You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமா? வாஜ்பாய் உத்தியை பின்பற்றுகிறாரா மோதி?
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டட திறப்பும், அதற்காக தேர்வு செய்யப்பட்ட தேதியும் தேசிய அரசியலில் அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. பிரதமரே திறந்து வைப்பதா? நாட்டின் முதல் குடிமகன் மற்றும் அரசியலமைப்பின் தலைவரான குடியரசு தலைவரே நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்றும் அக்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அதேநேரத்தில், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் பின்னணியில் பா.ஜ.க. போடும் புதிய அரசியல் கணக்குகள் ஒளிந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார். நவீன கலைநயம், எரிசக்தி சேமிப்பு, சமரசத்துக்கு இடமில்லாத பாதுகாப்பு வசதிகளுடன் முக்கோண வடிவில் இந்த கட்டுமானம் அமைந்துள்ளது. இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்ற மறு நிர்மாண கட்டுமான திட்டத்தின்படி நாடாளுமன்றத்துடன், சென்டரல் செக்ரட்டேரியட் எனப்படும் மத்திய அரசு பொது கட்டடங்களும் மறுநிர்மாணம் செய்யப்படவிருக்கின்றன.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவை 250 உறுப்பினர்களும் அமர முடியும். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பேரிடர் குறுக்கிட்டதால் பணிகள் சற்று தாமதமாயின.
இந்நிலையில், பிரதமர் மோதியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்தார். பின்னர், "புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டடம் இந்தியாவின் புகழ்பெற்ற ஜனநாயக மரபுகள் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை மேலும் வளப்படுத்தும். இந்த கட்டடத்தில், உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை சிறப்பாகச் செய்ய முடியும். வரும் 28-ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்," என்று தெரிவித்தார்.
பிரதமர் திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு குறித்த செய்தி வெளியானதுமே அதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடுமையான விமர்சித்தார். "நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல" என்று அவர் ட்வீட் செய்தார்.
காங்கிரசைத் தொடர்ந்து, இடதுசாரிகளும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தனது ட்விட்டர் பதிவில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். நாடாளுமன்றமோ, சட்டம் இயற்றும் பிரிவாக உள்ளது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும். மோதியை பொறுத்தவரை, சுய கெளரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்" என்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
"பாஜக ஆட்சியில் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுபவராக, குடியரசுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான சில பதிவுகளை இட்டுள்ளார்.
அதில், "தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோதி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்புக்கு அழைக்கப்படவில்லை. இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும்." என்று விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பா.ஜ.க. பதில்
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு சர்ச்சையாகி இருப்பது குறித்து பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.
"நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அழைப்பிதழ் ஏதும் தயாராகவும் இல்லை. வெறும் யூகங்களின் அடிப்படையில் இப்போதே அதுகுறித்து பேசுவதும், விமர்சிப்பதும் கூடாது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதும் தவறு. நாடாளுமன்ற கட்டடம் திறப்பு குறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அதுகுறித்த கருத்துகளை முன்வைக்க வேண்டும். அவசரப்படக் கூடாது." என்று அவர் கூறினார்.
நாராயணன் திருப்பதி மேலும் பேசுகையில், "நாடாளுமன்ற புதிய கட்டட திறப்புக்கு மே 28-ம் தேதியை அரசு தேர்வு செய்திருப்பது குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "வீர சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர். அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளில் ஒரு சிறிய அளவாவது அவர்கள் அனுபவித்திருப்பார்களா? ஆங்கிலேயரிடம் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதியதாக இன்று விமர்சிக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த கால கட்டத்தில் நிலைமையே வேறு. விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தவே காந்தி விரும்பினார். காந்திய வழியை பல தலைவர்கள் பின்பற்றினர். பகத்சிங்கிடம் கூட மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார்கள். உயிர்ப்புடன் இருந்தால்தான் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று அறிவுறுத்தினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் எஸ்.ஏ.டாங்கே கூட ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் நாங்கள் அதுகுறித்து விமர்சிக்க மாட்டோம். ஏனென்றால் அப்போதைய கால கட்டம் வேறு. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஆங்கிலேயரிடம் இருந்து வீர சாவர்க்கர் ஊதியம் பெற்றதாக கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு" என்று தெரிவித்தார்.
"நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டம்"
இந்த சர்ச்சை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் பேசினோம். அவர் கூறுகையில், "நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதனை குடியரசுத் தலைவர் திறப்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவருக்கும் குடியரசுத் தலைவரே பொதுவானவர். பிரதமர் என்பவர், மக்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் தலைவர்தான். அதன்படி, பிரதமர் மோதியை பா.ஜ.க. உறுப்பினர்களின் தலைவராகவே பார்க்க முடியும். நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு என்பது இதுவே முதன் முறை என்பதால் இதில் மரபு என்று ஏதும் இல்லை."என்றார்.
நாடாளுமன்ற கட்டட திறப்பு தேதி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்தும் அவர் சில விளக்கங்களை அளித்தார். "புதிய கட்டட திறப்புக்கு தேர்வு செய்த தேதியிலும் சர்ச்சை எழுந்திருக்கிறது. சாவர்க்கர் பிறந்த தேதியன்று நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறப்பதை எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சித்துள்ளன. ஆனால், பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை சர்ச்சைகளை உருவாக்குவதே வாடிக்கை. சர்ச்சைகளை திட்டமிட்டே பா.ஜ.க. உருவாக்குகிறது. இதுபோன்ற சர்ச்சைகள் மூலமாக பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்கிறது. புதிய வாக்காளர்களையும் ஈர்க்க முயற்சிக்கிறது. பா.ஜ.க. என்பது ஒரு வித்தை மட்டுமே தெரிந்த கட்சி (One trick pony).
அது பெரும்பான்மை இந்து மக்களின் வாக்கு வங்கி. அந்த ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு பா.ஜ.க. ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பல வித்தை தெரிந்த கட்சிகள் (multi-trick pony). சில நெருக்கடியான நேரங்களில் ஒரு வித்தை தெரிந்தவர் எளிதில் தப்பிவிடுவார்கள்; பல வித்தை தெரிந்தவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். இதுதான் இன்றைய அரசியல் நிலவரம். ஆகவே, பா.ஜ.க. அதனை செய்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை." என்று அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்த தராசு ஷியாம், "நாடாளுமன்ற புதிய கட்டடப் பணிகளை முழுமையாக முடிக்காமலேயே அவசரஅவசரமாகவே திறப்பு விழாவை அறிவித்துள்ளார்கள். இதன் பின்னணியில் பா.ஜ.க. பல அரசியல் தந்திரங்களை செய்கிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கிடைத்த படுதோல்வியை பா.ஜ.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அக்கட்சி போடும் அரசியல் கணக்குகளும் வேகமாக மாறி வருகின்றன. வரும் ஜனவரிக்குள் 7 மாநில சட்டமன்ற தேர்தல்களை நடத்த வேண்டியுள்ளது. அவற்றின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியவில்லை. ஆனால், பா.ஜ.க.வின் அதீத நம்பிக்கை சற்று தகர்ந்திருப்பதால் மேலும் ஒரு தோல்விச் செய்தியை அக்கட்சி விரும்பவில்லை.
ஆகவே, 2004-ம் ஆண்டைப் போல சில மாதங்கள் முன்னதாகவே, அதாவது மேற்கூறிய 7 மாநில சட்டமன்றங்களுடன் சேர்த்து, நாடாளுமன்றத்திற்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடக்கும் போது நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று அக்கட்சி நம்புகிறது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய கூடுதல் அவகாசம் தந்துவிடக் கூடாது என்பதுடன், பிரதமர் வேட்பாளராக மோதிக்கு எதிராக யார்? என்ற பிரதான கேள்வி தொக்கி நிற்கும் போதே தேர்தலை சந்தித்துவிட பா.ஜ.க. விரும்புவதாக தெரிகிறது." என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்