You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜயிடம் சிபிஐ சுமார் 6 மணி நேரம் விசாரணை - கரூர் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் திங்கட்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.
தனி விமானத்தில் டெல்லி சென்ற விஜய், நேற்று(12.01.2026) காலை 11.30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்த குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, மேலும் கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக இந்த விசாரணையின்போது சிபிஐ கவனம் செலுத்துவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.பின்னர் சுமார் 6 மணி நேரம் கழித்தே அவர் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.
விஜயிடம் மேலும் விசாரணை நடத்த சிபிஐ விரும்பியதாகவும், பொங்கல் பண்டிகை வருவதால் வேறொரு தேதியில் விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தெரிவித்ததாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆகவே மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.
சிபிஐ இதுவரை செய்தது என்ன?
- உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அப்போதிருந்து கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பதை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- தவெக பொதுச் செயலாளர்புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடமும் தமிழ்நாடு காவல்துறையினரிடமும் இதுவரை சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
- இந்த வழக்கில் சி.பி.ஐ. பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜயின் பெயர் இல்லை. இருந்தபோதும் அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. சிபிஐ இம்மாத தொடக்கத்தில் பிஎன்எஸ் பிரிவு 179-ன்படி விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை கூறியுள்ளது.
- பரப்புரைக்கு விஜய் பயன்படுத்திய வாகனத்தை சிபிஐ ஆய்வு செய்ததுடன் அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியது.
மேல்முறையீடு
கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள்.
கரூரில் நடந்தது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்தது.
இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு