ஜோ பைடனால் முடியாத காஸா போர் நிறுத்தத்தை டிரம்ப் சாதித்தது எப்படி?
செப்டம்பர் 9-ஆம் தேதி, கத்தாரில் ஹமாஸ் பேச்சுவார்த்தை குழு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பை இன்னும் தள்ளி வைப்பதாக தெரிந்தது.
இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் நட்பு நாடான கத்தாரின் இறையாண்மையை மீறியதோடு, அந்த மோதல் ஒரு பிராந்திய போராக பரவும் அபாயத்தையும் உருவாக்கியது. அப்போது, ராஜ்ஜீய முயற்சிகள் முற்றிலும் சீர்குலைந்ததாக தெரிந்தது. ஆனால், அந்தத் தருணமே பின்னர் ஒரு திருப்புமுனையாக மாறியது.
அந்தச் சம்பவத்தை தொடர்ந்து, மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். டிரம்பும், அவருக்கு முன் பதவி வகித்த அதிபர் ஜோ பைடனும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த இலக்கை அடைய முயற்சித்து வந்தனர்.
இந்த ஒப்பந்தம் நீடித்தால், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
பைடனால் சாத்தியப்படுத்த முடியாததை டிரம்ப் சாத்தியப்படுத்தியது எப்படி?
டிரம்பின் தனித்துவமான பாணியும், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுடனான அவரது வலுவான உறவுகளும் இந்த முன்னேற்றத்திற்கு உதவின. அதே நேரம், ராஜ்ஜீய சாதனைகளைப் போல இருவரது கைக்கும் அப்பாற்ப்பட்ட சில விஷயங்களும் இருந்தன.
முதலில் நெதன்யாகு மற்றும் டிரம்ப் இடையே இருந்த நெருங்கிய உறவு பற்றி பார்ப்போம்.
பொது இடங்களில், டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் எப்போதும் சிரித்த முகத்தோடே தென்படுகிறார்கள். இஸ்ரேலுக்கு என்னைப் போன்ற நண்பர் வேறு யாரும் இல்லை' என்று டிரம்ப் பெருமையுடன் சொல்கிறார்.
நெதன்யாகு அவரை "வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்கு கிடைத்த மிகச் சிறந்த கூட்டாளி" என்று புகழ்கிறார். இது வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல், பல முக்கிய நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டுள்ளன.
டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றினார். பாலத்தீன மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றங்கள் சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானவை என்ற அமெரிக்காவின் நீண்டகால நிலைப்பாட்டையும் அவர் கைவிட்டார்.
இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் இரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய போது, அமெரிக்க விமானங்கள் மூலம் மிக சக்திவாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தி இரானின் அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை தாக்க டிரம்ப் உத்தரவிட்டார்.
இது போன்ற நிகழ்வுகள், இஸ்ரேல் மீது மறைமுகமாக அதிக அழுத்தம் கொடுக்க டிரம்புக்கு வாய்ப்பளித்திருக்கலாம்.
இஸ்ரேல் பிரதமர் மீது டிரம்ப் காட்டிய உறுதியும், அவர் பயன்படுத்திய அழுத்தத்தின் அளவும் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்ததாக சர்வதேச அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளையை சேர்ந்த ஆரோன் டேவிட் மில்லர் கூறுகிறார்.
"ஒரு அமெரிக்க அதிபர் இஸ்ரேலிய பிரதமரிடம் நீங்கள் இணங்க வேண்டும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்' என்று நேரடியாக இதற்கு முன்பு சொன்னதற்கான உதாரணமே இல்லை" என்கிறார் அவர்.
மறுபுறம் பார்த்தால் நெதன்யாகு அரசாங்கத்துடனான ஜோ பைடனின் உறவு தொடக்கம் முதலே பலவீனமாக இருந்தது.
காஸா போர் குறித்து பைடனின் ஜனநாயகக் கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தன.
எனவே பைடன் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் அவரது உள்நாட்டு ஆதரவை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விஷயத்தில் டிரம்புக்கு இருக்கும் உறுதியான குடியரசுக் கட்சியினரின் ஆதரவு, அரசியல் ரீதியாக அதிக சுதந்திரத்தை அவருக்கு வழங்கியது.
அதே நேரம், உள்நாட்டு அரசியல், தனிப்பட்ட உறவுகள் என்பதை தாண்டி, பைடன் ஆட்சி காலகட்டத்தில் இஸ்ரேல் அமைதிக்குத் தயாராகவும் இல்லை.
டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று எட்டு மாதத்துக்குள்ளாகவே இரான் கட்டுப்படுத்தப்பட்டது. ஹெஸ்பொலா பலவீனமடைந்தது. காஸா அழிவு நிலையில் இருந்தது. அனைத்து முக்கிய உத்தி சார்ந்த இலக்குகளும் நிறைவேற்றப்பட்டிருந்தன.
அதே நேரம் வளைகுடா நாடுகளுடன் டிரம்புக்கு இருந்த வணிக உறவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
காஸாவில் இஸ்ரேலுக்கு டிரம்ப் சுதந்திரம் கொடுத்திருந்தார். இரானில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ராணுவ உதவியையும் அளித்தார். ஆனால், கத்தார் மண்ணில் நடந்த தாக்குதல் முற்றிலும் வேறுபட்ட விஷயம்.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப் நிர்வாக அதிகாரிகள், இந்தத் தாக்குதலை திருப்புமுனை என்று குறிப்பிட்டனர்.
டிரம்புக்கும் வளைகுடா நாடுகளுக்குமான நெருக்கமான உறவுகள் நன்கு அறியப்பட்டவை. டிரம்புக்கு கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடன் வணிகத் தொடர்புகள் உள்ளன.
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்கிய ஆபிரகாம் ஒப்பந்தம், டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் மிகப்பெரிய ராஜீய சாதனையாகக் கருதப்படுகிறது.
ஒருபுறம் நெதன்யாகுவுடனான டிரம்பின் உறவு, ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அவருக்கு உதவியிருக்கலாம் என்றால், இஸ்லாமிய தலைவர்களுடனான டிரம்பின் நீண்டகால உறவு ஹமாஸை ஒப்பந்தத்தை ஏற்க வைக்க உதவியிருக்கலாம்.
"டிரம்ப் இஸ்ரேலியர்களுடனும், மறைமுகமாக ஹமாஸுடனும் செல்வாக்கு செலுத்தும் நிலையை உருவாக்கினார் " என்கிறார் உத்திசார் மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தை சேர்ந்த ஜான் ஆல்டர்மேன்
"தனக்கு ஏற்றாற்போல செயல்படுவது முந்தைய அதிபர்களுக்கு சவாலாக இருந்தது. ஆனால் டிரம்ப் அதில் வெற்றி பெற்றார் என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது, இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டதுடன், காஸா பகுதியிலிருந்து குறிப்பிட்ட அளவு வெளியேறவும் உறுதியளித்துள்ளது. மறுபுறம், ஹமாஸ் அக்டோபர் 7 பிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
எனவே காஸாவை சிதைத்து, 67,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களின் மரணத்திற்கும் காரணமான இந்தப் போருக்கான முடிவு, தற்போது சாத்தியமாகத் தோன்றுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



