அணுசக்தி மையங்களில் ஆய்வுக்கு அனுமதி மறுக்கும் இரான் - அமெரிக்காவின் கோபத்தால் நிகழப்போவது என்ன?

இரான் மற்றும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐஏஇஏ இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி இரானுக்கு வருவதற்கான சாத்தியக்கூற்றை நம்பிக்கையின்மை, பதற்றத்தை காரணம் காட்டி இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதற்காக இரான் அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அரக்சி தெளிவுபடுத்தினார்.

மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் இருக்கும் கோபத்தை பார்த்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அதை கண்டித்ததுடன், ஐஏஇஏவின் பணிகளை வெளிப்படையாக ஆதரித்துள்ளார்.

ஐஏஇஏவுக்கு எதிரான இரானின் கடுமையான நிலைப்பாடு, அதன் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதை மேலும் சிக்கலானதாக மாற்றக்கூடும்.

க்ரோஸி வருகைக்கு மறுப்பு தெரிவித்த இரான்

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஜூன் 24ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், அப்பாஸ் அரக்சியை சந்தித்து ஐஏஇஏ-இரான் இடையேயான பேச்சுவார்த்தையை நடத்த ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி முன்வந்தார்.

ஆனால்,"இன்றைய சூழலில் ரஃபேல் க்ரோஸியை அழைக்கும் எண்ணம் துளியும் இல்லை," என இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அரசு தொலைக்காட்சி சேனல் ஐஆர்ஐஎன்என்னுக்கு ஜூன் 26ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

"அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய அவர் விரும்புகிறார்," என அவர் தெரிவித்தார்.

ஐஏஇஏ தலைவரின் அண்மைக் கால நடவடிக்கைகள், குறிப்பாக இரானுக்கு எதிராக ஐஏஇஏ ஆளுநர்கள் குழு தீர்மானம் நிறைவேற்ற காரணமான அறிக்கை போன்றவையே தற்போதைய முட்டுக்கட்டைக்கு முக்கியமான காரணம் என அரக்சி குற்றம்சாட்டினார்.

"க்ரோஸி தனது அறிக்கையில் நேர்மையாக செயல்படவில்லை. எங்களது அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டபோது, முகமையால் அந்த தாக்குதலை கண்டிக்கக்கூட முடியவில்லை," என்று அரக்சி கூறினார்.

ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்துவதற்கு இரான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் அரக்சி தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்து, தற்போது நாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாகியிருக்கிறது," என அரக்சி கூறுகிறார்.

இந்தச் சட்டம் ஒத்துழைப்புக்கான கதவை முழுமையாக மூடவில்லை என்றும் எதிர்காலத்தில் இது இரானின் உச்ச பாதுகாப்பு அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முடிவின் அடிப்படையில் அமையும் என அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்காவின் வலுவான பதிலடி

மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் எழுப்பப்படும் குரல்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

"ஐஏஇஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸியை கைது செய்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இரானில் எழுந்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல, கண்டிக்கத்தக்கது. இரானில் ஐஏஇஏவின் முக்கியமான விசாரணைகளையும், கண்காணிப்பு பணிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இயக்குநர் ஜெனரல் மற்றும் ஐஏஇஏவின் கடுமையான உழைப்பையும் தொழில்முறை அணுகுமுறையையும் பாராட்டுகிறோம். ஐஏஇஏ ஊழியர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவேண்டும் என இரானை வலியுறுத்துகிறோம்," என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

இரானின் 2015ஆம் ஆண்டு ஜேசிபிஒஏ அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு அங்கமாக இருந்த பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளையும் அரக்சி கடுமையாக எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் தற்போது கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை.

'ஸ்நாப்பேக் மெக்கானிசம்' என சொல்லப்படும் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டாம் என அவர்களுக்கு கூறினார். "அந்த தூண்டும் நடைமுறையை பயன்படுத்துவது அவர்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக இருக்கும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் இரானின் அணுசக்தி விவகாரத்தில் அவர்களின் பங்கை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என அவர்களிடம் தெளிவாக கூறினேன்," என அராக்சி தெரிவித்தார்.

ஸ்நாப்ஃபேக் மெக்கானிசம் என்பது ஒரு விதிமுறையாகும். இதன்படி அணு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை இரான் மீறியதாக கருதப்பட்டால், 2015-க்கு முன்பு இருந்த ஐக்கிய நாடுகளின் கடுமையான தடைகள் தானாகவே மீண்டும் அமலுக்கு வரும்.

ஐஏஇஏவின் வரலாறு மற்றும் இரானில் அதன் பங்கு

சர்வதேச அணுசக்தி முகமை(International Atomic Energy Agency - IAEA) என்பது ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும். இது உலகளவில் "அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அணுக்கள்" (Atoms for Peace and Development) என்றும் அறியப்படுகிறது.

இது அணுசக்தி துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பின் மையமாக விளங்குகிறது, இதன் உறுப்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கூட்டாளிகளுடன் இணைந்து அணு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக, நம்பகமாக, மற்றும் அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

ஐஏஇஏ 1957 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது. இந்தியாவும் அப்போதிலிருந்து இதன் உறுப்பினராக உள்ளது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1953 டிசம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய "அமைதிக்கான அணுக்கள்" (Atoms for Peace) உரையில் இந்த அமைப்புக்கான கரு உருவானது.

வடகொரியா 1974 இல் இதன் உறுப்பினராக இணைந்தது, ஆனால் 1994-இல் விலகியது. தற்போது ஐஏஇஏ-வில் 180 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இரானின் அணுசக்தி திட்டத்தை ஐஏஇஏ கடந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வருகிறது.

2015 இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்தவும், பன்னாட்டு ஆய்வுகளை அதிகரிக்கவும் இரான் ஒப்புக்கொண்டது,

ஆனால் 2018-ல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதிய தடைகளை விதித்த பின்னர், இரான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை குறைத்துக்கொண்டது. அது யுரேனியம் செறிவூட்டல் அளவை அதிகரித்ததுடன், ஐஏஇஏ ஆய்வுகளை பல இடங்களில் குறைத்ததுடன், சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்துவிட்டது.

இரான் தனது முக்கிய அணுசக்தி மையங்களுக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Non-Proliferation Treaty) மீறியதாக குற்றம்சாட்டி ஜூன் 12 அன்று, ஐஏஇஏ ஆளுநர்கள் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

முன் அறிவிக்கப்படாத இடங்களில் யுரேனியம் கண்டெடுக்கப்பட்டது குறித்து முகமைக்கு போதுமான பதில்கள் அளிக்கப்படவில்லை.

இந்த தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என இரான் தெரிவித்தது. இதற்கு ஒருநாள் கழித்து இஸ்ரேல் இரானின் பல அணுசக்தி நிலைகளின் மீது தாக்குதலை தொடங்கியது, இதனால் ஏற்கனவே இருந்த பதற்றம் மேலும் அதிகரித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு