இந்தியாவில் வெள்ளி இறக்குமதிக்கு மட்டும் புதிய கட்டுப்பாடு ஏன்?

இந்தியாவில் தங்கத்தை விடுத்து வெள்ளி இறக்குமதிக்கு மட்டும் புதிய கட்டுப்பாடு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் அரசின் புதிய முடிவைத் தொடர்ந்து வெள்ளி விலை உயரக்கூடும்
    • எழுதியவர், சந்தன் ஜஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்திய அரசு வெள்ளி இறக்குமதி கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் இதை அறிவித்துள்ளது.

இந்த திருத்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வெள்ளி "தடையற்ற" எனும் பிரிவிலிருந்து "கட்டுப்படுத்தப்பட்ட" எனும் பிரிவுக்கு மாறியுள்ளது. அதாவது, முன்பு வெள்ளி இறக்குமதி செய்வதற்குச் சுங்க வரி மட்டும் செலுத்தினால் போதுமானதாக இருந்தது; ஆனால் இனிமேல் அது சாத்தியமாகாது.

வெள்ளி இறக்குமதிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் உரிமம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்; அந்த உரிமத்தைப் பெற்ற பின்னரே வெள்ளி இறக்குமதி அனுமதிக்கப்படும்.

குறிப்பிடத்தக்க வகையில், வெள்ளியை விட விலை மிகவும் அதிகமாக உள்ள தங்கத்துக்கு இத்தகைய நிபந்தனைகள் எதுவும் பொருந்தாது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதையும், இதற்குப் பின்னாலுள்ள நோக்கம் என்னவாக இருக்கலாம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

மே 12 அன்று, அந்நிய செலாவணியை சேமிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றத்தின் காரணமாக, அவற்றின் கொள்முதல் குறையும்; இதன் விளைவாக, அவற்றை இறக்குமதி செய்வதற்கு இந்தியா செலவிட வேண்டிய அந்நிய செலாவணி குறையும் என்பதே இதன் தெளிவான நோக்கமாகும்.

வெள்ளி இறக்குமதி மீது புதிய கட்டுப்பாடு ஏன்?

இந்தியாவுக்குத் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய முன்பு இறக்குமதி வரி மட்டும் செலுத்தினால் போதுமானதாக இருந்தது; ஆனால் தற்போது வெள்ளியை இறக்குமதி செய்ய உரிமம் தேவைப்படும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்குத் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய முன்பு இறக்குமதி வரி மட்டும் செலுத்தினால் போதுமானதாக இருந்தது; ஆனால் தற்போது வெள்ளியை இறக்குமதி செய்ய உரிமம் தேவைப்படும்.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், வெள்ளி இறக்குமதி தொடர்பான தனது புதிய உத்தரவை மே 16 அன்று வெளியிட்டது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட வெறும் நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உலக வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பின் (GTRI) இயக்குநரான அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இதுவரை, இறக்குமதி வரியை செலுத்தி, நீங்கள் விரும்பிய அளவு வெள்ளியை இறக்குமதி செய்துகொள்ள முடிந்தது. ஆனால் இனிமேல், வெள்ளி இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை உங்களுக்கு வழங்குவதா, இல்லையா என்பதை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (DGFT) தான் முடிவு செய்யும்," என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவர் கூறுகையில், "2022-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது; அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை இந்தியா ஆண்டுதோறும் 1% குறைக்க வேண்டும். எனவே, தற்போதைய நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளிக்கு இந்தியாவில் 7% இறக்குமதி வரியை மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. மாறாக, பிரிட்டனிலிருந்து வெள்ளியை இறக்குமதி செய்தால், 15% இறக்குமதி வரியை செலுத்த வேண்டியிருக்கும்" என்றார்.

"இது ஒரு மிகப்பெரிய வித்தியாசம். இந்த முடிவுக்குப் பின்னுள்ள காரணத்தை அரசாங்கம் வெளியிடவில்லை. எனினும், அந்நிய செலாவணியை சேமிப்பது இதன் நோக்கமாக இருந்தால், வெள்ளியை விட பல மடங்கு விலை உயர்ந்த தங்கத்திலும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்."

அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் 'வெளிநாட்டு வர்த்தக கூடுதல் இயக்குநர் ஜெனரல்' பதவியை வகித்துள்ளார்.

அவர் கூறுகையில், "பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு வெறும் 1% மட்டுமே தள்ளுபடி கிடைக்கிறது, அதாவது வரி விகிதம் 14% ஆக உள்ளது; இது ஒன்றும் பெரிய வித்தியாசமல்ல. ஆனால் வெள்ளியைப் பொறுத்தவரை, தனது கொள்கையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, எந்தவொரு வணிகரும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியாவுக்கு வெள்ளியைக் கொண்டுவந்துவிடுவாரோ என்று அரசாங்கம் அஞ்சக்கூடும். தற்போதைய நிலையில், இதுவே நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது." என நம்புகிறார்.

இதில் தெளிவாக காணக்கூடிய ஒரு விளைவு, வெள்ளியின் விலை உயரக்கூடும்.

48 மணிநேரத்தில் மீண்டும் உயர்ந்த சிஎன்ஜி விலை

டெல்லியில் சிஎன்ஜி விலையை IGL (இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட்) மீண்டும் உயர்த்தியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் சிஎன்ஜி விலையை IGL (இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட்) மீண்டும் உயர்த்தியுள்ளது

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை முடக்கப்பட்டது; இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரத் தொடங்கின. இந்நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் அதன் தாக்கம் தற்போது தென்படத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தலா ரூ. 3 உயர்த்தப்பட்டது; அதேவேளையில், சிஎன்ஜி விலையும் கிலோகிராமுக்கு ரூ. 2 அதிகரிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வால் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை சிஎன்ஜி விலை மீண்டும் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டது.

டெல்லியில் 48 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக சிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக, தலைநகரில் ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை 80 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து, இந்திய இளைஞர் காங்கிரஸ் தன் எக்ஸ் பக்கத்தில், "இன்றைய காலை செய்திகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றடைந்துள்ளார்; மற்றொன்று, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்குள் சிஎன்ஜி விலை இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, நீங்கள் நாட்டைத் தொடர்ந்து காப்பாற்றி வாருங்கள்" என பதிவிடப்பட்டுள்ளது.

பிகார் தொடர்பான கூற்றுகளை மறுக்கும் ஹெச்பிசிஎல்

பிகாரில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் குறித்த சமூக ஊடகத் தகவலை HPCL மறுத்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் குறித்த சமூக ஊடகத் தகவலை HPCL மறுத்துள்ளது

டீசல் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கடும் கூட்டம் நிலவுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதுபோன்ற பல காணொளிகளில், கூட்டத்தின் காரணமாக மக்கள் கோபத்துடன் காணப்படுகிறார்கள்.

பிகாரில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஹெச்பிசிஎல் நிறுவனம் (ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) இந்த கூற்றை மறுத்துள்ளது.

பிகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம்பற்றி முன்வைக்கப்படும் கூற்றுகள் பொய்யானவை என்று அந்த நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.

"பிகார் தொடர்பாக, தவறான தகவல்களைப் பரப்பும், ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பிகாரில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறைந்திருப்பதாகவும், விற்பனையின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் காணொளி தவறாக குறிப்பிடுகிறது" என்று ஹெச்பிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"அந்தக் காணொளியில் முன்வைக்கப்பட்டுள்ள கூற்றுகள் முற்றிலும் தவறானவை; அவை சில்லறை விற்பனை நிலையத்தில் நிலவும் உண்மையான சூழலைப் பிரதிபலிக்கவில்லை. இக்காலகட்டம் முழுவதும், அந்த விற்பனை நிலையத்தில் போதுமான அளவு இருப்பு இருந்துள்ளது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு