You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிஎஸ்கே ரசிகர்களை முதல் போட்டியிலேயே கவர்ந்த 'ஆயுஷ் மாத்ரே' அணியில் இடம் பிடித்த சுவாரஸ்ய பின்னணி
சென்னை - மும்பை இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை தோல்வியை சந்தித்தாலும், ஆயூஷ் மாத்ரேவின் ஆட்டம் நிச்சயம் சென்னை ரசிகர்களை கவர்ந்திருக்கும்.
ஆயூஷ் மாத்ரேவுக்கு 17 வயதுதான். சென்னை அணியின் இளம் வீரரான இவர், தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் எனும் ஜாம்பவான் அணியை எதிர்கொண்டார்.
ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே வெளியேற, அவருக்குப் பதிலாக அன்கேப்டு பிளேயரான ஆயுஷ் மாத்ரேவை 30 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது. இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஏமாற்றம் தந்த ராகுல் திரிபாதிக்குப் பதிலாக நேற்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் மாத்ரே சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணியின் ரன்ரேட் மிகவும் மந்தமாக இருக்கையில் களமிறங்கிய மாத்ரே, அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடினார். 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் அவர் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார்.
நேற்றைய போட்டியில் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா விரைவாக ஆட்டமிழக்க, நான்காம் ஓவரில் களம் இறங்கினார் ஆயூஷ். அதே ஓவரின் நான்காம் பந்தில் பவுண்டரி, அடுத்த இரண்டு பந்துகளில் சிக்ஸர் என துவக்கத்திலே தனது அதிரடியை காண்பித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தார். இறுதியில் ஆயுஷ் மாத்ரே தீபக் சஹர் ஓவரில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தோனியைக் கவர்ந்த ஆயுஷ் மாத்ரே
ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த அவரது உறவினரான ஒரு சிறுவன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். சிஎஸ்கே சமூக ஊடக பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த காணொளி சிறிது நேரத்தில் வைரலானது. அந்த சிறுவனை மட்டுமல்ல பல வீரர்களையும், ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஆயூஷ் மாத்ரே.
களத்தில் அவர் அடித்த அதிரடி ஷாட்கள், டிரெஸிங் ரூமில் இருந்த கேப்டன் தோனியின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
போட்டிக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ஆயுஷ் மாத்ரேவை வெகுவாக பாராட்டினார். "அவர் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் தனது ஷாட்களை சிறப்பாகத் தேர்ந்தெடுத்தார். அவரது இயல்பான ஷாட்களை விளையாட விரும்பினார். நாங்கள் அவரது ஆட்டத்தை அதிகம் பார்த்ததில்லை." என்று தோனி தெரிவித்தார்.
பயிற்சியின் போது தோனியையும், பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கையும் தனது திறமையால் கவர்ந்துள்ளார் ஆயுஷ்.
''பயிற்சியின் போது சில வீரர்களை நாங்கள் சோதித்தோம். அதில் இவர் தனித்து இருந்தார்.'' என நேற்றைய போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறினார்.
''பயிற்சியின் போது மிகவும் ஈர்க்கக் கூடியவராக இருந்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடிய விதத்தை பார்த்து தோனியும் நானும் ஈர்க்கப்பட்டோம். ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, நாங்கள் எதிர்காலத்தை பற்றி யோசித்தோம். அவரைத் தேர்ந்தெடுப்பது எளிதான முடிவாக இருந்தது." என ஃப்ளெமிங் கூறினார்.
ஆனால், உண்மையில் கடந்த ஐபில் ஏலத்தில் ஆயூஷ் மாத்ரேவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என இஎஸ்பிஎன் இணையதள செய்தி கூறுகிறது. ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறியதால்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
யார் இந்த ஆயுஷ் மாத்ரே?
ஆயூஷ் மாத்ரே மும்பையை சேர்ந்தவர். வான்கடே மைதானம் அவருக்கு தாய் வீடு போன்றது.
அதை குறிப்பிட்டு பேசிய ஃப்ளெமிங்,''மேடை பெரியதாக இருக்கலாம் அந்த இடத்துக்கு (வான்கடே மைதானம்) அவர் நன்கு பரிச்சயமானவர். நாங்கள் அவரை நம்பினோம். அவர் மிகவும் இயல்பாக ஆடினார். இது உண்மையில் ஒரு சிறப்பான அறிமுக ஆட்டம்'' என்றார்.
முதல் தர கிரிக்கெட்டில் அதிகம் விளையாடாவிட்டாலும், மாத்ரேவின் "அச்சமற்ற" அணுகுமுறை தனித்து நின்றது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா இஎஸ்பிஎன் டைம் அவுட் நிகழ்வில் கூறினார்.
ஆயூஷ் ஒரு வலது கை பேட்டர். 19 வயதுக்குட்பட்ட 2024 ஆசிய கோப்பையில் மூன்று போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
இரானி கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு ஆண்டு அறிமுகமான ஆயூஷ், ஒரே ஆட்டத்தில் 176 ரன்களை குவித்தார். இதுவரை 9 முதல்தர போட்டியில் ஆடியுள்ள அவர் 504 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் அடக்கம்.
'லிஸ்ட் ஏ' போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை ஆடியுள்ள அவர், ஏழு ஆட்டத்தில் 458 ரன்களை குவித்துள்ளார்.
நாகாலாந்துக்கு எதிரான அவரது சதம், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் உலக சாதனையை முறியடித்தது. ஆண்கள் சீனியர் 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் 150+ ரன்கள் எடுத்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆறு வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய ஆயூஷ் மாத்ரே, தனது பத்து வயதில் தீவிரமாக ஈடுபட துவங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு