You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம்: இந்த பயணங்களுக்கு பயன் உண்டா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்காெண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இது போன்ற பயணங்களுக்குப் பயன் இருக்கிறதா?
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும் வரும் 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புறப்பட்டுச் சென்றார்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஏற்கெனவே சிங்கப்பூர் சென்றுவிட்ட நிலையில், தொழில் துறையின் மூத்த அதிகாரிகள் தற்போது உடன் சென்றுள்ளனர்.
இன்று பிற்பகல் சிங்கப்பூரைச் சென்றடையும் முதலமைச்சர், அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
மேலும், சிங்கப்பூரின் முன்னணி தொழல் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பயணத்தின்போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், சிப்காட், பேம்டிஎன் (FameTN), டான்சிம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்யவுள்ளன.
இதற்குப் பிறகு ஜப்பானுக்குச் செல்லும் முதலமைச்சா், தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவிருக்கிறார். வழக்கமாக, தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அரசுக் குழுக்கள் டோக்கியோ நகருக்கு மட்டுமே செல்லும் நிலையில், இந்த முறை முதலமைச்சர் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் ஒசாகா நகருக்கும் செல்லவுள்ளார்.
இது தவிர, 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பயணம் ஒன்பது நாட்கள் நீடிக்கும். இதற்கு முன்பாக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒரு வெளிநாட்டுப் பயணத்தை மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.
பொதுவாகவே, முதலமைச்சர்கள் இதுபோல தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போதும் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தும்போது முந்தைய பயணத்திலிருந்து மாநாட்டிலிருந்தும் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
தற்போதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இதே கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தான் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட அமெரிக்க, துபாய் பயணங்களின் மூலம் சுமார் 8,800 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்ததாகவும் அதன் மூலம் 31 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து முதலமைச்சர் புறப்படுவதற்கு முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முந்தைய வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் இதுவரை வந்த முதலீடுகள் எவ்வளவு வந்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், கடந்த பயணத்தன்போது ஆறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன என்றும் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் லூலூ குழுமம் கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டதாகவும் சென்னையில் நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்கள் அவசியம்தான் என்கிறார் பொருளாதார விமர்சகரான நாகப்பன் புகழேந்தி.
"இது போன்ற பயணங்களை முறையாக மேற்கொண்டால் நிச்சயம் பயனளிக்கும். நாம் முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்வார்கள். நம்மால் என்னவெல்லாம் சலுகைகளை அளிக்க முடியும், அவர்களால் எப்போது முதலீடு செய்ய முடியும் என்பதெல்லாம் இதுபோன்ற பயணங்களில் தெளிவாகத் தெரியவரும். நேரில் பார்த்துப் பேசுவதால், சொன்னதைக் காப்பாற்றும் எண்ணம் வரும்.
அது தவிர, இது போலப் பயணங்களை மேற்கொள்வது, அதில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது குறித்த செய்திகள் வெளியானால், அது மேலும் பல நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க உதவும்" என்கிறார் அவர்.
ஆனால், முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாம் கூடுதலாகச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை என்கிறார் நாகப்பன். "இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை. எங்கே சந்தை இருக்கிறதோ, அங்கே முதலீடு வரும். ஆகவே, ஒவ்வொரு மாநிலமும் முதலீடுகளை ஈர்க்க போட்டிபோட்டுக்கொண்டு சலுகைகளைக் கொடுக்க வேண்டியதில்லை. இதனால், அரசுகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, எப்போதுமே ஓரளவுக்கு மேல் சலுகைகளை அரசுகள் வழங்கக்கூடாது" என்கிறார் அவர்.
இன்னொரு விஷயத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"ஒவ்வொரு அரசும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துகிறார்கள். பயணங்களை மேற்கொள்கிறார்கள். அதில் எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன என்பதைச் சொல்கிறார்கள்.
ஆனால், ஓராண்டு கழித்து அதில் உண்மையிலேயே எவ்வளவு முதலீடு, நிஜமாகியிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், அந்த விவரத்தைச் சொல்லத் தயங்கவேகூடாது.
ஏன் பிற முதலீடுகள் வரவில்லை என்பதையும் விளக்கலாம். இப்படியான வெளிப்படைத் தன்மை இருப்பது நன்மையே பயக்கும்" என்கிறார் நாகப்பன்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, 226 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்திருப்பதாகவும் 4,12,565 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு கூறுகிறது.
சமீபத்தில் மிட்சுபிஷி நிறுவனம் குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரிக்கும் ஆலைக்கென 1891 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள தங்கள் ஆலையை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்