You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இப்ராஹிம் ரைசி: ஒரு மத அறிஞர் இரான் அதிபர் பதவியை எட்டிப் பிடித்தது எப்படி?
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உள்பட பலரும் விபத்தில் பலியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசி எப்பொழுதும் கருப்பு தலைப்பாகை அணிந்திருப்பார். இஸ்லாத்தில் நபி முகமதுவின் வழித்தோன்றல் அவர் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும் இது.
சமய அறிஞராக இருந்து வழக்கறிஞராகி, பின்னர் இரானில் அதிகாரத்தின் உச்சத்திற்கு வந்த ரைசி, அந்த நாட்டின் மதத் தலைவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஷியா மதத் தலைவர்கள் படிநிலையில் அவர் ஆயத்துல்லா அலி காமனெயிக்கு அடுத்த நிலையில் இருக்கிறார்.
2021, ஜூன் மாதம், இரான் அதிபராக இப்ராஹிம் ரைசி பதவியேற்ற போது உள்நாட்டு மட்டத்தில் பல சவால்களை அவர் எதிர்கொண்டார்.
ஒருபுறம் நாட்டின் சமூக நிலை கடினமாக இருந்தது. மறுபுறம் அணுசக்தி திட்டத்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட இரான் கடுமையான பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டிருந்தது.
இப்ராஹிம் ரைசி தனது தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மிகவும் தகுதியான வேட்பாளர் நான் தான்’ என்று கூறியிருந்தார்.
ரைசி இந்த திசையில் சிறப்பாக எதையும் செய்வதற்கு முன்பே ஹிஜாப் தொடர்பான எதிர்ப்புகள் அவருக்கு புதிய சவால்களை உருவாக்கின.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் கடுமையான ராணுவ பதிலடி, என இரானுக்கு மிகவும் கடினமான சூழ்நிலைகள் உருவாகியது.
அந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்ததன் மூலம், தற்போதைய சூழலில் முஸ்லிம் உலகை வழிநடத்த தான் தயாராக இருப்பதை இந்த ஷியா நாடு தெளிவுபடுத்த முயன்றது.
இப்ராஹிம் ரைசியின் ஆரம்ப கால வாழ்க்கை
இப்ராஹிம் ரைசி 1960 ஆம் ஆண்டு வடகிழக்கு இரானின் புனித நகரமான மஷாத் நகரில் பிறந்தார். இந்த நகரத்தில் ஷியா முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானதாக கருதப்படும் மசூதியும் உள்ளது. சிறு வயதிலேயே அவர் உயர்ந்த நிலையை அடைந்தார்.
ரைசியின் தந்தை ஒரு மௌல்வி. ரைசிக்கு ஐந்து வயதாக இருந்த போது அவரது தந்தை காலமாகிவிட்டார்.
தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் தனது 15 வயதில் கோம் நகரில் அமைந்துள்ள ஷியா கல்வி நிறுவனத்தில் படிக்கத் தொடங்கினார்.
அவர் தனது மாணவப் பருவத்தில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடந்த முகமது ரேசா ஷாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.
பின்னர் ஆயத்துல்லா ருஹோல்லா காமனெயி 1979 இல் இஸ்லாமியப் புரட்சி மூலம் ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றினார்.
ஆயத்துல்லா அலி காமனெயிக்கு நெருக்கமானவர்
தனது 20 வது வயதில் ரைசி, தெஹ்ரானுக்கு அருகில் உள்ள கராஜ் நகரின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
ரைசி 1989 மற்றும் 1994 க்கு இடையில் தெஹ்ரானின் வக்கீல் ஜெனரலாக இருந்தார். பின்னர் 2004 முதல் அடுத்த பத்தாண்டுகளுக்கு நீதித்துறை ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
2014 ஆம் ஆண்டு இரானின் அரசு வழக்கறிஞர் ஆனார். இரானிய நீதித்துறையின் தலைவராக இருந்த ரைசியின் அரசியல் கருத்துகள் 'அதிக அடிப்படைவாத சிந்தனைகள் நிறைந்ததாக' கருதப்படுகின்றன.
அவர் இரானின் அடிப்படைவாதத் தலைவரும் நாட்டின் உச்ச மதத் தலைவருமான ஆயத்துல்லா அலி காமனெயிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
2021, ஜூன் மாதம், தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றிய ஹசன் ரூஹானிக்கு பதிலாக இரான் இஸ்லாமிய குடியரசின் அதிபராக ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது ரைசி, முந்தைய ரூஹானி ஆட்சியின் போது நிகழ்ந்த ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான சிறந்த தேர்வாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.
ஷியா பாரம்பரியத்தின் படி, முகமது நபியின் வழித்தோன்றல் என்பதைக் குறிக்க இப்ராஹிம் ரைசி எப்போதும் கருப்பு தலைப்பாகை அணிந்திருப்பார்.
அவருக்கு ‘ஹுஜ்ஜாதுல் இஸ்லாம்’ அதாவது ‘இஸ்லாத்தின் ஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
'மரணக் குழு' உறுப்பினர்கள்
இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அவர் நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கினார். பல நகரங்களில் அவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்த நேரத்தில் அவர் இரானிய குடியரசை நிறுவியவரும் 1981 இல் இரானின் அதிபருமான ஆயத்துல்லா ருஹோல்லா காமனெயிடம் பயிற்சி பெற்றார்.
ரைசிக்கு 25 வயதாக இருந்த போது அவர் துணை அரசு வழக்கறிஞராக (அரசின் இரண்டாவது படியில் இருக்கும் வழக்கறிஞர்) ஆனார்.
பின்னர் அவர் நீதிபதியானார். 1988 இல் உருவாக்கப்பட்ட 'மரணக் குழு' என்று அழைக்கப்படும் புலனாய்வு நீதிமன்றங்களில் ரைசி சேர்ந்தார்.
ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை இந்த நீதிமன்றங்கள் 'மீண்டும் விசாரணை' செய்தன.
இந்த அரசியல் கைதிகளில் பெரும்பாலோர் இரானில் உள்ள இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சியான முஜாஹிதீன்-இ-கல்கா (MEK) அல்லது இரானின் மக்கள் முஜாஹிதீன் அமைப்பில் (PMOI) உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்த நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. ஆனால் அவர்களில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
தூக்கிலிடப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் பொது புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றம் என்று கூறுகின்றனர்.
இப்ராஹிம் ரைசி இந்த விவகாரத்தில் தனது பங்கை தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமனெயி பிறப்பித்த ஃபத்வாவின்படி இந்த தண்டனை 'பொருத்தமானது' என்றும் அவர் ஒருமுறை கூறியிருந்தார்.
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்
இஸ்ரேலும் இரானும் 1979 வரை நட்பு நாடுகளாக இருந்தன. அதே ஆண்டில் இரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டு, சித்தாந்த மட்டத்தில் இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் அரசு அந்நாட்டில் ஆட்சிக்கு வந்தது.
இப்போது இரான் இஸ்ரேலின் இருப்பை ஏற்கவில்லை மற்றும் அதன் முழுமையான அழிவை ஆதரிக்கிறது.
இஸ்ரேல் ஒரு 'புற்றுநோய் கட்டி' என்றும், அது சந்தேகத்திற்கு இடமின்றி 'வேரோடு பிடுங்கி அழிக்கப்படும்' என்றும் இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கூறி வந்தார்.
இரான் தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேலும் கூறுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுக்களுக்கும் லெபனானில் உள்ள ஷியா குழுவான ஹெஸ்புல்லாவுக்கும் இரான் நிதியுதவி செய்வதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
காஸா போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த பகை மேலும் அதிகரித்தது. ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்குப் பிறகு இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது இரான் எதிர்பாராத மற்றும் முன்னெப்போதும் நடந்திராத ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலை இரான் நேரடியாகத் தாக்கியது அதுவே முதல் முறையாகும்.
இரானும் இஸ்ரேலும் கடந்த காலங்களில் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி வந்துள்ளன. இந்த தாக்குதல்களில் ஒருவர் மற்றவரின் நிலைகளை குறிவைப்பதும் அடங்கும். இத்தகைய தாக்குதல்களுக்கு இதுவரை இந்த இருநாடுகளும் பொறுப்பேற்கவில்லை.
பாலத்தீன மக்களுக்கு ஆதரவு
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் இரானின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக பாலத்தீன ஆதரவு இருந்து வருகிறது.
இஸ்ரேல்-காஸா மோதலில் இரான், பாலத்தீனர்களுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து வருகிறது.
மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அணையை திறந்து வைத்து ஆற்றிய உரையில், பாலத்தீன மக்களுக்கு இரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார் ரைசி.
"பாலத்தீனம், முஸ்லிம் உலகின் மிக முக்கியமான விவகாரம் என்று நாங்கள் நம்புகிறோம். இரான் மற்றும் அஜர்பைஜான் மக்கள் பாலத்தீனம் மற்றும் காஸா மக்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பார்கள், இஸ்ரேலின் யூத ஆட்சியையும் அவர்கள் வெறுக்கின்றனர்,” என்று ரைசி தனது உரையில் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)