காணொளி: பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்- இந்தியாவுக்கு சிக்கலா?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்பு- இந்தியாவுக்கு சிக்கலா?
காணொளி: பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்- இந்தியாவுக்கு சிக்கலா?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டிரம்பை வாஷிங்டனில் சந்தித்தனர்.

முன்னதாக, இவர்களை சிறந்த ஆளுமைகள் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அந்த சந்திப்பில் அதிபர் டிரம்பை அமைதிக்கான மனிதர் என ஷெபாஸ் ஷெரிஃப் குறிப்பிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் உடனிருந்தனர்.

ஒரே வாரத்தில் ஷெபாஸ் ஷெரிஃப், டிரம்பை சந்திப்பது இது 2வது முறை. முன்னதாக காஸா பிரச்னை தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடனான சந்திப்பு நடந்தபோதும் அவர் டிரம்பை சந்தித்திருந்தார்.

அதே போல 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் சந்திப்பது இதுவே முதல் முறை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபரை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 'இது அன்பான சந்திப்பு' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "இந்தியாவுக்கு எதிரான வெற்றி, சௌதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாகிஸ்தான் - அமெரிக்க உறவுகளில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம். 2025 வெற்றிகளால் நிரம்பிய ஆண்டு" என குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் எந்த மூன்றாம் நாடும் பங்கு வகிக்கவில்லை என இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. மறுபுறம், இந்த மோதலைத் தடுத்ததில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்ததாக பாகிஸ்தான் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது.

சரி, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் உறவு நெருக்கமாகி வருவது எப்படி? முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.