You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில்
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிபிசி அரபு சேவை நிமிஷா பிரியாவின் முன்னாள் தொழில் கூட்டாளியான, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தியுடன் பேசியது.
தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் நிமிஷா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜூலை 16ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அவரது மரண தண்டனையை ஏமனின் உள்ளூர் நிர்வாகம் ஒத்திவைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலால், நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், நிமிஷா பிரியாவின் வழக்கறிஞர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அப்தெல் ஃபத்தா மஹ்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
2017ஆம் ஆண்டில், தலால் மஹ்தியின் உடல் ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. 36 வயதான நிமிஷா தற்போது ஏமன் தலைநகர் சனாவின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்து, பின்னர் உடலை துண்டாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை நிமிஷா மறுத்தார். மஹ்தி, நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு தரப்படுமா?
இப்போது தலால் மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி, "தலால், நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தார், அவரை மிரட்டினார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்று கூறியுள்ளார்.
"இது ஒரு தவறான கூற்று, இதற்கு எந்த அடிப்படையும் இல்லை" என்று அப்தெல் மஹ்தி கூறினார்.
"குற்றம்சாட்டப்பட்ட நிமிஷா கூட இதைக் குறிப்பிடவில்லை அல்லது தன்னுடைய பாஸ்போர்ட்டை அவர் (தலால் மஹ்தி) பறித்துக் கொண்டதாக கூறவில்லை" என்று அவர் கூறினார்.
தனது சகோதரர் தலால், நிமிஷாவை 'கொடுமைப்படுத்தியதாக' வந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் அப்தெல் கூறினார்.
நிமிஷாவிற்கும் அவரது சகோதரர் தலாலுக்கும் இடையிலான உறவைப் பற்றி பேசிய அப்தெல் மஹ்தி, "இருவருக்கும் (தலால் மற்றும் நிமிஷா) இடையில் ஒரு இயல்பான உறவே இருந்தது" என்று கூறினார்.
"அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொண்ட பிறகு, ஒரு கிளினிக் நடத்துவதற்கான தொழில் கூட்டாண்மையை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டு, 3-4 ஆண்டுகள் வரை அந்த திருமண உறவில் இருந்தனர்" என்று அப்தெல் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "உண்மையை மறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கொலையாளியை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து, ஒரு குற்றத்தை நியாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில் 'சமரசம்' குறித்த கேள்விக்கு, அதாவது நிமிஷா பிரியாவை மன்னிப்பது குறித்து பேசிய அப்தெல், "அவரை மன்னிப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் 'கடவுளின் சட்டம்' செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை விடக் குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்." என்றார்.
நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி முன்னதாக ஜூலை 16 ஆம் தேதி (புதன்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பிபிசி ஹிந்தியின் பத்திரிகையாளர் இம்ரான் குரேஷியின் கூற்றுப்படி, "இந்திய அதிகாரிகள் நிமிஷாவைக் காப்பாற்ற ஏமனின் சிறை நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணை அலுவலகத்துடன் தொடர்பில் இருந்தனர். இதன் காரணமாக இந்த மரண தண்டனை தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது."
மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு நிமிஷாவின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் முறையிட்டனர்.
இதன் பின்னர், இந்திய அரசாங்கம் நிமிஷா குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தது. சமீப காலங்களில், இரு தரப்பினருக்கும் (மஹ்தி மற்றும் நிமிஷா) இடையே ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்ட கூடுதல் அவகாசம் கிடைக்க உதவும் வகையில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.
நேற்று (ஜூலை 15), பிபிசி தமிழிடம் பேசிய ஏமனில் நிமிஷா வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம், "எல்லாம் நேர்மறையான திசையில் நகர்கிறது. இன்று (ஜூலை 15) இறுதிக்குள் சில நல்ல செய்திகள் வரக்கூடும். ஆனால் அது நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட செய்தியாக இருக்காது. மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் மட்டுமே ஒத்திவைக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், "இதுவரை மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னிக்கவில்லை. அவர்கள் மன்னித்தால் மட்டுமே மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். தற்போது, மரணதண்டனை நிறைவேற்றும் நாளை ஒத்திவைப்பது மட்டுமே எங்களுக்கு இருக்கும் வழி, இது மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எங்களுக்கு அதிக அவகாசம் கொடுக்கும்" என்றும் அவர் கூறியிருந்தார்.
ஜூலை 14, திங்கட்கிழமை, கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக 'ஏமனைச் சேர்ந்த சில ஷேக்குகளுடன் பேசினார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா பிபிசி ஹிந்தியிடம், "சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியைச் சந்தித்தனர். அதன் பிறகு அவர், அங்குள்ள (ஏமன்) சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினர்" என்று கூறினார்.
"மஹ்தியின் உறவினர்கள் உள்பட, ஏமனில் செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் சுபாஷ் சந்திரா கூறினார்.
மரண தண்டனை ஏன்?
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.
அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நிமிஷா 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
நிமிஷாவை காப்பாற்ற ஒரே வழி மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னிப்பதே ஆகும். நிமிஷாவின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும், 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூபாய் 8.59 கோடி) வரை தியா அல்லது 'ப்ளட் மணி' ஆக மஹ்தியின் குடும்பத்திற்கு வழங்க முன்வந்துள்ளனர்.
ஆனால் இந்தத் தொகையை ஏற்றுக்கொண்டு நிமிஷாவை மஹ்தியின் குடும்பத்தினர் மன்னித்தால் மட்டுமே அவரது விடுதலை சாத்தியமாகும்.
ஏமன் உச்ச நீதிமன்றத்தில் நிமிஷா பிரியா தரப்பு மனு நிராகரிப்பு
2020ஆம் ஆண்டு, ஏமன் உள்ளூர் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவரது குடும்பத்தினர் இந்த முடிவை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், ஆனால் அவர்களின் மேல்முறையீடு 2023இல் நிராகரிக்கப்பட்டது.
ஜனவரி 2024 இல், ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் உச்ச அரசியல் கவுன்சிலின் தலைவரான மஹ்தி அல்-மஷாத், நிமிஷாவின் மரண தண்டனையை அங்கீகரித்தார்.
ஏமனின் 'ஷரியா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சட்ட அமைப்பின் கீழ், இப்போது ஒரே ஒரு இறுதி வழி மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்டவரின் (மஹ்தி) குடும்பம் விரும்பினால், 'தியா' (Blood Money) பணத்தைப் பெற்று அவர்கள் நிமிஷாவை மன்னிக்கலாம்.
நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, 2024 ஏப்ரல் முதல் ஏமனில் இருக்கிறார். தனது மகளைக் காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்து வருகிறார்.
மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏமனில் வசிக்கும் சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோமிற்கு அவர் அதிகாரமளித்துள்ளார்.
'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' என்ற குழு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி பணம் சேகரிக்கிறது. அதன் மூலம், மஹ்தியின் குடும்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் வரை வழங்க தயாராக இருப்பதாக சாமுவேல் ஜெரோம் கூறியுள்ளார்.
இந்திய அரசு என்ன செய்தது?
கடந்த ஆண்டு டிசம்பரில், நிமிஷாவின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிடுமாறு இந்திய அரசிடம் முறையிட்டனர்.
இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து எங்களுக்குத் தெரியும். நிமிஷாவின் குடும்பத்தினர் அவரை மீட்க சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று கூறியிருந்தார்.
"இந்த விஷயத்தில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என்று ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை மூலம் மன்னிப்பு பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியானதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு