இந்தியாவுடன் பதற்றம்: பாகிஸ்தானின் 2 முக்கிய கவலைகள் இதுவா?

இந்தியா-பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1971 போரின் போது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை இந்தியா முடக்கியது
    • எழுதியவர், ரஜனீஷ் குமார் 
    • பதவி, பிபிசி நிருபர்

இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அங்கிருந்து மோதலுக்கான வாய்ப்புகள் இன்னும் விரிவடையலாம்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பல முடிவுகள் எடுத்தது இந்தியா. பதிலடியாக அதற்கு மறுநாள் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல முடிவுகள் எடுத்தது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தம் செய்த முடிவை பாகிஸ்தான் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இந்த இடைநிறுத்தத்தின் போது முழுவதுமாக இந்தியாவால் நீரை நிறுத்த முடிந்தால், அது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமான சூழலாக இருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா நீரை நிறுத்திவிட்டால் அது 'போர்ப் பிரகடனமாக பார்க்கப்படும்' என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

பாகிஸ்தானின் மிகப் பிரபலமான பத்திரிகையாளரும், ஆய்வாளருமான நஜம் சேத்தி பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சியான சமா டிவியில் பேசும்போது, "இரண்டு விஷயங்களை வைத்து இந்தியா போரை ஆரம்பித்து விட்டது என்று பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளும். ஒன்று நீரை நிறுத்துவது, இன்னொன்று கராச்சி துறைமுகத்தை மறிப்பது. இந்த இரண்டையும் பாகிஸ்தான் போர்ச் செயல்பாடுகள் என்றுதான் கருதும். அப்படி ஒரு சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூட நமக்கு உரிமை இருக்கிறது. இதில் பாகிஸ்தானின் எண்ணம் தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் பாகிஸ்தானுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை", என்று கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கராச்சி துறைமுகம் பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் அங்கிருந்துதான் அதன் சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது.

பாகிஸ்தானின் உயிர்நாடி

"இந்தியா கராச்சி துறைமுகத்தை மறித்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் மறிக்கப்படும். இதுமட்டும் நடந்தால் இந்தியா போரைத் தொடங்கி விட்டதாகத்தான் நாம் நினைக்க வேண்டும். போர் வந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் போர் மூண்டால், எந்த நிலையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். இதில் இரண்டு நிலைகள் உள்ளன" என்றார் நஜம் சேத்தி.

"ஒருவேளை நம் ராணுவம் எல்லையில் தோற்றுப்போய் இந்திய ராணுவம் முன்னேறி நம் நாட்டுக்குள் வரலாம். அப்படி ஒரு சூழலில் நாம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். இரண்டாவது சூழல் பாகிஸ்தானின் எந்தப் பகுதியையாவது இந்தியா ஆக்கிரமிக்கலாம். அப்போதும் நாம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதேபோல், அணு ஆயுதத்தை நாம் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று நமக்கு எந்தக் கொள்கையும் இல்லை," என்றார் அவர்.

இருப்பினும், அணு ஆயுதங்களைத் தான் முதலில் பயன்படுத்த மாட்டேன் என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது. ஆனால் ஆகஸ்ட் 2019ல் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "இதுவரை நமது கொள்கை நாம் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதுதான். ஆனால் வருங்காலத்தில் நிலைமையைப் பொறுத்து இந்தக் கொள்கை மாறலாம்," என்று கூறியுள்ளார்.

'இந்தியா இஸ்ரேல் இல்லை, நாம் பாலத்தீனமும் இல்லை'

2016லேயே, அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிகார், இப்படி ஒரு கொள்கைக்கு இந்தியா இனியும் கட்டுப்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் பலரும், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை விமர்சிக்கிறார்கள்.

சிந்து நதிநீர் ஒப்பந்தம், பாகிஸ்தானுக்கு உயிர்நாடி போன்றது. கராச்சி துறைமுகம் செயல்படுவதும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இந்தியாவுடன் இப்படிப்பட்ட பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில் பாகிஸ்தான் இந்த இரண்டு விஷயங்கள் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகிறது.

"ஒரே இரவில் இந்தியாவால் நீரை நிறுத்த முடியாது. மொத்தமாக நிறுத்துவதற்கு குறைந்தபட்சம் 5 - 10 வருடங்கள் ஆகலாம். இந்த முடிவை இந்தியா எடுத்தால், இதே விஷயத்தை சீனாவும் இந்தியாவுக்குச் செய்ய முடியும். இந்தியா கொஞ்சம் நம்மை பயமுறுத்திப் பார்க்கலாம். ஆனால் அதனால் மொத்தமாக நீரை நிறுத்த முடியாது. இந்தியா இஸ்ரேலும் அல்ல, நாம் பாலத்தீனமும் அல்ல. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) இந்தியா கொஞ்சம் விஷயத்தைத் தீவிரப்படுத்தலாம். போர் நிறுத்தத்தை இந்தியா மீறலாம். அப்படி ஒரு சூழலில், மேற்கில் இருந்து ராணுவம் அழைத்து வரப்பட்டு எல்லை பகுதியில் நிறுத்தப்படலாம். ஆனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் நன்றாக இல்லை. அதனால் சிரமங்கள் இருக்கும்," என்றார் நஜம் சேத்தி.

'போர்ச் செயல்பாடு'

சிந்து நதிநீர் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் இந்தியா இடை நிறுத்தியுள்ளது

வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு வந்து கொண்டிருக்கும் நீர் நிறுத்தப்பட்டாலோ அல்லது வேறு எங்காவது மடைமாற்றப்பட்டாலோ அது போராகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும்," என்று கூறியது பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு.

இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடியிடம், சிந்து நதிநீர் இடைநிறுத்தத்தையும், கராச்சி துறைமுகத்தை தடுப்பதையும் போர்ச் செயல்பாடாகத்தான் பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.

"பாகிஸ்தானின் ஜெனரல் காலித் கித்வாயும் இதையேதான் கூறியிருக்கிறார். இவை இரண்டுமே பாகிஸ்தானுக்கு உயிர்நாடிகளாகும். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு நீர் கிடைக்காவிட்டால் அந்நாட்டின் பொருளாதாரம் சிதைந்து போகும். அதேபோல், கராச்சி துறைமுகத்தை முடக்கினால் பாகிஸ்தான் முழுமையாக துண்டிக்கப்படும். கராச்சி துறைமுகத்தின் வழியாகத்தான் பாகிஸ்தானின் வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. எனவே, இந்த இரண்டையும் பாகிஸ்தானால் சாதாரணமாகப் பார்க்க முடியாது என்று நம்புகிறேன்,"என்றார் அவர்.

"இந்தியக் கப்பல் படை இப்போது நல்ல நிலைமையில் உள்ளது. அதனால் அது கராச்சி துறைமுகத்தை முடக்கி வைக்கத் தேவையான திறனுடன் இருக்கிறது," என்றார் ராகுல் பேடி.

"என்னுடைய இரண்டாவது கவலை ஷிம்லா ஒப்பந்தம் முறிக்கப்பட்ட பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படியென்றால் இந்தியாவும், பாகிஸ்தானும் அடுத்தவர் நாட்டுக்குள் பகிரங்கமாக வலிமையைப் பயன்படுத்தி நுழையலாம். ஷிம்லா ஒப்பந்தத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுதான் நடைமுறைப்படி முறையான எல்லையாக இருக்கும். ஆனால், இந்த எல்லையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பாகிஸ்தான் கூறுவது போலத்தான் இது," என்றார் ராகுல் பேடி.

முன்பு போல இல்லை

 இந்திரா காந்தி, சுல்ஃபிகர் அலி பூட்டோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்ஃபிகர் அலி பூட்டோ மற்றும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் 1972ல் ஷிம்லாவுக்குச் சென்றபோது

1971ல் இருந்தது போல இப்போது பாகிஸ்தான் இல்லை. அதனால் போரின் முடிவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசித் தெரிவித்துள்ளார்.

1971- உடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் எவ்வளவு தூரம் மாறியுள்ளது என்று ராகுல் பேடியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

"பாகிஸ்தான் 1971ல் இருந்ததைப் போல இப்போது இல்லை என்று சொன்னால், இந்தியாவும் அப்போது இருந்ததைப் போல இல்லைதான். ஆனால், 1971ல் இருந்ததைப் போல போர், இந்தியாவுக்கு மட்டுமே சாதகமாக இருக்கப் போவதில்லை என்பது உண்மைதான். அதற்கு முக்கிய காரணம் இரண்டு நாடுகளிடமுமே அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த சூழல் எனக்கு பயம் கொடுக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

சீனாவும், ரஷ்யாவும் இந்தப் போரை நடக்க விடாது. ரஷ்யா இந்தியாவுடனும், சீனா பாகிஸ்தானுடனும் கரம் கோர்க்கும். ஆனால், இந்த இரண்டு நாடுகளுக்காக ரஷ்யாவும் சீனாவும் சண்டை போட்டுக் கொள்ளாது. அப்படி ஒரு சூழலில் இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை போட்டுக் கொள்வதை விரும்பாது," என்று பேடி குறிப்பிட்டார்.

பாகிஸ்தான், தனது நாட்டின் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் செய்தித் தொலைக்காட்சியான ஜியோ டிவிக்கு பேட்டி கொடுத்த பாகிஸ்தான் சீனா இன்ஸ்டிடியூட் எனும் சிந்தனைக்குழுவின் சேர்மன் முஷாஹித் ஹுசைன் சையது, இந்த முடிவு இந்தியாவுக்கு லட்சக்கணக்கான டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்குமான வர்த்தகம் துபை வழியாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், இப்போது அதுவும் நிறுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது," என்றார் அவர்.

பாகிஸ்தானின் போர் ஆய்வாளர் சையது முகமது அலி, பாகிஸ்தான் செய்தியாளர் காம்ரான் கானுடன் பேசும்போது, "கடந்த 78 வருடங்களில், தண்ணீரை நிறுத்துவது பற்றி, இப்போதுதான் முதன்முறையாக இந்தியா பேசியிருக்கிறது. 24 கோடி பாகிஸ்தானியர்களின் வாழ்க்கை இந்த நீரோடு தொடர்பு கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்க்கைக்கு பிரச்னை என்றால், நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்.

1971 இந்தியாவின் ராஜ்ஜீய வெற்றிக்குக் காரணம் அப்போது பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது ஷிம்லா ஒப்பந்தத்தை நாங்கள் இடைநிறுத்தி வைத்திருப்பதால் இப்போது எந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடும் இல்லை," என்று கூறினார்.

"இந்தியா எங்களது விவசாயத்தைத் தண்ணீர் கொடுக்காமல் அழித்தால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும். பாகிஸ்தானின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது. அப்படி நடந்தால் பாகிஸ்தான் அந்த வலியைப் பொறுத்துக் கொள்ளாது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் நீர் வழங்குவதை நிறுத்த இந்தியா ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதோடு பாகிஸ்தானுக்கு வரும் நீர்வரத்தையும் அது குறைத்துள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் சீனாவையும் தொடர்பு கொள்ளலாம்," என்றார் அவர்.

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும், ஷிம்லா ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு வலைகளாக நிபுணர்கள் பலர் பார்க்கிறார்கள்.

"இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பெரும் பதற்றத்துக்கு நடுவே சிந்து நதிநீர் ஒப்பந்தமும், ஷிம்லா ஒப்பந்தமும் மட்டும்தான் ஒத்துழைப்புக்கும், தகவல் தொடர்புக்குமான கதவைத் திறந்து விடுகின்றன.

ஆனால், இந்த இரண்டு ஒப்பந்தங்களில் இருந்து வெளியே வந்த பிறகு பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரு சிக்கலான சூழலை அடைந்துள்ளன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இப்போதைய சூழலைப் பார்த்து உலகம் கவலைப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சில முக்கிய முடிவுகள் எடுத்தது. அதன் பிறகு, பாகிஸ்தான் எடுத்தது. இதைத் தாண்டியும் இந்த இரண்டு நாடுகள் மீதும் அதிக அழுத்தம் இருக்கிறது. மோதலுக்கான வாய்ப்புகள் மிக அதிகம்," என்று பிரிட்டன் செய்தித்தாளான ஃபினான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் தெற்காசிய விவாகரங்களின் ஆய்வாளர் மைக்கேல் கூகல்மன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு