கேரள கன்னியாஸ்திரிகள் சத்தீஷ்கரில் கைது செய்யப்பட்டது ஏன்?

    • எழுதியவர், அலோக் புதுல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

சத்தீஸ்கரின் துர்க் பகுதியில் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் குற்றச்சாட்டில் கேரளாவைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராய்ப்பூர் முதல் டெல்லி வரை இந்த சம்பவம் பூகம்பமாக வெடித்தது.

ஒருபுறம் போலீஸ் தங்களின் வேலையை செய்வதாக சத்தீஸ்கர் அரசு கூறுகிறது. மறுபுறம் கன்னியாஸ்திரிகள் தவறுதலாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆட்கடத்தலிலோ, மதமாற்றத்திலோ தொடர்பில்லை என கேரள மாநில பாஜக தலைவர் கூறுகிறார்.

கடந்த திங்கட்கிழமை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதினார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்.பி., ஹிப்பி எடன் மக்களவையில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ஒத்துவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

கடந்த செவ்வாய்கிழமை அன்று கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் அணூப் ஆண்டனி ஜோசப், ராய்பூர் சென்றார். மறுபுறம், இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் உண்மையை கண்டறிவதற்காக துர்க் பகுதிக்கு சென்றனர்.

அதேநாளில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாஸ்திரிகளை சந்தித்தனர். எம்.பிக்கள்., கே.பிரான்சிஸ் ஜார்ஜ், பென்னி பெஹானன், சப்தகிரி உல்கா, என்.கே.பிரேமாசந்திரன், ரோஸி எம்.ஜான் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

இருப்பினும் இடதுசாரி கட்சி எம்.பி., கே.ராதாகிருஷ்ணன், ஏஏ ரஹிம், பிபி சுனீர், ஜோஸ் கே மணி மற்றும் தலைவர்கள் பிரிந்தா காரட், அன்னி ராஜா ஆகியோருக்கு கன்னியாஸ்திரிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

சந்திப்புக்குப் பிறகு பேசிய எம்.பி., சப்தகிரி உல்கா, "கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவர் மருந்தாளர் (Pharmacist), மற்றொருவர் செவிலியர். அவர்களின் தோற்றத்தைக் கண்டதும் போலீசார் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்களை அழைத்துள்ளனர். அவர்கள் வந்ததும் கலவரம் செய்ததால், மதமாற்றம் மற்றும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்வோம்" என்றார்.

எனினும் போலீஸார் நன்கு விசாரணை நடத்திய பிறகே இருவரையும் கைது செய்ததாக ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் கூறுகிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய், "பஸ்டாரில் உள்ள நாராயணபூரைச் சேர்ந்த 3 பெண்களுக்கு செவிலியர் பயிற்சி முடித்ததும் வேலை கிடைக்கும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது"

நாராயணபூரைச் சேர்ந்த நபர் ஒருவர் 3 பெண்களையும் துர்க் ரயில் நிலையத்தில் கன்னியாஸ்திரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இவர்கள் ஆக்ரா அழைத்துச் செல்லப்பட இருந்தனர்.

"இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது மக்களை ஏமாற்றி ஆட்கடத்திலில் ஈடுபட்டு அவர்களை மதமாற்றம் செய்யும் பிரச்னை. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிமன்ற நடைமுறையில் உள்ளது. சட்டத்தின் படி இதற்கு தீர்வு கிடைக்கும். இந்த பிரச்னைக்கு எந்த சூழலிலும் அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல" என விஷ்ணு தேவ் தெரிவித்தார்.

குற்றச்சாட்டை மறுக்கும் குடும்பத்தினர்

கேரளாவின் அஸிசி சிஸ்டர்ஸ் ஆஃப் மேரி இமாக்குலேட் (Assisi Sisters of Mary Immaculate) அமைப்பைச் சேர்ந்த கன்னியாஸ்திரி வந்தனா பிரான்ஸின் மற்றும் கன்னியாஸ்திரி பிரீத்தி மேரியை பஜ்ரங் தள தலைவரின் புகாரை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று துர்க் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இரு கன்னியாஸ்திருகளும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மேலும் நாராயணபூரைச் சேர்ந்த பழங்குடி பெண் சுக்மான் மண்டவி என்பவர் மீதும் ஆட்கடத்தல் மற்றும் 3 பெண்களை மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் இந்த 3 பெண்களும் அவர்களின் குடும்பத்தினரின் விருப்பத்துடன்தான் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கன்னியாஸ்திரிகள் கூறினர்.

ஆனால் வழக்குப் பதிவு செய்ததும் போலீசார் 2 கன்னியாஸ்திரிகள் மற்றும் சுக்மான் மண்டவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்ய அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்ட 3 பெண்களின் குடும்பத்தினரும் இதை மறுக்கின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே கிறஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அதற்கு முன்பிருந்தே இந்த 3 பெண்களின் மூத்த சகோதரி அதே கன்னியாஸ்திரிகளிடம் வேலை பார்த்து வந்ததாக அவர் கூறுகிறார்.

நாராயண்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று, தங்களின் குழந்தைகள் கடத்தப்படவில்லை, எங்கள் விருப்பத்துடன்தான் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் எனக் கூறினோம் என்கின்றனர் குடும்பத்தினர்.

கேளர பாஜகவின் விளக்கம்

எனினும் சத்தீஸ்கர் அரசின் விளக்கத்திற்கு முரணாக, கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், "கன்னியாஸ்திரிகள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களோ, மதமாற்றம் செய்பவர்களோ அல்ல" எனக் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் சந்திரசேகர், இது துரதிர்ஷ்டவசமான கைது எனக் குறிப்பிட்டார். தவறான தகவல்கள் மற்றும் தவறான புரிதலால் கைது நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

3 பெண்களும் அவர்களின் குடும்பத்தினரின் விருப்பத்துடன்தான் ஆக்ராவிற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறுனார்.

மேலும் இந்த 3 பெண்களும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், சொந்த விருப்பத்தின் பேரிலேயே கன்னியாஸ்திரிகளுடன் சென்றனர் என தெரிவித்தார்.

"ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 2 கன்னியாஸ்திரிகளுமே நிரபராதிகள். இதை நிரூபித்து அவர்களை விடுவிப்பதற்கு மாநில பாஜக உதவும்" என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் சர்ச்சை:

பொதுவாக சர்குஜா பகுதியில் இருந்து மெட்ரோ நகரங்களுக்கு பெண்களை கடத்திச் செல்லப்பட்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இது குறைந்து வருகிறது. எனினும் இதற்கு பின் மத ரீதியான காரணங்கள் ஏதுமில்லை.

தேசிய குற்ற ஆய்வு பணியகம் (NCRB) தகவல்படி, சத்தீஸ்கரில் 2018ல் 51 வழக்குகளும், 2019ல் 50, 2020ல் 38, 2021ல் 29, 2022ல் 26 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதற்கு மாறாக, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக வரும் குற்றச்சாட்டுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.

பஸ்டர் பகுதியில், பொதுவாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பழங்குடியின மக்கள் இறந்தபின் அவர்களின் இறுதிச்சடங்கு செய்வதில் பிரச்னை ஏற்படும். தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை கூடத்தில் மதமாற்றம் செய்வதாக சில இந்து அமைப்புகள் கலவரம் செய்த சம்பவங்களும் உள்ளன, பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் பூகம்பமாக வெடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உள்துறை அளித்துள்ள தரவுகளின்படி, 2021-22ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் மதமாற்றம் தொடர்பாக 31 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 2022-23ஆம் ஆண்டில் 16 புகார்கள் வந்ததில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த ஆண்டு 2024-25ல் புகார்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது. அதில் 23 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்ததும், மதமாற்றத்திற்கு எதிராக விரைவில் வலுவான சட்டம் கொண்டவரப்படும் என அறிவித்தது. ஆனால் சட்டம் இன்றும் கொண்டுவரப்படவில்லை.

அடுத்த சட்டமன்ற கூட்டத்திலேயே சட்டம் கொண்டுவரப்படும் என மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய விஜய் சர்மா, "சத்தீஸ்கரில் தற்போது மதமாற்றம் சட்டம் 1968 புழக்கத்தில் உள்ளது. 2006ஆம் ஆண்டில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அப்போதைய ஆளுநர் அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இப்போது 2025ம் ஆண்டில் உள்ளோம். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் புதிய மாறுதல்களுடன் கூடிய ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். சமூகத்தின் இந்த கொடூரத்தை தவிர்க்க, நிச்சயம் கொண்டுவரப்படும். வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படலாம் என நினைக்கிறேன்" என்றார்.

இது மாநிலத்தில் எந்தளவிற்கு மதமாற்றத்தை தடுக்கும் எனக் கூறுவது கடினம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு