சென்னையில் குதிரையை பாதித்த 'கிளாண்டர்ஸ் தொற்று' மனிதருக்கு எவ்வாறு பரவும்? தற்காப்பும் சிகிச்சையும்

சென்னை, கிளாண்டர்ஸ் தொற்று, குதிரை உயிரிழப்பு, மனிதர்களுக்கு பரவுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சென்னை சேப்பாக்கதில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்றால் உயிரிழந்தது. இதையடுத்து, அக்குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்ற குதிரைகளுக்கு ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கால்நடைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த கிளாண்டர்ஸ் தொற்று மனிதர்களுக்கும் பரவக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கிளாண்டர்ஸ் தொற்று என்பது என்ன? அதற்கான பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளும் சிகிச்சையும் என்ன? என்பது உள்ளிட்ட தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

கிளாண்டர்ஸ் தொற்று என்பது என்ன?

'பர்கோல்டேரியா மல்லேய்' எனும் பாக்டீரியாவால் இந்த தொற்று ஏற்படுகிறது. இது, குதிரை, கழுதை, கோவேறு கழுதை போன்ற விலங்குகளுக்கு ஏற்படுகிறது.

"பல ஆண்டுகளாக இந்த விலங்குகளிடையே காணப்படும் பாக்டீரியா தொற்றுதான் இது. இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலும் அவ்வப்போது இந்த பாதிப்பு விலங்குகள் மற்றும் அவற்றை பராமரிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கால்நடைகளை கையாள்பவர்களிடையே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மற்ற விலங்குகளுக்கு இது வேகமாக பரவும். உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கும்" என்கிறார் தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலட்சுமி.

சென்னை, கிளாண்டர்ஸ் தொற்று, குதிரை உயிரிழப்பு, மனிதர்களுக்கு பரவுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை

இந்த நோய் விலங்குகளுக்கு ஏற்பட்டாலோ அல்லது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு ஏற்பட்டாலோ அரசுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவில் இந்த நோயை கட்டுப்படுத்தல் மற்றும் ஒழித்தலுக்காக உருவாக்கப்பட்ட 2025-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட செயல்திட்டத்தின்படி, இந்த தொற்று ஒரு விலங்குக்கு ஏற்பட்டால், அது மற்ற விலங்குகளுக்கு ஏற்படாமல் தடுக்க கருணைக் கொலை செய்வது நடைமுறையாக உள்ளது.

ஏனெனில் இந்த நோய்த்தொற்றுக்கென தடுப்பூசியோ முழுமையான சிகிச்சையோ இல்லை என அந்த செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த விலங்கை எப்படி கவனமாக அப்புறப்படுத்த வேண்டும், அந்த விலங்கு இருந்த இடங்களை எப்படி கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளும் உள்ளன.

நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் ஒருவர் தொடர்புகொள்ளும்போது, அவர்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது 2 வாரங்களில் தெரியும் என்று மருத்துவர் விஜயலட்சுமி தெரிவித்தார். தற்போது சென்னையில் இறந்த குதிரைக்கு ஏற்பட்ட பாக்டீரியா தொற்றில் வேறு ஏதேனும் திரிபு உள்ளதா என்பது குறித்த தரவுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குதிரையிடம் இருந்து மனிதருக்கு எவ்வாறு பரவும்?

சென்னை, கிளாண்டர்ஸ் தொற்று, குதிரை உயிரிழப்பு, மனிதர்களுக்கு பரவுமா?

பட மூலாதாரம், Getty Images

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவது மிக குறைவாகவோ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் என்கிறார் அவர்.

"நோய் பாதிக்கப்பட்ட விலங்கை லேசாக தொடும்போதோ அல்லது தூரத்திலிருந்து அதை கவனித்துக் கொள்ளும்போதோ இந்த தொற்று ஏற்படாது. மாறாக, அதன் மூச்சுக்காற்று நம் மீது படும் அளவுக்கு நெருங்கி அதை பராமரிக்கும் போது பரவுவதற்கான வாய்ப்புள்ளது." என்கிறார் விஜயலட்சுமி.

"பாதிக்கப்பட்ட விலங்கின் தோலில் ஏதேனும் காயம் இருந்து நமக்கும் ஏதேனும் காயம் இருந்து இரண்டுக்கும் தொடர்பு ஏற்படும்போது (contact) இதனால் தொற்று பாதிப்பு ஏற்படலாம்." என்கிறார் அவர்.

"இந்த நோய்த்தொற்று குதிரையின் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு நெறி கட்டி, அதிலிருந்து வரும் நீரால் மற்ற விலங்குகளுக்குப் பரவுகிறது." என்கிறார், அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர்.

மனிதர்களிடையே பாதிப்பு எந்தளவில் இருக்கும்? சிகிச்சை என்ன?

மனிதர்களுக்கு நோய்க்கிருமிகளை கண்டறியும் கல்ச்சர் பரிசோதனையின் மூலம் இத்தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்யலாம். மற்ற பரிசோதனைகளில் முடிவுகள் மாறுபடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொற்றை பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால் ஆண்டிபாக்டீரியா மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறும் மருத்துவர் விஜயலட்சுமி, "நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படலாம். நுரையீரல் தொற்று, செப்டிசீமியா போன்று உள்ளுறுப்புகளில் தொற்று ஏற்பட்டால் உயிரிழக்கவும் நேரிடலாம்." என்றார்.

இணை நோய் உள்ளவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார்.

எனினும், மனிதர்களிடத்திலிருந்து மனிதர்களுக்கு இத்தொற்று பரவுமா என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சென்னை, கிளாண்டர்ஸ் தொற்று, குதிரை உயிரிழப்பு, மனிதர்களுக்கு பரவுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குதிரை போன்ற விலங்குகளை கவனிப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் (சித்தரிப்புப் படம்)

அறிகுறிகள் என்னென்ன?

இத்தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடத்தில் காய்ச்சல், சோர்வு, கணுக்காலில் வீக்கம், உணவு உண்ணாமை போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

மனிதர்களுக்கு,

  • காய்ச்சல்
  • கை-கால் வீக்கம்
  • கணுக்கால் வீக்கம்
  • சாதாரண சளி, இருமல் ஏற்பட்டு நுரையீரல் தொற்று வரை ஏற்படலாம்
  • நிமோனியா

உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். ஆரம்பநிலையிலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் நீரிழிவு, சிறுநீரக நோய் போன்று இணைநோய் உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தற்காப்பு வழிகள்

"குதிரைகளை பராமரிப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விலங்குடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் லேசாக இருக்கும்போதே சிகிச்சை எடுக்க வேண்டும். எனினும் இந்த தொற்று அறிகுறிகளை வைத்து உறுதி செய்ய முடியாது. பரிசோதனை செய்தால் தான் தெரியும்." என்கிறார் மருத்துவர் விஜயலட்சுமி.

"விலங்குகளை கையாள்பவர்கள் முகக்கவசம் அணிவது, கையுறைகள் அணிவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விலங்கை தனிமைப்படுத்த வேண்டும்" என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

அந்த விலங்குகள் உள்ள இடம், பொருட்களை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை உறுதிசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு