You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எட்டு ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் கொலை கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் பிடிபட்டது எப்படி?
சிவகங்கை மாவட்டத்தில் முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து கொடூரமாகத்தாக்கி, தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அவரை அழைத்துச் சென்றபோது, அவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால், போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இதில், படுகாயமடைந்த அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர் தாக்கியதில், காயமடைந்த போலீசார், ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் தினேஷ் என்றும், அவர் சிவங்ககை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தினேஷ், எட்டு ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் இருந்துள்ளார்.
யார் இந்த தினேஷ்? எட்டு ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் இருந்தது எப்படி? போலீசுக்கு எந்த துப்பும் கிடைக்காதது ஏன்?
என்ன நடந்தது?
கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பன், உபகாரமேரி, வேதபோதக அரசி, ஜெர்லின் மற்றும் ஜோபின் ஆகியோரை கடப்பாரையால் தாக்கிய மர்ம நபர், அவர்களின் வீட்டில் இருந்த இருபது சவரண் நகை மற்றும் ரூ 20,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
கொள்ளையடிக்க வந்த நபர் தாக்கியதில் படுகாயமடைந்திருந்த அனைவரும் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உறவினர் சின்னப்பன் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காளையாளர் கோவில் காவல்நிலைய போலீசார், வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். வழக்கு தொடர்பாக எந்தப் துப்பும் கிடைக்காத நிலையில், வழக்கு டி.ஐ.ஜி தலைமையிலான சிறப்புப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறப்புப்படையைச் சேர்ந்த போலீசார், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முன்னாள் குற்றவாளிகளின் பட்டியலைத் தயார் செய்து அவர்களை தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளனர்.
வீட்டிற்குள் முடங்கிய பொது மக்கள்
இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொள்ளையர்கள் அச்சத்தால் வெளியே நடமாடாமல் பகலிலேயே வீடுகளைப் பூட்டிக் கொண்டு முடங்கினர்.
பல்வேறு பணிகளுக்காக வெளியூர் செல்வோர் மாலை 6 மணிக்குள் வீடு திரும்பி விடுகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தினருடன் சேர்ந்து காளையார்கோவிலில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டமும் நடத்தினர்.
இது குறித்து கல்லுவழி பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் கூறுகையில், "கொள்ளை நடந்ததில் இருந்து வீட்டை விட்டு வெளியேறவே அச்சமாக உள்ளது. இதனால் விவசாயப் பணிகள், கடை களுக்குக் கூட செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளோம். தொடர்ந்து எங்கள் பகுதியிலேயே கொடூரமாகத் தாக்கி கொள்ளை நடந்து வருகிறது. இதனால் போலீஸார் விரைந்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்," என்று கூறினார்.
கொள்ளையடித்த நபரை போலீசார் கண்டுபிடித்தது எப்படி?
முன்னாள் குற்றவாளிகள் பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்த சிறப்புப்படையினர், அந்தப் பட்டியலில் உள்ள நபர்களைத் தேடி, அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்போது, அந்தப் பட்டியலில் இருந்த தேவக்கோட்டை பகுதி, கணியன்பூங்குன்றனார் வீதியில் வசித்து வந்த தினேஷ்குமார் (33) கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த குற்ற வழக்கிலும் தொடர்பில் இல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால், சமீபகலமாக அவர் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் புதிய துணிகளை வாங்கியதை அவரை கண்காணித்தபோது தெரிந்துகொண்டதாக சிறப்புப் படை அதிகாரி கூறினார்.
“அவர் மீது இருந்த சந்தேகத்தின் அடிப்படையில், கடந்த 23-ஆம் தேதி, அவரது வீட்டை சோதனை செய்தோம். மேலோட்டமாக செய்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பின், வீட்டில் மூடுக்குகளில் எல்லாம் சோனை செய்தபோது, முதலில் ஒரு தங்க செயின் கிடைத்தது. அந்தச் செயினின் அடையாளமும், ஜனவரி மாதம் சின்னப்பன் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நகையின் அடையாளத்துடன் ஒத்துப்போனது. அதில், அவர் தான் ஜனவரியில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டார் என உறுதி செய்தோம்,” என்றார்.
அவரது வீட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இரண்டு கொலை மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்கு
கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் மேலும் பல தகவல்கள் வெளியானதாக போலீசார் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் நிலுவையில் இருந்த 12 கொள்ளை, இரண்டு கொலை மற்றும் மூன்று தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தினேஷ் தான் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அவர் பொது மக்களை தாக்குவதற்காக பயன்படுத்திய ஆயுதத்தை அவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு குளத்தில் பதுக்கி வைத்துள்ளார். அவற்றை மீட்பதற்காக, நேற்று மாலை காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்தக்குளத்தில் கடப்பாரை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மீட்ட போலீசார், அவரை காவல்துறையின் வாகன்நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
“அப்போது அவர் ஆய்வாளர் கையில் இருந்து கத்தியை எடுத்து அவரை குத்த முற்பட்டார். அவர் விலகியதில், அவரது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. பின், அவர் மற்ற காவலர்களையும் தாக்க முயன்றார். அவரை எச்சரித்தும், அவர் கத்தியை கீழே போடாததால், அவரை துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்றார் சிறப்புப் படையில் இருந்த அந்த காவல்துறை அதிகாரி.
காயமடைந்த தினேஷ்குமார் மற்றும் போலீசாரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளாக போலீஸிடம் சிக்காமல் இருந்தது எப்படி?
தினேஷிடம் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர்களில் ஒருவர் பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், தினேஷ் 2014-ஆம் ஆண்டில்தான் முதன்முதலில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறினார்.
“அந்த சமயத்தில், தினேஷ், மணிகண்டன் என்பவருடன் இணைந்து ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கைரேகை, சிசிடிவி கேமரா உள்ளிட்டவையால் மாட்டிக்கொண்டார். ஆனால், அவருடன் வந்த மணிகண்டன் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை.
"அந்த வழக்கில் மூன்று மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். பின், 2016-இல் அந்த வழக்கின் தீர்ப்பின்போது, அவர் விடுவிக்கப்பட்டார்,” என தினேஷின் ஆரம்பக்காலக் கதையை விவரித்தார் அந்த உதவி ஆய்வாளர்.
ஆனால், சிறையில் இருந்த காலத்தில், போலீசில் சிக்காமல் எப்படி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது என்பது மிக ஆழமாக திட்டமிட்டதாகக் கூறினார் அந்த காவல் துறை உதவி ஆய்வாளர்.
“அவரிடம் விசாரித்ததில், அவர் எப்போதும் கால்களில் துணிப்பைகளை மாட்டிக்கொண்டும், கையில் கறுப்புத்துணிகளை சுற்றுக்கொண்டும்தான் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்டிருக்கிறார். அதேபோல, அவர் கொள்ளையடிக்கும் வீடுகளில் கழிவறைகள் வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும், அல்லது வீட்டின் பின்புறத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால், அவன் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் வீட்டில் உள்ளவர்கள் கழிவறைக்குச் செல்ல வெளியே வரும்போது அவர்களைத் தாக்கிவிட்டு திறந்திருக்கும் வீட்டுக்குள் நுழந்துவிடுவார்,” என்றார் அந்த அதிகாரி.
தொடர்ந்து பேசிய அவர், “அதேபோல, வீடுகளைப்பொறுத்தவரையில், அவன் இரண்டு விஷயங்களை கடைபிடிக்கிறார். எப்போதும், வீட்டில் வயதானவர்கள், பெண்கள் இருக்கும் வீட்டைத்தான் குறிவைக்கிறார். அதேபோல, அதிகாலை 1.30 மணிக்கு மேல்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
"மேலும், அவர்களை கொடூரமாகத் தாக்குவதற்கான காரணம் கேட்டபோது, கொடூரமாகத் தாக்கினால், அவர்கள் சாட்சி சொல்லமாட்டார்கள் என்றார்,” என தினேஷ் கூறியவற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் தினேஷை விசாரித்த காவல்துறை அதிகாரி.
தற்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)