You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குவாட் மாநாடு, ஜம்மு-காஷ்மீரில் ஜி20 நிகழ்ச்சி மூலம் சீனாவுக்கு இந்தியா சொல்ல வரும் சேதி என்ன?
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஹிரோஷிமா....
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அமெரிக்காவால் அணுகுண்டு வீச்சுக்கு இலக்கான நகரம். அந்தப் போரில் எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் ஜப்பானும் தற்போது உலக அரங்கில் கூட்டாளிகளாக வலம் வருகின்றன. அவற்றுடன், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை ஓரணியில் இணைந்த குவாட் அமைப்பின் மாநாட்டால் அதே ஹிரோஷிமா நகரில் மீண்டும் உற்று நோக்கப்படுகிறது. குவாட் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை, சீனா மீது பெயரை மட்டும் குறிப்பிடாமல் கிட்டத்தட்ட நேரடியாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பும், சீனாவின் ஆட்சேபனையை மீறி ஜம்மு காஷ்மீரில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகள் நடப்பதும் ஒரே கால கட்டத்தில் நடந்தேறியிருப்பது சர்வதேச அரசியலில் உற்று நோக்கப்படுகிறது. இவற்றின் மூலம் சீனாவுக்கு இந்தியா உணர்த்த விரும்புவது என்ன?
இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை மட்டுமே மையம் கொண்டிருந்த சர்வதேச அரசியல் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் அரசியல், பொருளாதார, ராணுவ ரீதியாக ஆசிய கண்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் வளர்ச்சி சர்வதேச சமூகத்தால் உற்று நோக்கப்படுகிறது. மக்கள் தொகையில் முதலிரு இடங்களை வகிக்கும் இந்நாடுகளின் அரசியல், ராணுவ, பொருளாதார முக்கியத்துவமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஆகவேதான், இரு நாடுகளும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.
அந்த வகையில்தான், ஜம்மு காஷ்மீரில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதற்கு சீனாவின் எதிர்ப்பும் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஜி20 மாநாடு இந்தியாவில் நடக்கும் என்ற அறிவிப்பு வெளியானது முதலே நாடு முழுவதும் அதுகுறித்த நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து, அதன்படி நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன. அந்த வரிசையில்தான் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று முதல் 3 நாட்கள் ஜி20 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதற்கான அறிவிப்பு வெளியானதுமே, "பிரச்னைக்குரிய பகுதியில் ஜி20 மாநாட்டை நடத்துவதா" என்று சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பேசுகையில், "எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் ஜி20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது" என கூறினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "இதுபோன்ற கருத்துகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அந்த பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும், அவை அப்படியே நீடிக்கும். எந்தவொரு நாட்டுக்கும் அதுகுறித்து கருத்து கூற உரிமை இல்லை" என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேனிஸ் ஆகியோருடன் அவரும் ஆலோசனை நடத்தினார்.
பல்வேறு அரசியல், பொருளாதார, ராணுவ விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர், குவாட் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, சீனாவின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் அந்நாட்டின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தது. பலவீனமான சிறிய நாடுகளை கடன் வலையில் வீழ்த்தும் சீனாவின் தந்திரத்தை மறைமுகமாக சாடும் வகையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்வழி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த சிறிய நாடுகளுக்கு உதவும் அதேநேரத்தில், அவற்றால் தாக்குப்பிடிக்க முடியாத கடன் சுமையை ஏற்ற மாட்டோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுழற்சி அடிப்படையில் குவாட் கூட்டமைப்பின் அடுத்த மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. 2024-ம் ஆண்டு குவாட் மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யாவின் அண்மைக்கால நடவடிக்கைகளால் வேகமாக மாறி வரும் சர்வதேச அரசியல் சூழலில் இந்தியா கவனிக்கத்தக்க முக்கிய நாடுகளில் ஒன்றாகியுள்ளது. குவாட் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பும், ஜம்மு காஷ்மீரில் சீன ஆட்சேபனையை புறந்தள்ளி ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் உற்று நோக்கப்படுகிறது.
அதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியிடம் பேசுகையில், "குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றதும், ஜம்மு-காஷ்மீரில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டதும் ஒரே கால கட்டத்தில் நடந்ததாக தெரிந்தாலும் அது தற்செயலானதே. குவாட் கூட்டத்தை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததும் கூட நடைமுறைக்கு மாறான ஒன்றல்ல. சுழற்சி அடிப்படையில் அடுத்தபடியாக குவாட் மாநாடு இந்தியாவில் நடக்க வேண்டியதுதான். அடுத்தபடியாக, ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே ஜம்மு காஷ்மீரில் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன. இறையாண்மை மிக்க ஒரு நாட்டுக்கு தன்னுடைய எல்லைக்குள் எந்தவொரு நிகழ்ச்சிகளையும் நடத்தும் உரிமை உண்டு. அந்த அடிப்படையில், யாருடைய ஆட்சேபனையையும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. ஆகவே, எந்தவொரு நாட்டையும் குறிப்பாக, சீனாவை வெறுப்பூட்டும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுவதாக கருதுவதற்கு இடமே இல்லை." என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், " ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தானின் குவெட்டா நகருக்கு பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்து வருகிறது. கொரோனா பேரிடரால் உலகமே முடங்கிக் கிடந்த போது கூட கால்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழக்கக் காரணமானது சீனாதான். அதற்குப் பிறகே, எல்லைப் பிரச்னை, பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய இரண்டையும் தனித்தனியாக அணுக வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தளர்த்திக் கொண்டது." என்றார்.
"ஸப்ரெட்லி (Spratly Islands) தீவுகள் பிரச்னையில் பிலிப்பைன்சுக்கு சாதகமாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த சீனா மறுக்கிறது. இந்தியா - வங்கதேசம் இடையே இதேபோன்றதொரு வழக்கில் அந்த தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை இந்தியா அப்படியே நடைமுறைப்படுத்தியது. சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மறுப்பதுடன், அண்டை நாடுகளுடன் சர்ச்சைக்குரிய எல்லையில் பிற நாட்டுக் கப்பல்கள், படகுகளை சீனா வழிமறித்தும் வருகிறது." என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்