத்ததாகவும், தற்போது அந்த அறிக்கை வழக்குரைஞர்களிடம் இருப்பதாகவும் முஸ்லிம்கள் தரப்பு கூறியுள்ளது.

ஞானவாபி மசூதி நிர்வாகத்தைக் கவனிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி இணைச் செயலாளர் எஸ்.எம்.யாசின் கூறுகையில், "இது ஒரு அறிக்கைதான், முடிவு அல்ல. இந்த அறிக்கை சுமார் 839 பக்கங்கள் கொண்டது. அறிக்கையைப் பகுப்பாய்வு செய்ய நேரம் எடுக்கும். பின்னர் இதுகுறித்து நிபுணர்களிடம் ஆலோசித்து கருத்து தெரிவிக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.

பேரரசர் அக்பர் காலத்திற்கு முன்பிருந்தே, சுமார் 150 ஆண்டுகளாக ஞானவாபி மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததாக மசூதி தரப்பு நம்புகிறது. "இதுகுறித்து விரக்தி அடையாமல், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்," என, எஸ்.எம். யாசின் கூறுகிறார்.

இந்த வழக்கின் முக்கிய வாதியான ராக்கி சிங்கின் வழக்குரைஞர் அனுபம் திவேதியிடம் இருந்து 800க்கும் மேற்பட்ட பக்க அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வு கண்டுபிடிப்புகளின் நகலை பிபிசி பெற்றுள்ளது.

ஏ.எஸ்.ஐ. அறிக்கையில், "ஒரு அறைக்குள் கண்டெடுக்கப்பட்ட அரபு-பாரசீக மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு, மசூதி ஔரங்கசீப் ஆட்சியின் 20வது ஆண்டில் (1676-77) கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. எனவே, 17ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் ஆட்சியின் போது ஏற்கெனவே இருந்த கட்டமைப்பு அழிக்கப்பட்டு, அதன் சில பகுதிகள் மாற்றப்பட்டு, கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எஸ்.ஐ ஆய்வில், ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மசூதி தரப்பு நீரூற்று என்று அழைக்கும் வசுகானாவில் சிவலிங்கம் இருப்பதாக இந்து தரப்பு கூறுகிறது.

மனுதாரர் ராக்கி சிங்கின் வழக்குரைஞர் அனுபம் திவேதி, இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். "ஔரங்கசீப் மசூதி கட்டுவதற்கு முன்பு வளாகத்தில் ஓர் இந்து கட்டடமும் கோவிலும் இருந்ததாகக் கூறும் ஏ.எஸ்.ஐ-யின் அறிக்கை, எங்கள் வழக்கு வலுப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. சாட்சியத்தின் பார்வையில் இந்த அறிக்கை மிக முக்கியப் பங்கு வகிக்கும்," என்றார்.

முழு விவரம் காணொளியில்...

ஞானவாபி மசூதி

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)