You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நகர்புற உள்ளாட்சிகளாக தரம் உயரும் ஊரக உள்ளாட்சிகள் - ஊரக வேலை திட்டம் பறிபோகுமா?
- எழுதியவர், எஸ்.மகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் தமிழக அரசின் திட்டத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் மற்றும் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் 25 ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைப்பதற்குமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'மத்திய அரசு திட்டங்கள் கிடைக்காது'
பேரூராட்சியாக தரம் உயரும் போது மத்திய அரசு கிராம ஊராட்சிகளுக்காக வழங்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை தங்களுக்கு கிடைக்காது என பொது மக்கள் கூறுகின்றனர்.
எனவே கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிட கேட்டு தக்கலை, கிள்ளியூர், இரவிபுதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் என பொதுமக்களும், ஊராட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் நல அமைப்பின் தலைவரும் பாலூர் ஊராட்சி தலைவருமான கே அஜித் குமார், "ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் டிசம்பர் 2024-இல் முடிவடைகிறது. அதன் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசித்து, முதலமைச்சரின் உத்தரவு பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் 2023-24 நிதி ஆண்டிற்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில் தெரிவித்திருந்தார்,” என்றார்.
தமிழகம் முழுவதும் பணிகள் துவக்கம்
மேலும் பேசிய அஜித் குமார், "அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் துவங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும், வளர்ச்சியடைந்த தகுதியான 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்குமான பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.
"இதில் வேடிக்கை என்னவென்றால் பேரூராட்சியாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஊராட்சிகள், ஏற்கனவே ஒரு முறை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் கிராம ஊராட்சியாக தரம் இறக்கப்பட்டவை,” என்றார்.
"நிதி நிலை மோசமாக இருப்பதை காரணமாக கொண்டு 1999-இல் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு தமிழகத்தில் 23 பேரூராட்சிகளை கிராம ஊராட்சிகளாக மாற்றம் செய்தது (G.O.M.s.No.75, dated 10, March 1999). அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாத்துறை, வெள்ளிசந்தை, விளாத்துறை, மேலசங்கரன்குழி, பைங்குளம், இராஜாக்கமங்கலம், தர்மபுரம், மெதுகும்மல், நுள்ளிவிளை, திக்கணங்கோடு மற்றும் பேச்சிப்பாறை ஆகிய 11 பேரூராட்சிகளும் அடங்கும்," என்கிறார் அஜித்குமார்.
விதிகள் பின்பற்றப்படவில்லை
"ஆனால் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தரம் உயர்த்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரூராட்சிகளும் (காட்டாத்துறை, வெள்ளிசந்தை, விளாத்துறை, மேலசங்கரன்குழி, பைங்குளம், இராஜாக்கமங்கலம், தர்மபுரம், மெதுகும்மல், நுள்ளிவிளை, திக்கணங்கோடு) ஏற்கனவே 1999-இல் பேரூராட்சியாக மாற்றப்பட்டு மீண்டும் கிராம ஊராட்சியாக தரம் இறக்கப்பட்டவை தான்," என்றார் அஜித்குமார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒரு மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அல்லது பேரூராட்சி போன்றவற்றை வகை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரிதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் 60 சதவிகிதத்துக்கும் மேலான பொது மக்களிடமும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகு தான் அதை வகை மாற்றம் செய்யலாம் என்ற விதி உள்ளது. ஆனால் இது எதுவும் தற்போது பின்பற்றப்படவில்லை. கிராம பஞ்சாயத்துகளை பேரூராட்சிகளாக வகை மாற்றம் செய்யும் போது கடுமையாக பாதிக்கப்பட்டது பொது மக்கள் தான்," என்றார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நிறுத்தம், வரி உயர்வு
இதுகுறித்து மேலும் பேசிய அஜித் குமார், கிராமப் பஞ்சாயத்துகளில் நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு நபர் 100 நாள் வேலை பார்த்தால் அந்த குடும்பம்பத்திற்கு சராசரியாக ஆண்டுக்கு சுமார் 25,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். பேரூராட்சியாக மாற்றப்பட்டால் இத்திட்டம் நிறுத்தப்படும், என்றார்.
"பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம், தோட்டக்கலை மற்றும் வேளான் நலத்துறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் என மத்திய அரசால் கிராம ஊராட்சிகளுக்கு என 42 வகையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. பேரூராட்சியாக மாற்றப்படும் போது இவை அனைத்தையும் இழக்க நேரிடும்," என்றார்.
மேலும், பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் போது வீட்டு வரி, நில வரி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் இருமடங்காக உயரந்துவிடும். உதாரணமாக கிராம ஊராட்சிகளில் வீட்டு வரியாக சதுர அடிக்கு 55 முதல் 60 பைசா வரை விதிக்கப்படும். ஆனால் பேரூராட்சியாக மாறும் போது இதே வரி சதுர அடிக்கு ரூபாய் 4.70 பைசாவாக உயரும்.
அதே போல் கிராம ஊராட்சியில் சுமார் 1000 சதுர அடி அளவுள்ள ஒரு வீடு கட்ட, கட்டிட வரை பட அனுமதிக்கு விண்ணப்பித்தால் கட்டணமாக சுமார் 40 முதல் நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் இதே 1000 சதுர அடி அளவுள்ள வீட்டிற்கு பேரூராட்சியில் வரை பட அனுமதிக்கு சுமார் 1.78 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு தான் கடும் பாதிப்பு.
கிராமப் பஞ்சாயத்துகளை பேரூராட்சிகளாக மாற்றும் போது அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதோடு நிர்வாக ரீதியாக அலுவலர்களும் பல பிர்ச்சனைகளை சந்திக்க நேரிடும், எனவே அரசு கிராம பஞ்சாயத்துகளை பேரூராட்சிகளாக வகை மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார் அமைப்பின் தலைவர் அஜித்குமார்.
'அரசின் அணுகுமுறையே நகரமயமாக்கலை நோக்கி உள்ளது'
இதுகுறித்து மேலும் பேசிய நந்தகுமார், அதிகாரப்பரவல், உள்ளாட்சி, உள்ளூர் அமைப்புகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட தளங்களில் இயங்கி வரும் ‘தன்னாட்சி’ அமைப்பை சேர்ந்த நந்தகுமார் சிவா இவ்விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசும் போது, அரசின் அணுகுமுறையே நகரமயமாக்கலை நோக்கி தான் உள்ளது. அரசின் கொள்கை முடிவும் நகரமயமாதலை தான் நம்புகிறது, என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், நிறைய நகரங்கள் இருப்பது அதிக நிதி வரும் என நினைக்கிறார்களா அல்லது தமிழ்நாடு வளர்ந்தது என்ற குறியீடுக்குள் கொண்டு போகலாம் என்று நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
மாநில அரசு தமிழ்நாடு முழுவதும் கிராம அளவிலான நிர்வாகம் என்பதற்கு மாற்றாக நகரம் சார்ந்த நிர்வாகம் கொண்டு வரத்தான் ஆர்வம் காட்டுகிறது.
"தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இதற்கு முன்பு தமிழகத்தில் இதுபோல் நகர்புற உள்ளாட்சிகளோடு இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி அல்லது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்தால், இல்லை என்று தான் சொல்ல வேண்டி உள்ளது. நகரமயமாக்கப்பட்ட ஊராட்சிகளில் நில விற்பனை தொழில் மட்டும்தான் முன்னேற்றம் அடைந்திருக்கும். அதை தாண்டி வளர்ச்சி ஏற்பட்டிருக்காது," என்றார்.
மேலும் பேசிய நந்தகுமார், "கிராம ஊராட்சியாக இருந்து நகர்ப்புற உள்ளாட்சியாக மாறியுள்ள பகுதிகளில் வாழும் ஏழைகள், சிறு வியாபாரிகள் மற்றும் விழும்பு நிலை மக்களுக்கு நிர்வாகம் மிகவும் தூரப்பட்டு போயுள்ளதை கண்கூடாக காண முடிகிறது.
