1971 போரில் கராச்சி தாக்குதல் வெற்றிக்கு வழிவகுத்த ரா உளவாளிகளின் ரகசிய வேலை

பட மூலாதாரம், INDIAN NAVY
1971-ல் இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெகஜீவன் ராம், கடற்படை தளபதி எஸ்.எம்.நந்தா மற்றும் இந்திய உளவு அமைப்பான ராவின் தலைவர் ராம்நாத் காவ் ஆகியோர் பங்கேற்றனர்.
கராச்சி துறைமுகத்தில் பாகிஸ்தான் நவீன கடற்படை கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கடற்படைக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வழங்க முடியுமா என கடற்படை தளபதி நந்தா உளவுத் துறை தலைவர் காவிடம் கேட்டார்.
பாகிஸ்தான் கண்காணிப்பு அமைப்பின் திறனைப் பரிசோதிக்க அதன் புகைப்படங்கள் தேவை என்பதை காவ் அறிந்திருந்தார். இதனை சாதாரண உளவாளிகளால் சேகரிக்க முடியாது. அதற்கென தேர்ந்த சிறப்பு உளவாளிகள் தேவைப்பட்டனர்.
ரகசிய திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மருத்துவரின் கப்பல்

பட மூலாதாரம், Harper Collins
இதற்காக காவ் உடன் பணி செய்த சங்கரன் நாயர் பம்பாயில் (தற்போது மும்பை) இருந்த ஒரு ரா ஏஜெண்டை தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்திற்கான பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.
ஐந்து நாட்கள் கழித்து நாயரைத் தொடர்பு கொண்ட அந்த ஏஜெண்ட் தன்னுடைய திட்டத்தைக் கூறியதோடு இதற்கு உதவக்கூடிய நபரையும் தனக்குத் தெரியும் என்றார். இதனைத் தொடர்ந்து திட்டத்தை இறுதி செய்ய நாயரே மும்பைக்குச் சென்றார்.
இதைப் பற்றி, 'Inside IB and RAW, The Rolling Stone that Gathered Masses' என்ற தன்னுடைய சுயசரிதையில் எழுதியுள்ளார் நாயர், "பம்பாயில் வசித்து வருபவரும் பாகிஸ்தான் வழியாக குவைத் சென்று வரும் பார்ஸி மருத்துவரான கவாஸ்ஜி இந்தப் பணியில் தனக்கு உதவ முடியும் என என்னுடைய ஏஜெண்ட் என்னிடம் தெரிவித்தார்."
ஆனால் பாகிஸ்தானியர்கள் கவாஸ்ஜியின் கப்பலை எப்படி தங்களுடைய துறைமுகத்திற்கு வந்து செல்ல அனுமதித்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.
இதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார். "கவாஸ்ஜியின் குடும்பத்தினர் 1880களில் இருந்தே கப்பல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் பிரிவினைக்குப் பின்பும் கராச்சியில் வசித்து, கராச்சி துறைமுகத்தில் இருந்து செயல்பட்டு வந்தனர். இந்த செல்வந்த பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கராச்சி மற்றும் பம்பாய் என இரண்டு ஊர்களிலும் வாழ்ந்து வந்தனர்" என்றார்.
"இரண்டு மாதங்களுக்கு முன்பு பம்பாய் சுங்கத்துறை அதிகாரிகள் அவரது கப்பலில் கணக்கில் வராத சரக்குகளைப் பறிமுதல் செய்ததால் சிக்கலை எதிர்கொண்டிருந்தார் கவாஸ்ஜி. அவருக்கு எதிராக சுங்கத்துறையின் விசாரணையும் நடைபெற்று வந்தது. அவர் மிகப் பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருந்தது. நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது" என எழுதியுள்ளார்.
சங்கரன் மற்றும் கவாஸ்ஜியின் சந்திப்பு

பட மூலாதாரம், MANAS PUBLICATION
பம்பாய் சுங்கத்துறை தலைவர், சங்கரன் நாயரின் நண்பர் ஆவார். அவரை அழைத்துப் பேசிய நாயர், நலன் விசாரிப்பைத் தொடர்ந்து தனது சிக்கலைக் கூறினார்.
பத்து நிமிடங்கள் கழித்து கவாஸ்ஜிக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரா தனது நிதியிலிருந்து செலுத்தும் என முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக அவருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது என சுங்கத்துறை கடிதம் மூலம் தெரிவிக்கும்.
அந்தக் கடிதத்துடன் நாயர் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய இரண்டு உளவாளிகள் டி.என் சாலையில் இருந்த கவாஸ்ஜியின் மருத்துவமனைக்குச் சென்றனர்.
அவர் தன்னை இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் மேனன் என அறிமுகம் செய்து கொண்டார். அவர் மருத்துவரிடம், "நீங்கள் எனக்காக ஒரு சிறிய வேலை செய்தால் உங்கள் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டது எனக் கூறும் சுங்கத்துறையின் இந்தக் கடிதத்தை நான் உங்களிடம் தருகிறேன்" என்றார்.
மேலும் அவர், "நீங்கள் இதை செய்ய மறுக்கலாம். அச்சூழலில் இந்தக் கடிதத்தை நான் எரித்துவிடுவேன், உங்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்படும்" என்று மருத்துவரிடம் தெரிவித்தார்.
நாயரின் முன்மொழிவை ஏற்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்பதை கவாஸ்ஜி உணர்ந்தார்.
இரண்டு உளவாளிகளும் பாகிஸ்தான் பயணமும்

பட மூலாதாரம், R.K.YADAV
அனுஷா நந்தகுமார் மற்றும் சந்தீப் சாகேத் தங்களுடைய 'The War That Made R&AW', புத்தகத்தில் இதைப்பற்றி எழுதியுள்ளனர். "கவாஸ்ஜி தன்னிடம் இருந்து என்ன வேண்டும் என நாயரிடம் கேட்டார். நீங்கள் அடுத்த முறை பாகிஸ்தான் செல்லும்போது எங்கள் ஆட்கள் இருவரையும் உங்களது கப்பலில் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என நாயர் கூறினார். இரண்டு நாட்கள் கழித்து இந்தப் பயணம் தொடங்க இருந்தது. அவர்கள் இருவரின் பெயரையாவது கூறுங்கள் என கவாஸ்ஜி கேட்டார். அவர்களின் பெயர்கள் 'ராட்' மற்றும் 'மொரியார்டி' என நாயர் தெரிவித்தார். அவர்களின் நிஜப் பெயர்கள் ராவ் மற்றும் மூர்த்தி. ராவ் நாயரின் கடற்படை உதவியாளர், ராவின் புகைப்பட பிரிவில் வல்லுநராக மூர்த்தி இருந்தார்"
இரு தினங்கள் கழித்து கவாஸ்ஜி அவர்கள் இருவருடனும் ஒரு சிறிய கப்பலில் கராச்சிக்குப் புறப்பட்டார். அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்லும் வரை எதுவும் நடக்கவில்லை.
"அதற்குள் பாகிஸ்தானியர்கள், இந்தியா கடினமான திட்டங்களை துணிச்சலாக செய்து முடிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய உளவு அமைப்பை உருவாக்கியுள்ளது என்பதை அறிந்து கொண்டனர்" என அனுஷா மற்றும் சந்தீப் தங்களுடைய புத்தகத்தில் எழுதியுள்ளனர்.
கப்பலில் பதுங்கிக் கொண்ட உளவாளிகள்

பட மூலாதாரம், Getty Images
கவாஸ்ஜியின் கப்பல் கராச்சி துறைமுகத்தை அடைந்தபோது பாகிஸ்தான் சிஐடி ஆய்வாளர் இரு காவலர்களுடன் கப்பலை சோதனை செய்தார். அவர்களைப் பார்த்ததும் மருத்துவர் பதற்றம் அடைந்தார். சில நிமிடங்களில் பாகிஸ்தான் அதிகாரிகள் கப்பலுக்குள் நுழைந்தனர். பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த இருவர் தங்களின் இருக்கையில் இல்லாததால் அவர்கள் பற்றி விசாரித்தனர்.
"காவலர்கள் தங்களைப் பார்க்கக் கூடாது என்பதால் அவர்கள் உள்ளே பதுங்கியிருந்தனர். அவர்கள் இருவரும் எங்கே என கவாஸ்ஜியிடம் அதிகாரிகள் கேட்டபோது நோயாளிகளுக்கான அறையில் இருப்பதாகத் தெரிவித்தார். ஆய்வாளர்கள் தனது காவலர்களிடம் உள்ளே சென்று பரிசோதிக்குமாறு கூறினார்" என அனுஷா மற்றும் சந்தீப் தங்களின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
"நீங்கள் அங்கே செல்லாதீர்கள், இருவருக்கும் சின்னம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் ஒருத்தவருக்கு தொற்று ஏற்பட, இன்னொருவருக்கும் அது பரவியது. அதனால் அவர்கள் குணமாகும் வரை தனிமைப்படுத்தி தனி அறையில் வைத்துள்ளோம் என மருத்துவர் கூறவே, பாகிஸ்தான் ஆய்வாளர் ஒப்புக் கொண்டார்"
"கவாஸ்ஜி அடிக்கடி கராச்சி சென்று வந்துள்ளார். அவரை நம்பாமல் இருக்க அவர்களுக்குக் காரணம் இல்லை. ஆய்வாளர் இறங்கிய பிறகு கவாஸ்ஜி நிம்மதி அடைந்தார்"
கராச்சி துறைமுகத்தை புகைப்படம் எடுத்த உளவாளிகள்

பட மூலாதாரம், Getty Images
நள்ளிரவு புறப்பட்ட கவாஸ்ஜியின் கப்பல் மெல்ல நகர்ந்து துறைமுகத்தின் நுழைவுவாயிலில் நின்றது. இந்த இடம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்தது. இரு உளவாளிகளும் தங்களின் கேமராவால் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.
துணை அட்மிரல் ஜி.எம் ஹிராநந்தானி தன்னுடைய 'Transition to Triumph (1965-1975)' என்கிற புத்தகத்தில், "ரா ஏஜெண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்கள் முன் இருந்த இலக்கையும் பார்த்தனர். இது சமீபத்தில் தான் கட்டப்பட்டதாக தெரிகிறது என ராட் கூறினார். அது சமீபத்தில் தான் கட்டப்பட்டிருந்தது, அங்கு விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் நிறுவப்பட்டிருந்தன" என எழுதியுள்ளனர்.
"பாகிஸ்தான், கராச்சி துறைமுகத்தை போருக்கு தயார் செய்து கொண்டிருந்தது. இருவரும் விரைவாக அந்த இடத்தை புகைப்படங்கள் எடுத்தனர்."
"இருவரும் பீரங்கிகள் மற்றும் அனைத்து விதமான கட்டமைப்புகளையும் புகைப்படம் எடுத்தனர். அவை போக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கடற்படை கப்பல்களையும் புகைப்படம் எடுத்தனர்"
புகைப்படங்களை ஆய்வு செய்த உளவுத்துறை

பட மூலாதாரம், HARPER COLLINS
"ஒரு மணி நேரம் கழித்து, கப்பல் மாலுமிகள் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு பிறகு இரு உளவாளிகளும் மீண்டும் நோயாளிகளுக்கான அறைக்குச் சென்று மறுநாள் வரை அங்கேயே தங்கினர். ஒருநாள் கழித்து அவர்களது கப்பல் கராச்சி துறைமுகத்தைவிட்டு கிளம்பியது. கப்பல் கிளம்பியபோது அவர்கள் பாறையின் மறுபுறத்தையும் புகைப்படங்கள் எடுத்தனர். அதன் பிறகு கப்பல் அரேபியக் கடல் வழியாக குவைத்தை நோக்கிச் சென்றது"
குவைத் வந்தடைந்த பிறகு ராவ் மற்றும் மூர்த்தி கப்பலில் இருந்து நேராக இந்திய தூதரகத்திற்குச் சென்றனர். அங்கிருந்து கேமரா ஃபிலிம்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாள் இருவரும் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
"வார் ரூமில் ஜெகஜீவன் ராம், ராம்நாத் காவ் மற்றும் அட்மிரல் நந்தா ஆகியோர் புகைப்படங்களை ஆய்வு செய்தனர். கராச்சி துறைமுகத்தின் படங்களை காண்பித்தார் மூர்த்தி. அங்கிருந்த அனைவரும் ஒரு விதமான பிரமிப்புடன் அந்த புகைப்படங்களைப் பார்த்தனர்" என அனுஷா நந்தகுமார் மற்றும் சந்தீப் சாகேத் தங்களுடைய புத்தகத்தில் எழுதியுள்ளன்ர்.

பட மூலாதாரம், Getty Images
"கராச்சி துறைமுக உள்பகுதியின் புகைப்படங்களை இந்தியா முதல்முறையாக இப்போது தான் பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் எந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது, அதன் திறன்கள் என்ன என்பதை இந்திய கடற்படை அறிந்துகொண்டது."
கராச்சியில் எங்கு எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது, எங்கு கடற்படை கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.
டிசம்பர் 3, 1971-ல் அதிகாரப்பூர்வ போர் பிரகடனத்துக்கு முன்பாக இந்தியா கராச்சி துறைமுகத்தின் முழுமையான வரைபடத்தைப் பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அதன் சிறந்த டால்பின் ரக நீர்முழ்கிகளை நிலைநிறுத்தியிருந்தது. அதன் 8000 கடற்படை வீரர்களில், 5000 பேர் மட்டும் தான் போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
"போர் தொடங்கியபோது பாகிஸ்தான் கடற்படை வீரர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. ஏனென்றால் வங்காள வீரர்கள் பாகிஸ்தான் கடற்படையில் இருந்து விலகியிருந்தனர் அல்லது பாகிஸ்தான் அவர்கள் மீதான நம்பிக்கையை இழந்திருந்தது." என அட்மிரல் நந்தா தன்னுடைய 'The Man Who Bombed Karachi' புத்தகத்தில் எழுதியிருந்தார்.
மேலும் அதில், "யாஹ்யா கானின் அணுகுமுறை என்னவாக இருந்தது என்றால் போர் குறித்து நான்கு நாட்களுக்கு முன்பு நவம்பர் 29-ஆம் தேதி வரை கடற்படை தளபதியிடம் அவர் தெரிவிக்கவில்லை"

பட மூலாதாரம், Getty Images
இந்திரா காந்தியின் அனுமதியைப் பெற்ற அட்மிரல் நந்தா

பட மூலாதாரம், ADMIRAL NANDA FAMILY
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே டிசம்பர் 3, 1971 அன்று போர் தொடங்கிய போது, இந்திய கடற்படை கராச்சியைத் தாக்கும் அதன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது.
அதற்கு முன்பு அக்டோபரில் இந்திரா காந்தியைச் சந்திக்கச் சென்றிருந்தார் அட்மிரல் நந்தா.
கடற்படையின் முன்தயாரிப்புப் பணிகளை விவரித்த பிறகு அவர் இந்திரா காந்தியிடம், கடற்படை கராச்சியைத் தாக்கினால் அரசுக்கு எதுவும் அரசியல் எதிர்ப்புகள் இருக்குமா எனக் கேட்டார்.
இதைப் பற்றி தன்னுடைய சுயசரிதையில் எழுதியுள்ளார் நந்தா, "ஆம் அல்லது இல்லை எனப் பதில் அளிக்காமல், ஏன் இதைக் கேட்கிறீர்கள்" என இந்திரா காந்தி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நான், "1965-ல் கடற்படை இந்திய கடல் எல்லையைத் தாண்டி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள க்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது, இதனால் எங்களுக்கு நிறைய சிக்கல்கள் எழுந்தன" எனப் பதிலளித்தேன்.
சிறிது நேரம் யோசித்த இந்தியா காந்தி, "அட்மிரல், போர் நடக்கிறது என்றால், அது போர் தான்'. எனக் கூறினார். நான் 'மேடம், எனக்கான பதில் கிடைத்துவிட்டது" எனக் கூறி நன்றி தெரிவித்துவந்தேன்.
பாகிஸ்தானின் கவனம் திசைதிருப்பப்பட்டது
கராச்சி துறைமுகத்தை கடற்படை தாக்குவதற்கு முன்பு, இந்திய விமானப்படை கராச்சி, மாஹிர், பாடின் விமானப்படை தளங்களின் மீது குண்டுகளை வீசியது. அவர்கள் கராச்சி துறைமுகத்தின் மீதும் தொடர்ந்து குண்டுகளை வீசினர்.
இது பாகிஸ்தானின் கவனத்தை வான்வழி பக்கம் திருப்புவதற்கான திட்டம் என எழுதியுள்ளார் நந்தா. இதன்மூலம் பாகிஸ்தானின் கவனம் வான்வழி சண்டை பக்கம் திருப்பப்பட்டு நம்முடைய கப்பல்கள் கராச்சி நோக்கி செல்வதை அவர்கள் கணிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "எனக்கு கராச்சியை எனது கையின் பின்பக்கத்தைப் போலத் தெரியும். எனது குழந்தைப் பருவத்தை நான் அங்கு தான் கழித்தேன். இரண்டாவது அந்த இடத்தைப் பற்றி நம்முடைய உளவுப் பிரிவு துல்லியமான தகவல்களை வழங்கியது. நான் எண்ணெய் கிடங்குகளைக் குறிவைப்பது எவ்வளவு திறம்பட இருக்கும் என மதிப்பிடுமாறு என் அதிகாரிகளிடம் கூறியிருந்தேன்" என்றார்.

கராச்சி மீது ஏவுகணைப் படகு தாக்குதல்
1971-ன் தொடக்கத்தில் இந்தியா சோவியத் ஒன்றியத்திடமிருந்து ஓசா-1 ஏவுகணைப் படகுகளைப் பெற்றது.
கடற்கரைப் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டிருந்த அதனை, கடற்படை கமாண்டர்கள் அவற்றை கராச்சியைத் தாக்குவதற்குப் பயன்படுத்த முடிவு செய்தனர்.
கடற்படை விமானங்கள் கராச்சியில் குண்டுகளை வீசிக்கொண்டிருந்த நேரத்தில் மூன்று ஓசா-1 ஏவுகணை படகுகள் கராச்சியை நோக்கி நகரத் தொடங்கின. இதற்கு ஆபரேஷன் ட்ரைடண்ட் எனப் பெயரிடப்பட்டிருந்தது, இதன் நோக்கம் கராச்சி துறைமுகத்தை தகர்க்க வேண்டும் என்பது தான்.
மூன்று ஏவுகணைப் படகுகள் பாகிஸ்தான் எல்லை வரை கொண்டு செல்லப்பட்டன. கராச்சியில் இருந்து 250 கிலோமீட்டர் நிலைநிறுத்தப்பட்டது.
"முதலில் இந்த ஏவுகணைப் படகு பி.என்.எஸ் என்கிற கைபர் என்கிற பாகிஸ்தான் கப்பலை மூழ்கடித்தது. இந்தத் தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்று கூட அவர்களால் கணிக்க முடியவில்லை. இவை இந்திய விமானப்படையின் விமானங்களால் தாக்கப்பட்டது என அவர்கள் நினைத்தனர்" என அனுஷா மற்றும் சந்தீப் கூறியுள்ளனர்.
"அதன் பிறகு இரண்டாவது ஏவுகணைப் படகு, இன்னொரு கப்பலையும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றையும் மூழ்கடித்தது. மூன்றாவது ஏவுகணைப் படகு கராச்சி துறைமுகத்தைக் குறிவைத்து எண்ணெய் கிடங்குகளை அழித்தது. ராவ் மற்றும் மூர்த்தி எடுத்த புகைப்படங்கள் இந்தத் தாக்குதலுக்கு மிகவும் உதவியாக இருந்தன" என எழுதியுள்ளார் சாகேத்.
இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் கடற்படையின் சண்டையிடும் திறனை நிர்மூலமாக்கியது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இந்தத் தாக்குதலால், கராச்சி துறைமுகத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் தனது அனைத்து கப்பல்களையும் வரவழைத்தது.
சில தினங்கள் கழித்து, கராச்சி துறைமுகத்தை முடக்கும் ஆபரேஷன் பைதானும் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மேற்கு பாகிஸ்தானை, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து முழுவதுமாக தனிமைப்படுத்த வேண்டும் என்பது தான், அது வெற்றிகரமாகவும் முடிந்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












