You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய இளைஞருக்கு பாகிஸ்தான் பெண்ணுடன் 'லூடோ'வில் பிறந்த காதல் - கடைசியில் என்ன நடந்தது?
- எழுதியவர், அனந்த் ஜணாணே மற்றும் இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
பாகிஸ்தானின் ஹைதராபாத்தை சேர்ந்த இக்ரா ஜிவானி (19) என்பவரும், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த முலாயம் சிங் யாதவ் (21) என்பவரும் ஆன்லைனில் லூடோ விளையாடிக் கொண்டிருந்த போது காதல் மலர்ந்துள்ளது. இது நடந்தது 2020-இல்.
இக்ரா நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு, பெங்களூருவில் வசிக்கத் தொடங்கினர்.
ஆனால் இக்ராவின் வாட்ஸப் அழைப்புகளில் பாகிஸ்தான் தொடர்புகள் இருப்பதைக் கண்ட காவல் துறைக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
முலாயம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் முலாயம் சிங் யாதவின் குடும்பம் இப்போது அவர்கள் வீட்டு மருமகளை மீட்டுத் தருமாறும் மகனை விடுவிக்கவும் அரசாங்கத்தை வற்புறுத்துகிறது.
இக்ரா மற்றும் முலாயமின் காதல், திருமணம் மற்றும் பிரிந்த கதையைப் பார்ப்போம்.
‘லூடோ விளையாட்டில் விளைந்த காதல்’
இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார் இக்ரா ஜிவானி. சட்ட விரோதமாக இந்தியா வந்ததே அவரது குற்றம். பிரயாக்ராஜை சேர்ந்த முலாயம் சிங் யாதவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் பெங்களூரில் வசித்து வந்தார்.
முலாயம் சிங் யாதவ் கோவிட் லாக்டவுனுக்குப் பிறகு 2020 இல் சமீர் அன்சாரி என்ற பெயரில் இக்ராவுடன் ஆன்லைனில் லூடோ விளையாடத் தொடங்கினார் என கூறப்படுகிறது.
அப்போது இக்ராவுக்கு 19 வயதுதான். அப்போது 21 வயதான முலாயம், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இருவருக்குமான உறவு ஆழமாகிவிட்ட நிலையில், தொலைவில் வசிப்பது சிரமமானது. இக்ராவின் குடும்பத்தில் திருமணத்துக்கான அழுத்தமும் அதிகரித்தது. இதன் காரணமாக முலாயமின் ஆலோசனையின் பேரில் பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நேபாளம் சென்றடைந்தார் இக்ரா.
இருவரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேபாளத்தில் இருந்து பாட்னா வழியாக 2022 செப்டம்பரில் பெங்களூரு சென்றடைந்ததாக போலீசார் கருதுகின்றனர். அவர்கள் பெல்லந்தூர் காவல் நிலையத்திற்குக் கீழ் வரும் பகுதியில் வசிக்கத் தொடங்கினார்கள்.
முலாயம் வேலை செய்து வந்ததாகவும், இக்ரா வீட்டில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ரியா யாதவ் பெயரில் தயாரிக்கப்பட்ட இக்ராவின் 'போலி' ஆதார் அட்டையையும் முலாயம் பெற்றுள்ளார்.
வாட்ஸப் அழைப்புகள்
தனது குடும்பத்தை விட்டு விலகி வாழும் இக்ரா, பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் உள்ள தனது தாயுடன் வாட்ஸ்அப் அழைப்பு மூலம் பேசத் தொடங்கினார்.
பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஜி20 நிகழ்ச்சி மற்றும் ஏரோ ஷோவைக் கருத்தில் கொண்டு பெங்களூரு காவல்துறையின் உளவு அமைப்பு விழிப்புடன் இருந்தது, அந்தக் கண்காணிப்பின் போது இக்ராவின் அழைப்புகள் காவல் துறையின் பார்வைக்கு வந்தன.
இதையடுத்து பெங்களூரு காவல் துறையினர் இக்ராவைத் தேடி வந்தனர். அவரிடம் விசாரித்ததில், இது எல்லை தாண்டிய காதல் கதை என்பது தெரிய வந்தது.
விசாரணைக்குப் பிறகு, ஜனவரி 20 அன்று இக்ரா வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (FRRO) ஒப்படைக்கப்பட்டார்.
பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்டின் டிசிபி, எஸ் கிரிஷ், பிபிசியிடம், "தற்போதைக்கு அவர் (இக்ரா) மீது சட்டவிரோதமாக நாட்டிற்கு வந்ததைத் தவிர வேறு எந்தக் குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விசாரணை நடந்து வருகிறது." என்றார்.
"சட்டவிரோத நுழைவு, போலி ஆவணத் தயாரிப்பு தவிர, இது ஒரு காதல் கதையாகத் தான் தோன்றுகிறது." என்று காவல் துறையின் மற்றொரு கூற்று தெரிவிக்கிறது.
முலாயம் சிங் யாதவ் போலி ஆவணச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் ஐபிசியின் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு தற்போது பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரசிடம் முறையீடு
பிரயாக்ராஜின் மக்சுத்னா கிராமத்தில் உள்ள முலாயமின் தாயார் சாந்தி தேவி பிபிசி நிருபரிடம், "நாங்கள் பையனையும் பெண்ணையும் விட்டுவிட வேண்டும் என்றே விரும்புகிறோம், அவளை மருமகளாக்கி, அவர்களை நாங்கள் நன்றாக வைத்திருப்போம். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, அவள் எங்கள் மருமகள், நாங்கள் அவளை ஏற்றுக்கொள்வோம். ஜாதி வேறுபாடின்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எங்கள் மகனை விட்டுவிடுங்கள். அரசு விரும்பினால் பெண்ணையும் விட முடியும்." என்றார்.
முலாயமின் தாயார் பாகிஸ்தான் அரசிடம், “கல்யாணம் நடந்துவிட்டது, இருவரையும் வீட்டிற்கு அனுப்புங்கள்” என்று கோருகிறார்.
முலாயமின் சகோதரர் ஜீத் லால் யாதவ் பிபிசியிடம் கூறுகையில், ஜனவரி 19ஆம் தேதி போலீஸ் நடவடிக்கைக்குப் பிறகுதான் முலாயம் மற்றும் இக்ரா பற்றித் தனக்குத் தெரியவந்ததாகத் தெரிவித்தார்.
முலாயம் தனது நண்பருடன் வாழ்ந்து வந்ததாகத் தான் நினைத்ததாக ஜீத் லால் கூறுகிறார்.
“எங்கள் மருமகள் இந்தியாவின் மருமகள்”
ஜீத்லால் யாதவ், இக்ரா பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதை ஊடகங்களில் இருந்து அறிந்து ஏமாற்றமடைந்தார்.
ஜீத்லால், "இப்ப, எங்க குடும்பத்துக்கு என்ன மரியாதை கிடைக்கும் சொல்லுங்கள். நாங்கள் அவளை ஏற்க விரும்பறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நிலைமை பற்றி எங்களுக்குத் தெரியும், ஆனால் இவங்க எண்ணம் தவறாக இல்லை. இவங்க காதலிச்சாங்க. நாம் யாருக்காக சிறையில் இருக்கிறோமோ அந்தப் பெண்ணே போய்விட்டார் என்று என் தம்பிக்குத் தெரிந்தால், அவர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.” என்றார்.
முலாயம் சிங்கின் ஜாமீன் மனுவை வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் ஜீத்லால் யாதவ்.
ஜீத்லால், "விசாரணை நடந்துவிட்டது. அதன் பிறகு இக்ரா பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதற்கு என் சகோதரனை ஏன் சிறையில் அடைக்கிறார்கள் என்று சொல்லுங்கள்" என்கிறார்.
“எப்படியும் அவள் எங்கள் மருமகள், அதனால் உங்கள் மருமகளும் தான், இந்தியாவின் மருமகளும் தான்” என்கிறார் அவர்.
பிபிசியும் பாகிஸ்தானில் உள்ள இக்ரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயன்றது ஆனால் தற்போது அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்