"நகர வளர்ச்சிக்காக அரசுகள் வகுக்கும் திட்டங்கள் பெரும்பாலும், கட்டுமானங்கள் சார்ந்த பாதாள சாக்கடை அல்லது குழாய் மூலம் குடிதண்ணீர் வினியோகிக்கும் திட்டமாகத்தான் இருக்கும். இது போன்ற திட்டங்களைத் தான் அதிகப்படியாக நகர்புறங்களுக்கு வழங்குகின்றனர்," என்றார்.
ஆனால் கிராமபுறங்களில் வழங்கப்படும் திட்டங்கள் வேறு. வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள், கால்நடை வளர்ப்பு, விவசாயம் சார்ந்த திட்டங்கள், விழும்பு நிலை மக்களுக்கான முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிராம ஊராட்சி மக்களுக்கு என உள்ளது, என்றார்.
எனவே நிர்வாகத்தில் அதிகப்படியான ஊரக பகுதிகள் இருக்க வேண்டும் தேவையான அளவு மட்டும் நகர் பகுதிகள் இருந்தால் போதுமானது, என கூறும் நந்தகுமார் சிவா கிராம ஊராட்சிகள் நகரமயமாக்கப்படும் போது முதலில் பாதிக்கப்படுவது விளிம்பு நிலையில் உள்ள மக்கள் தான் என்கிறார்.
'தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வரும் மாநிலம்'
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் க பழனித்துரை, "தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வரும் ஒரு மாநிலம். மேலும் தற்போது ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை விட நகர்புற வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி தான் அதிகம். சாலைகள், ஸ்மார்ட் சிட்டி என பல்வேறு நகர்புற திட்டங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இதை மையப்படுத்தி தான் தமிழகம் வேகமாக நகற்புறமாகி வருகிறது, என்றார்.
"வேகமாக நகரமயமாவதால் ஏற்படும் நன்மைகளில் ஒன்று சாதி உள்ளிட்ட விஷயங்கள் அடிபட்டுப் போய்விடுவது தான். அதே போல் அதிகமான உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் ஆனால் விவசாயம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
"விவசாயத்தை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும் பட்சத்தில் நகரமயமாவதால் பல நன்மைகள் உள்ளன. நிலத்தின் மதிப்பு கூடிவிடும். அதே சமயம் ஏழைகளால் நிலம் வாங்க முடியாத நிலையும் ஏற்படும்.
"கிராம ஊராட்சிகள் நகரமயமாக்கப்படும் போது வரி கட்டணம் உயரும் என்பது உண்மைதான். ஆனால் அதை விட அதிகமாக நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிடும்.
"கிராம ஊராட்சிகள் சாதிய அடிப்படையில் வைத்துள்ளதால் தான் சமூக நீதி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை. அரசியல் கட்சி அடிப்படையில் வந்தால் இப்பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிடும்," என்கிறார் பேராசிரியர் பழனித்துரை.
'மக்கள் விருப்பதிற்கு எதிராக அரசு முடிவெடுக்காது'
இவ்விவகாரம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பிபிசி தமிழிடம் பேசும் போது, கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றம் செய்ய திட்டத்தை (Proposal) அனுப்ப சொன்னார்கள். ஆனால் நிறைய இடங்களில் ஆட்சேபனை (Objection) வந்ததால் அதை ஹொல்ட் (hold) செய்துள்ளதாக பேரூராட்சிகளின் இயக்குனர் (Director of Town Panchayats) தெரிவித்துள்ளார் என்றார்.
இதற்கிடையே குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் (பால்வளத்துறை) உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
அதன் பிலனர் அவர் பேசியபோது, "சென்னையைத் தவிர்த்து நீலகிரிக்கு அடுத்தபடியாக குறைந்த ஊராட்சிகள் உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள் உள்ளன ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் மட்டுமே உள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக தொழிற்சாலைகளோ பெரும் வருவாய் ஈட்டும் வணிக வாய்ப்புகளோ இல்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகள் அரசின் திட்டங்கள் சார்ந்தே இயங்குகின்றன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை சூழலுக்கு நகரமயமாக்கல் உகந்ததல்ல. இது குறித்து ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியிடம் பேசினேன். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களின் விருப்பதிற்கு எதிராக அரசு முடிவெடுக்காது என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்," என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)