You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் மோதி - ஸ்டாலின் இடையிலான 5 நிமிட சந்திப்பில் என்ன நடந்தது?
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்.
இதற்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோதியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
டெல்லியிலிருந்து புறப்படும் முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், நிறைவேற்றுகிறாரா என்று பார்க்கலாம் எனவும் கூறினார்.
முதலமைச்சர் வெள்ளைக்கொடியுடன் பிரதமரை சந்திக்கச் சென்றிருப்பதாக, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்திற்கும் அவர் பதிலளித்தார்.
நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் டெல்லியில் இன்று (24.05.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
முதலமைச்சரின் இந்த உரையில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை சுருக்கமாக பட்டியலிட்டதோடு, மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
- நகர்ப்புற மேம்பாட்டிற்கான அம்ருத் 2.O திட்டம் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
- "சுத்தமான கங்கை" திட்டம் கங்கை நதியை மேம்படுத்துவதிலும், மீட்டெடுப்பதிலும் குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க இதே போன்ற திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.
- தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்களின் வளர்ச்சி இலக்குகளை அடைய, மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்.
- சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான சுமார் ரூ.2,200 கோடி நிதி மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி இந்த நிதியை விடுவிக்க வேண்டும்
- 15வது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய வரிவருவாய் பங்கு 41 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. எனவே வரி வருவாய் பங்கினை 50 சதவிகிமாக உயர்த்த வேண்டும்.
இந்த கூட்டத்தின் நிறைவில் பிரதமர் நரேந்திர மோதி, மாநில முதலமைச்சர்களுடன் சில நிமிடங்கள் சிரித்து பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் பிரதமர் பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரதமருடன் 5 நிமிட சந்திப்பு
இதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை 5 நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடினார்.
இந்த தருணத்தில் தமிழ்நாடு சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்ததாக மு.க.ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
- கோவை, மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்
- செங்கல்பட்டு , திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
- கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், இவற்றை நிறைவேற்றுவதாக பிரதமர் கூறினார் எனவே என்ன நடக்கிறது பார்க்கலாம் எனவும் முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பிரதமரை சந்திக்க வெள்ளைக் கொடியுடன் வந்துள்ளதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை, அவரிடம் இருப்பது போல காவிக்கொடியும் இல்லை" என்று கூறினார்.
எப்போது டெல்லி வந்தாலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பது வழக்கம் என்றும், நட்பு ரீதியில் சந்தித்ததாகவும், இதில் அரசியலும் பேசப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு