ஹோசே முஹிகா: எளிய வீடு, பழைய கார் தான் சொத்து - உலகின் 'ஏழை அதிபர்' குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

    • எழுதியவர், கெரார்டோ லிசார்டி
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ

கடந்த 2012ம் ஆண்டில் தன் வீட்டின் தனியறையில் நேர்காணலை முடித்தபிறகு ஹோசே முஹிகா "மதுபானம்" கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்திய போது நண்பகல் கூட ஆகியிருக்கவில்லை. அந்த ஆண்டில் உருகுவேயின் அதிபராக பாதி ஆட்சிக் காலத்தை முடித்திருந்தார் அவர்.

அவர் சில கோப்பைகளை கழுவி அதில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை சேர்த்து, தாராளமாக விஸ்கியை ஊற்றினார். அவற்றை எங்களுக்குக் கொடுத்த பின்பு, ஆயாசமாக தொடங்கிய உரையாடல் ஒரு தலைப்பிலிருந்து மற்றொரு தலைப்புக்கு மாறிக்கொண்டே இருந்தது.

"நான் அரசியலில் இருந்து வெளியேற போகிறேன்," என துபமரோ (Tupamaro guerrilla - தேசிய விடுதலை இயக்கத்தின்) முன்னாள் உறுப்பினரும் (கெரில்லா) 2010 முதல் 2015 வரை உருகுவேவை ஆட்சி செய்தவருமான அவர், பிபிசி முண்டோவுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

சிறுவயதிலிருந்து அவருக்கு விருப்பமான ஒன்றில், தன்னுடைய இறப்பு வரை ஈடுபட அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை, தன்னுடைய 89வது வயதில் அவர் காலமானார். தன்னை பாதித்துள்ள புற்றுநோய், உடல் முழுவதும் பரவியதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்த அவர், மேற்கொண்டு தான் சிகிச்சையை தொடரப் போவதில்லை என அறிவித்தார்.

ஓர் அதிபராக அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை, நுகர்வு கலாசாரம் மீதான விமர்சனம், சமூக சீர்திருத்தங்களை ஆதரித்தல், எல்லாவற்றையும் தாண்டி கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய முதல் நாடாக உருகுவேவை மாற்றியது என, லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி இயக்கத்தில் முக்கியமான ஆளுமையாக ஹோசே முஹிகா திகழ்கிறார்.

அவருடைய புகழ் உலகம் முழுவதும் அடைந்தது, உருகுவேவைச் சேர்ந்த ஒரு தலைவருக்கு இது அசாதாரணமான ஒன்று. எனினும், 34 லட்சம் மக்கள் உள்ள ஒரு நாட்டில் அவருடைய அரசியல் மரபு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

"முடிவுறாத ஒரு பந்தயம்"

உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தலைவர்கள் அவர்களுக்கென அமையப்பெற்ற மாளிகைகளில் வசிப்பது வழக்கமானது என்றாலும், முஹிகா தன் ஆட்சிக் காலத்தில் மாளிகைக்கு இடம்பெயர்வதை தவிர்த்தார்.

அதற்குப் பதிலாக மான்டிவீடியோவின் (Montevideo) புற நகரில் தன் மனைவியும் முன்னாள் கெரில்லாவும் அரசியல்வாதியுமான லூசியா டோபோலான்ஸ்கியுடன் எளிமையான வீட்டிலேயே வசித்தார், அங்கு வேலையாட்களோ பாதுகாப்புக்காக கூட யாரையும் அமர்த்தவில்லை. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை.

மேலும் மிகவும் எளிமையான உடைகளையே அவர் எப்போதும் அணிவார். 1987 மாடலான இளம் நீல நிற வோக்ஸ்வேகன் பீட்டில் காரில் தான் அடிக்கடி அவர் காணப்படுவார். மேலும், தன்னுடைய சம்பளத்தில் பெரும்பகுதியை தானம் செய்துவிடுவார், இத்தகைய காரணங்களால் சில ஊடகங்கள் அவரை உலகின் "மிக ஏழ்மையான அதிபர்" என அழைத்தன.

ஆனால், "பெப்பே" (Pepe) எனும் செல்லப்பெயர் கொண்ட முஹிகா, "ஏழ்மையான அதிபர்" எனும் பட்டத்தை நிராகரித்தே வந்தார்.

"நான் ஒரு ஏழ்மையான அதிபர் என அவர்கள் கூறுகின்றனர். இல்லை, நான் ஏழ்மையான அதிபர் இல்லை," என அவருடைய வீட்டில் அளித்த அந்த பேட்டியில் தெரிவித்தார்.

"இன்னும் அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்களும் எதையும் பெற முடியாதவர்களுமே ஏழைகள்," எனவும் அவர் கூறினார். "ஏனெனில் அவர்கள் முடிவுறாத பந்தயத்தில் உள்ளனர். அப்படியிருக்கும்போது அவர்களுக்கு போதுமான நேரமோ அல்லது வேறெதுவுமோ கிடைக்காது."

"பல்லாண்டு கால தனிமை"

அரசியல் வர்க்கத்தைச் சாராத வெளியாளாகவே பலரும் அவரை பார்த்தனர், ஆனால், அரசியலுக்கு முஹிகா வெளியாள் இல்லை.

அரசியல், புத்தகங்கள் மற்றும் இந்த நிலத்தின் மீதான தன்னுடைய ஆர்வம், தன் தாயிடமிருந்து கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவருடைய தாய் முஹிகாவை அவர் தங்கையுடன் நடுத்தர வர்க்க வீட்டில் வளர்த்தார். முஹிகாவுக்கு எட்டு வயது இருக்கும்போது அவருடைய தந்தை இறந்துவிட்டார்.

இளைஞராக, உருகுவேயின் பாரம்பரிய அரசியல் சக்திகளுள் ஒன்றான தேசிய கட்சியின் உறுப்பினராக முஹிகா இருந்தார், இக்கட்சி பின்னாளில் அரசாங்கத்துக்கு எதிரான கட்சியாக மாறியது.

1960களில் துபமரோஸ் (Tupamaros) எனும் தேசிய விடுதலை இயக்கத்தை (MLN-T) உருவாக்குவதில் பங்கேற்றார். இடதுசாரி நகர்ப்புற கெரில்லா குழுவான அந்த இயக்கம், கியூபா புரட்சி மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் தண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

"நல்வாய்ப்பாக" தான் ஒருபோதும் கொலை செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.

முஹிகா நான்கு முறை சிறைபிடிக்கப்பட்டார்.

அதில் ஒன்று, 1970ம் ஆண்டில் நடைபெற்றது, அப்போது அவர் மீது ஆறு முறை சுடப்பட்டது, அப்போது அவர் சாவின் விளிம்புக்கே சென்றுவிட்டார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே, அவர் சிறையிலிருந்து தப்பினார், எனினும் 1972ம் ஆண்டில் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டார். மீண்டும் தப்பிக்க முயன்றபோது அதே ஆண்டிலேயே கைது செய்யப்பட்டு 1985ம் ஆண்டு வரை சிறையிலேயே இருந்தார்.

1971ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒருமுறை அவர் தப்பித்தபோது, துபமரோ குழுவைச் சேர்ந்த மற்ற 105 கைதிகளுடன் சுரங்கப்பாதை வழியாக தப்பித்தார். இச்சம்பவம், உருகுவே சிறை வரலாற்றில் மிகப்பெரிய தப்பித்தல் சம்பவமாகப் பதிவாகியிருக்கிறது.

தன் 14 ஆண்டுகால சிறை வாழ்க்கையில், அவர் மிகவும் துன்புறுத்தப்பட்டார், மிகவும் மனிதத்தன்மையற்ற சூழல்களில் தப்பிப் பிழைத்தார். நீர்த்தொட்டி (cisterns) மற்றும் கான்கிரீட் பெட்டிகளில் கூட அவர் தனிமையில் காலம் கழித்ததும் உண்டு.

1973ம் ஆண்டில் உருகுவே ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட போது, "துபமரோவின் ஒன்பது பணயக்கைதிகளில்" ஒருவராக முஹிகாவையும் சேர்த்தனர், கெரில்லாக்கள் மீண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர் கொலை செய்யப்படுவார் என மிரட்டப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில் சித்தபிரமை பிடித்தது போன்று தான் இருந்ததாகவும் எறும்புகளிடம் கூட பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறிய அவர், எனினும் தன்னை குறித்து சிறப்பாக அக்காலகட்டத்தில் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

"அவை தனிமையாக இருந்த ஆண்டுகள்," என, தன் சிறிய பண்ணையில் இருந்த மரங்களுக்கடியில் முஹிகா பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "அந்த காலம் தான் எனக்கு அதிகமாக கற்றுக்கொடுத்தது என சொல்ல வேண்டும்."

"யதார்த்தம் பிடிவாதமானது"

உருகுவே ராணுவ ஆட்சியின் முடிவில் 1985ம் ஆண்டில் கிடைத்த பொது மன்னிப்பின் மூலம் முஹிகா விடுதலை செய்யப்பட்டார். அது மகிழ்ச்சிகரமான நாளாக அவருடைய நினைவில் உள்ளது.

"அதிபர் பொறுப்பு என்பது முட்டாள்தனமானது, அதை ஒப்பிடவே முடியாது," அன அவர் உறுதிபட தெரிவித்தார்.

உச்சபட்ச பதவியை அவர் அடைவதற்கு முன்னர் துணை செனட் உறுப்பினராகவும், பின்னர் செனட் உறுப்பினராகவும் இருந்தார், பின்னர் 2005ம் ஆண்டில் உருகுவேயின் இடதுசாரி கூட்டணியான பிராட் ஃபிரண்ட் ஆட்சியில் கால்நடைகள் மற்றும் வேளாண் அமைச்சராக இருந்தார்.

அக்காலகட்டத்தில் அவருடைய புகழ் வேகமாக உயர்ந்தது, பிராட் ஃபிரண்ட் கூட்டணியின் அதிபர் வேட்பாளராக ஆவதற்கு முன்பு வரை தொடர்ச்சியாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கெரில்லா இயக்கத்தில் முன்பு இருந்ததை மறைக்காமல், உருகுவே மக்களின் நம்பிக்கையை பெறும் பொருட்டு, வழக்கத்துக்கும் அதிகமாக தன் பிம்பத்தையும் தன் வார்த்தைகளையும் அவர் கவனமாக வடிவமைத்தார். 2009ம் ஆண்டு தேர்தலின் இரண்டாம் சுற்றில் கிட்டத்தட்ட 53% வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

அப்போது 74 வயதான அவர் உலகின் மற்ற பகுதிகளில் அதிகம் அறியப்படாதவராக இருந்தார்.

லத்தீன் அமெரிக்க இடதுசாரி இயக்கம் வெற்றியை பெற்ற காலங்கள் இருந்தன. அதில் முன்னணி ஆளுமைகளான பிரேசிலின் அப்போதைய பிரதமர் லூயிஸ் இனாசியீ லூலா டா சில்வா மற்றும் வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹூகோ சாவேஸும் அடங்குவர்.

இருவருடனும் நெருக்கமான உறவை முஹிகா கடைபிடித்து வந்தாலும் சாவிஸ்டா பொதுவுடைமையுடன் (இடதுசாரி அரசியல் கொள்கை) அவர் விலகியே இருந்தார். தன்னுடைய தனிப்பட்ட வழியிலேயே ஆட்சி செய்தார். நடைமுறைவாதம் மற்றும் பல சூழல்களில் தைரியத்துடனும் ஆட்சி செய்தார்.

அவருடைய ஆட்சிக்காலத்தில் சர்வதேசத்துடன் நியாயமான விதத்தில், உருகுவேயின் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 5.4% எனும் விகிதத்தில் வளர்ந்தது, வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் குறைந்தது.

சிக்கனத்தை முஹிகா ஆதரித்து வந்தாலும் அவருடைய அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவில் பொதுச் செலவுகளை அதிகரித்தது, இதனால் நிதி பற்றாக்குறை அதிகரித்தது. இதன் காரணமாக, அவரின் எதிர்ப்பாளர்கள் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

தன் அரசாங்கத்தில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தபோதும். உருகுவேயின் கல்வி துறையில் அதிகரித்த பிரச்னைகளை அவர் கவனிக்கத் தவறியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், ஆட்சி முடிந்தபின் சில தினங்களில், உருகுவேயில் இன்னும் வறுமை நீடிப்பது தான் தன்னால் தீர்க்கப்படாத மோசமான பணியாகும் என்றார்.

"ஏன் என்னால் அதை மாற்ற முடியவில்லை? ஏனெனில் அது பிடிவாதமாக இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்," என அவர் பிபிசியின் உலக வாசகர்களுடனான உரையாடலில் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அண்டை நாடுகள் மற்றும் இரான், இந்தோனீசியா மற்றும் அஸர்பைஜான் போன்ற தொலைதூர நாடுகளை சேர்ந்தவர்களிடமிருந்து பல்வேறு கேள்விகள் அவரை நோக்கி எழுப்பப்பட்டன.

அவருடைய ஆட்சியின் முடிவில் உள்நாட்டில் அதிக புகழ் வாய்ந்தவராக (கிட்டத்தட்ட 70%) அவர் இருந்தார். எனினும் அவர் உலகம் முழுவதும் பயணிப்பதிலேயே தன் நேரத்தின் பெரும்பகுதியை அர்ப்பணித்தார்.

"இந்த உலகம் அற்பத்தனமானாது"

சர்வதேச அளவில் அவருடைய புகழ் அதிகரித்ததில் ஒரு முக்கியமான கட்டம் இருந்தது. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐநாவின் ரியோ+20 மாநாட்டில் நீடித்த வளர்ச்சி குறித்த உரைதான் அது.

பல நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்களின் முன்பு அவர் நுகர்வு சமூகத்தை விமர்சித்தார், இதனால் மக்கள் கடன்களை அடைக்க கடுமையாக உழைக்க வழிவகுத்ததாக தெரிவித்தார்.

"இவை மிகவும் அடிப்படையான விஷயங்கள்: வளர்ச்சி என்பது மகிழ்ச்சிக்கு முரணானதாக இருக்கக்கூடாது. அது, மனிதர்களின் மகிழ்ச்சி, பூமி மீதான காதல், மனித உறவுகள், குழந்தைகள் மீதான அக்கறைக்கு ஆதரவானதாக இருக்க வேண்டும்." என அவர் வலியுறுத்தினார்.

தன்னுடைய வார்த்தைகள் "அடிப்படையானவை" என அவர் விவரித்த போதும், இணையத்தில் அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது, யூடியூபில் பல லட்சக்கணக்கானோரால் அவருடைய காணொளி பார்க்கப்பட்டது. சமூக ஊடகங்களை பயன்படுத்தாத ஒரு அதிபருக்கு அது பெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தன்னுடைய வீட்டில் பிபிசி முண்டோவுக்கு அவர் அளித்த பேட்டியையும் பலரும் பின் தொடர்ந்தனர். அதிபராக அவருடைய வாழ்க்கை முறை, அவரின் பூந்தோட்டம், மூன்று கால்களை கொண்ட மானுவேலா (Manuela) எனும் அவரின் செல்ல நாயை காண ஆர்வம் எழுந்து, உலகம் முழுவதிலுமிருந்து பல ஊடகங்கள் அவரை சந்திக்க வந்தன.

தன்னுடைய நிர்வாகத்தின்போது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சமூக ரீதியான சட்டங்களுக்காகவும் உருகுவே கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, கருக்கலைப்பு சட்ட விரோதம் என்பதை நீக்கியது, தன்பாலின திருமணத்தை அங்கீகரித்தது, கஞ்சா சந்தையை சட்டப்பூர்வமாக்கியது ஆகியவை அடங்கும்.

தான் ஒருபோதும் கஞ்சாவை சுவைத்ததில்லை எனக்கூறிய அவர், தான் அதிபரானபோது அதை சட்டபூர்வமாக்குவது தன் திட்டங்களுள் ஒன்றாக இருக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனினும் தன் ஆட்சியின் மத்தியில், கஞ்சாவை தடை செய்வது தோல்வியடைந்தது என்றும் போதை சந்தையை மீட்க வேண்டும் என்பதற்காகவும் அதை சட்டபூர்வமாக்கியதாக தெரிவித்தார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெருவை சேர்ந்த மரியோ வர்காஸ் லோசா போன்றவர்களிடமிருந்து அவர் பாராட்டைப் பெற்றார். 2013ம் ஆண்டில் டைம் இதழின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றார். மேலும், தி எக்கனாமிஸ்ட் இதழின் அந்தாண்டுக்கான சிறந்த நாடாக உருகுவே அறிவிக்கப்பட்டது.

அரபு ஷேக் ஒருவர் முஹிகாவின் காருக்கு பல மில்லியன் டாலர்களை வழங்குவதாகக் கூறினார். அதை முஹிகா மறுத்தார். முஹிகாவின் சொத்தாகவும் அடையாளமாகவும் அந்த கார் திகழ்ந்தது. ஆட்சி முடிவுற்ற பின் அவர் குவாட்டமாலா மற்றும் துருக்கி போன்ற சில நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது, அவருடைய பீட்டில் கார் அவருக்காக விமான நிலையத்தில் காத்திருக்கும்.

பெரும் புகழால் ஆச்சர்யமடைந்த முஹிகா

"உலகின் கவனம் என்னை நோக்கி ஈர்க்கப்படுவது ஏன்? எளிமையான வீட்டில் வாழ்வதாலும் பழைய காரில் பயணிப்பதாலுமா? இது என்ன புதிதா? எது இயல்பானதோ அதைக்கண்டு உலகம் ஆச்சர்யமடைவதால், அது மிகவும் அற்பத்தனமானது," என ஆட்சி நிறைவடைந்த தருணத்தில் அவர் தெரிவித்தார்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான உருகுவேயின் குடியரசு மற்றும் மரபுகளுக்கு ஏற்ப தன்னுடைய அரசாங்க பாணி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகளின் பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு அவருடைய புகழ் வளர்வது ஏமாற்றத்தை அளித்தது. சாவேஸின் இறப்பு மற்றும் லூலா மீது எழுந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு இடையே, லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி இயக்கத்தில் எழுந்த வெற்றிடம் முஹிகாவால் நிரப்பப்பட்டது.

இறப்பு

அதிபராக இருந்தபோது அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக முஹிகா அறியப்படுகிறார்.

2013ம் ஆண்டில் மைக் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதை உணராமல் அப்போதைய அர்ஜெண்டினா அதிபர் கிரிஸ்டினா ஃபெர்னாண்டெஸை குறிப்பிட்டு "ஒற்றை கண் உள்ளவரை விட, இந்த வயதான பெண்மணி மோசமானவர்" எனக் கூறினார்.

பிரேசிலில் 2014ம் ஆண்டு நடந்த உலக கால்பந்து போட்டியில், ​​உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் எதிராளியை கடித்ததற்காக தண்டனை பெற்றபோது ஃபிஃபா தலைவர்களை மோசமாக விமர்சித்தார்.

சில சமயங்களில் அவருடைய பேச்சுகள் அன்பு மற்றும் மகிழ்ச்சியை தழுவியும் இருக்கும்.

"தினமும் காலையில் எழுந்திருக்கும் போது, நீங்கள் செய்தவை சரியானதா அல்லது தவறானதா என்பதை யோசிக்க 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்," என பதவிக்காலம் முடிந்து சில மாதங்களில் ரியோ டி ஜெனிரோவில் இளைஞர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் அவர் அறிவுறுத்தினார்.

தன்னுடைய வயது மற்றும் இறப்புக்கு அருகில் தான் இருப்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். இறப்பை எந்தவொரு நாடகமும் இன்றி இயற்கையானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

2014ம் ஆண்டு ஏப்ரலில் தனக்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

"இறுதியில் என்னிடம் என்ன உள்ளதோ அது எடுத்துக் கொள்ளப்படும்," என அவர் முடித்தார்.

உருகுவேயின் வார இதழான Búsqueda-க்கு அளித்த பேட்டியில், கல்லீரல் வரை புற்றுநோய் பரவிட்டதாகவும் வயது மற்றும் நாள்பட்ட நோய் காரணமாக மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதை தான் தவிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

அவருக்கு அடுத்து வந்த யமண்டு ஓர்சி உருகுவேயின் அதிபராக கடந்த நவம்பர் மாதம் ஆனார். நாடு குடியரசு ஆனதிலிருந்து வரலாற்றில் அதிகளவிலான நாடாளுமன்ற இடங்களை பெற்ற கூட்டணியாக பிராட் ஃபிரண்ட் அமைந்தது, ஆனால், அதில் முஹிகா இல்லை.

"இதுவொரு பரிசாக இருக்கிறது, ஏனெனில் ஓர் ஆட்டத்தின் முடிவில் இது நிகழ்ந்திருக்கிறது," என முஹிகா பிபிசிக்கு பின்னாளில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். "யார் அதிகம் செய்கிறாரோ அவர் சிறந்த தலைவர் இல்லை என்பது என்னுடைய எண்ணமாக எப்போதும் இருந்திருக்கிறது. மற்றவர்கள் தொடர்வதற்கு அதிகமாக விட்டுச் செல்பவர்கள் தான் சிறந்த தலைவர்."

ஆன்ட்ரெஸ் டான்ஸா மற்றும் எர்னெஸ்டோ டுல்போவிட்ஸ் எழுதிய "எ பிளாக் ஷீப் இன் பவர்" எனும் புத்தகத்தில், "யாரும் இறப்பை விரும்புவதில்லை, ஆனால் அது எப்போதாவது வரும் என்பதை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நீங்கள் உணருவீர்கள்" என முஹிகா குறிப்பிட்டார்.

"தயவுசெய்து, மரணத்தை எதிர்கொண்டு நடுங்கி வாழாதீர்கள். காட்டு மிருகங்களைப் போல அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கு, எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அந்த பயம் மறைந்துவிடும்," என அவர் கூறினார். "முற்காலத்திய மனிதர்களின் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு