காணொளி: தாலிபன் - பாகிஸ்தான் மோதல் - என்ன பிரச்னை?
கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல்கள் வெடித்தன. இரு தரப்பினரும் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.
தாலிபன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பல சோதனைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்திய தாக்குதலில், 21 ஆப்கானிய நிலைகளை கைப்பற்றியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
ஆனால், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் முன்னதாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என தாலிபன்கள் கூறுகின்றனர்.
சரி, பாகிஸ்தான், தாலிபன் உறவுகள் சமீபகாலமாக மோசமடைவது ஏன்?
பாகிஸ்தானில் கொடிய தாக்குதல்களை நடத்திய தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் எனப்படும் TTP குழுவுக்கு தாலிபன்கள் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன.
ஆனால், பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை தாலிபன்கள் மறுக்கின்றனர்.
பிபிசியிடம் பேசிய பாதுகாப்பு ஆய்வாளர் அமீர் ஸியா (Amir Zia), இந்த மோதலை தேவையற்ற மோதல் என்றும் இரு தரப்பிலும் ஏற்பட்ட ராஜீய தோல்வி என்றும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை தாலிபன் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
"பல தசாப்தங்களாக, தாலிபன்களை ஆதரிப்பதை பாகிஸ்தான் தேசிய நலன் சார்ந்த விஷயமாகக் கருதி வருகிறது. தற்போது எங்கு தவறு நடந்தது, கடந்த காலத்திலா தற்போதா என பார்க்க வேண்டும். அவர்களை நன்றியற்றவர்கள் என்று அழைப்பது போல கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது முரண்பாடுகளை ஆழப்படுத்தும்’’ என்றும் அமீர் ஸியா கூறுகிறார்.
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே இரண்டாயிரம் கிலோமீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட எல்லை உள்ளது, இது டுரண்ட் கோடு (Durand Line) என்று அழைக்கப்படுகிறது.
பல மாதங்களாக இரு நாடுகளின் ராஜீய உறவில் பதற்றம் நிலவி வந்த நிலையில், சமீபத்திய மோதல் இரு நாடுகள் உறவு மேலும் மோசமடைந்திருப்பதை காட்டுகிறது.
ஆகஸ்ட் 2021இல் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றம் பல முறை வெடித்துள்ளது.
தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை பாகிஸ்தான் தொடக்கத்தில் வரவேற்றது. இது அதன் மேற்கு எல்லையை உறுதிப்படுத்தும் என பாகிஸ்தான் நம்பியது. மேலும், தாலிபனுடன் சித்தாந்த ரீதியாக தொடர்புடைய குழுவான TTP-ன் தாக்குதல்களையும் தாலிபன் கட்டுப்படுத்தும் என பாகிஸ்தான் நம்பியது.
மாறாக, வன்முறையே அதிகரித்தன. எல்லை தாண்டி TTP நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தங்கள் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
ஆனால், இதை மறுக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்கிறது.
டுரண்ட் கோட்டில் (Durand Line) வேலி அமைப்பது தொடர்பாகவும் சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பும் மோதிக்கொண்டன.
ச்சமன், குர்ரம் மற்றும் பாஜோர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் முக்கிய வர்த்தக பாதைகளை பல சந்தர்ப்பங்களில் மூட வேண்டியுள்ளது.
சரி, இந்த விவகாரத்தை நிபுணர்கள் எப்படி பார்க்கின்றனர்?
இரு தரப்பினருக்கும் இடையே நம்பிக்கையின்மை, பொருளாதார பதற்றங்கள் ஆகியவை ஒரு காலத்தில் வெளியுலகுக்கு தெரியாமல் இருந்த மோதலை வெளிப்படையான விரோதமாக மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமாபாத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் இம்தியாஸ் குல், சமீபத்திய வன்முறையை பல மாத கால பதற்றத்தின் உச்சம் என குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் TTP-க்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க ஆப்கான் ஆட்சி மறுப்பதால் பாகிஸ்தானுக்கு குறைந்த தேர்வுகளே உள்ளன’ என்கிறார் இம்தியாஸ் குல்.
"தாலிபன்களிடம் செல்வாக்கு கொண்டிருக்கும் சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் ராஜீய உதவியை நாட வேண்டும். அதன் மூலம் TTP-க்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்கிறார் அமீர் ஸியா.
பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என கூறுகிறது.
தெற்காசிய புவிசார் அரசியல் நிபுணர் மைக்கேல் குகல்மேன், சமீபத்திய நெருக்கடி, நிலைமையை மோசமாக்கியுள்ளது என்கிறார்.
"பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாக எதிர்த்துப் போராடும் திறன் தாலிபன்களுக்கு இல்லை. பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக பொதுமக்களின் கோபம் தணிந்தவுடன் தாலிபன்கள் பின்வாங்க வாய்ப்புள்ளது" என்கிறார் மைக்கேல் குகல்மேன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



