திரவ நைட்ரஜன்: உணவில் இதைக் கலப்பதால் என்ன ஆபத்து? நிபுணர்கள் விளக்கம்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வலியால் துடித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது என சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“திரவ நைட்ரஜன் ஒரு உணவே கிடையாது. இது ஜீரோ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் உணவை பதப்படுத்த, பேக் செய்ய உபயோகப்படுத்தப்படும் ஒரு ரசாயனம். எனவே தான் திரவ நைட்ரஜன் கலந்த நேரடி உணவுப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளோம்” என உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளின் மோசமான விளைவுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வருவதால், உணவுப் பாதுகாப்பு துறையிலிருந்து எங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. சென்னையில் உள்ள உணவகங்களின் பட்டியலைத் தயார் செய்து வருகிறோம். விரைவில் அங்கெல்லாம் சோதனை நடத்த உள்ளோம்."
"நிறைய பார்கள், பார்ட்டி ஹால்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள் என தகவல்கள் வந்துள்ளன. அங்கும் சோதனை நடத்தப்படும். உணவுப் பாதுகாப்புத்துறையின் விதிகளின் படி, இது உணவுப் பொருளே கிடையாது. எனவே கண்டிப்பாக நேரடி உணவுகளோடு திரவ நைட்ரஜன் எடுத்துக்கொள்ளக்கூடாது."
"உணவுகளை பதப்படுத்த, பேக் செய்ய மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் சதீஷ்குமார்.
திரவ நைட்ரஜன் என்றால் என்ன? அதை ஏன் உணவுகள், பானங்களில் பயன்படுத்துகிறார்கள்? அது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? என்பதைக் குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



