You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பச்சை குத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகள் மெகா சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?
எல் சால்வடோர் நாட்டில் ஒரு கும்பலைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 2,000 பேர் புதிதாக திறப்பட்டுள்ள அந்நாட்டின் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறை குற்றச்செயல்களை ஒடுக்க சுய பிரகடனம் செய்துள்ள அந்நாட்டின் அதிபர் நயிப் புகேலேயின் மையப் புள்ளியாக பார்க்கப்படுகிறது.
கொலைகள் மற்றும் பிற வன்முறை குற்றங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டில் அவசரநிலை நடைமுறை படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான கேங்ஸ்டர்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரை அடைக்கமுடியும்.
வெறுங்காலுடனும், சங்கிலிகளுடனும் பிணைக்கப்பட்டுள்ள பச்சை குத்தப்பட்ட கைதிகளை புதிதாக திறக்கப்பட்ட சிறைக்கு கொண்டு செல்லும் புகைப்படங்களை எல் சால்வடோர் அரசு வெளியிட்டுள்ளது.
கைதிகள் தங்கள் அறைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, மொட்டையடிக்கப்பட்ட தலைகளுக்குப் பின்னால் கைகளை கட்டிக் கொண்டு நெருக்கமாக அமர வைக்கப்பட்டுள்ளனர்.
"விடியற்காலையில், ஒரே முறையில் முதல் 2,000 பேர் பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்" என்று அதிபர் புகேலே ட்வீட் செய்திருந்தார். இது வடக்கும், தெற்கு, மத்திய அமெரிக்க நாடுகளில் இருக்கும் சிறைகளிலேயே மிகப்பெரிய சிறை என்று அவர் கூறுகிறார்.
"இது அவர்களின் புதிய வீடாக இருக்கும், இங்கு அவர்கள் பல ஆண்டுகளுக்கு வாழ்வார்கள், இதனால் மக்களுக்கு மேலும் எந்த தீங்கும் ஏற்படுத்த முடியாது."
தலைநகர் சான் சால்வடோருக்கு தென்கிழக்கே 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெகோலுகாவில் உள்ள இந்த மெகா சிறை 8 கட்டிடங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 100 சதுர மீட்டர் (1,075 சதுர அடி) கொண்ட 32 அறைகளைக் கொண்டுள்ளன. இவற்றில் "100 க்கும் மேற்பட்ட" கைதிகளை அடைத்து வைக்க முடியும் என்று அரசு கூறுகிறது.
இந்த அறைகள் ஒவ்வொன்றிலும் தலா இரண்டு முகம் கழுவும் தொட்டி மற்றும் இரண்டு கழிவறைகள் மட்டுமே இருக்கும்.
அதிபர் புகேலே கடந்த மார்ச் மாதம் "கும்பல்களுக்கு எதிரான போரை" அறிவித்து அவசரகால நடவடிக்கைகளை நிறைவேற்றினார். அவை பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளன.
அவசரகால அதிகாரங்கள் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன. ஏனெனில் அவை சில அரசியலமைப்பு உரிமைகளை மறுக்கின்றன.
இந்த அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி வாரண்ட் இல்லாமல் சந்தேகிக்கும் நபர்களை கைது செய்ய பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு நடவடிக்கையில் 64,000 க்கும் மேற்பட்ட சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்.எஸ்-13 மற்றும் பரையோ-18 போன்ற கிரிமினல் கும்பல்களின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாகவும், இந்த குழு கொலை, மிரட்டி பணம் பறிப்பது மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பல்களை "முற்றிலுமாக காணாமல் போகச் செய்வதே" மெகா கைதுகளின் நோக்கம் என்று அரசு கூறுகிறது.
அரசின் இந்த கொள்கையில் அப்பாவி மக்கள் சிக்கியுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் "கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு" உட்படுத்தப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் வாதிடுகின்றன.
ஆனால் புகேலேவின் கும்பல்களை கட்டுப்படுத்தும் முயற்சி எல் சால்வடார் மக்களிடையே பிரபலமாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்