'வீட்டில் அவரது புகைப்படத்தை வைக்க கூட தைரியம் இல்லை' – பஹல்காமில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் வாழ்க்கையை எப்படி சமாளிக்கின்றன?

ஐஷான்யா திவேதி

பட மூலாதாரம், Tariq Khan/BBC Hindi

படக்குறிப்பு, கடந்த ஆண்டு இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஐஷான்யா திவேதியின் கணவர் சுபம் கொல்லப்பட்டார்.
    • எழுதியவர், ஸோயா மதீன், கமல் சைனி மற்றும் நீது சிங்
    • பதவி, பிபிசி பஞ்சாபி மற்றும் பிபிசி ஹிந்தி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இன்னும் தங்களின் இழப்போடு வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

தனது கணவருடன் ஒரு காலத்தில் பகிர்ந்து கொண்ட அறையில் இருந்தபடி, சுவரில் இருக்கும் ஒரு கண்ணாடியைக் காட்டுகிறார் ஐஷான்யா திவேதி.

"அங்கே ஏன் கண்ணாடி இல்லை என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். அடுத்த நாளே அவர் ஒன்றை வாங்கி வந்துவிட்டார்" என்று அவர் கூறினார்.

22 ஏப்ரல் 2025 அன்று பஹல்காமிற்கு அருகில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொல்லப்பட்ட 26 பேரில் ஐஷான்யாவின் கணவர் சுபம் திவேதியும் ஒருவர். பல தசாப்தங்களில் காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது. அந்த நாட்டில் செயல்படும் ஒரு குழுவே இந்தக் கொலைகளைச் செய்ததாக குற்றஞ்சாட்டியது.

ஆனால் பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தீவிரவாதக் குழுக்களின் தளங்கள் என்று கூறி பாகிஸ்தானில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதைத் தொடர்ந்து அணு ஆயுத பலம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்களுக்குக் கடுமையான குண்டு தாக்குதல்களும் வான்வழித் தாக்குதல்களும் நடந்தன. இறுதியில் திடீரென போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

வாழ்க்கை பயணத்தின் தொடக்கத்தில் இருந்தவர்கள்

பஹல்காம் தாக்குதலில் பெரும்பாலும் இந்து ஆண்கள் குறிவைக்கப்பட்ட விதம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பாதிக்கப்பட்டவர்களில் பலர் இளம் பயணிகள். அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை மற்றும் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கத்தில் இருந்தவர்கள், அவர்களது வாழ்வு கொடூரமாகப் பறிக்கப்பட்டது.

எச்சரிக்கை: கீழே உள்ள விவரங்கள் சில வாசகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

அந்தத் துயரத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டில், அதன் பாதிப்புகள் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் அளவிடப்படுகின்றன.

ஆனால் அதன் பின்விளைவுகள் தனிப்பட்ட இடங்களில்தான் அதிகமாக உணரப்படுகின்றன. காலப்போக்கில் துக்கம் குறையாமல், வடிவம் மட்டுமே மாறியிருக்கும் வீடுகளில் அவை தெரிகின்றன.

ஐஷான்யாவைப் பொறுத்தவரை, அந்த படுக்கையறை காலத்தை அப்படியே உறைய வைக்கும் ஒரு இடமாக மாறியிருக்கிறது.

அவர் வைத்திருக்கும் பொருட்கள் முதல் பார்வையில் சாதாரணமானவையாகத் தோன்றலாம்.

ஆனால் எதுவும் மாற்றப்படவில்லை. படுக்கை, அலமாரி, சுபம் வாங்கிய கண்ணாடி என அனைத்தும் அவர் இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே பராமரிக்கப்படுகின்றன.

"படுக்கையின் அந்தப் பக்கம் சுபமுடையது," என்று படுக்கையைக் காட்டி அவர் கூறினார்.

"நான் அங்கே அமர்வதோ அல்லது படுப்பதோ இல்லை. தூக்கத்தில் கூட அதைத் தவிர்க்கிறேன். அந்தப் பக்கத்தில் தலையணைகளை அடுக்கி வைக்கிறேன்."

பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமின் அழகான புல்வெளியில் இந்தக் கொலைகள் நடந்தன

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமின் அழகான புல்வெளியில் இந்தக் கொலைகள் நடந்தன

அந்த நாளில் என்ன நடந்தது?

அந்த நாளை அவர் இன்றும் விரிவாக நினைவில் வைத்திருக்கிறார்.

அந்தத் தம்பதிக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகியிருந்தது, மேலும் ஒன்பது குடும்ப உறுப்பினர்களுடன் அவர்கள் காஷ்மீருக்கு ஒரு சிறிய சுற்றுலா சென்றிருந்தனர்.

தாக்குதல் நடந்த அன்று, சுபமும் ஐஷான்யாவும் பஹல்காமிற்கு மேலே உயரமான இடத்தில் உள்ள அழகான புல்வெளியான பைசரன் பள்ளத்தாக்கிற்குச் சென்றனர், மற்றவர்கள் முக்கிய நகரத்திலேயே தங்கிவிட்டனர்.

பின்னர் அளித்த பேட்டிகளில், அவர்கள் புல்வெளியில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு நபர் அவர்களை அணுகி, தனது கணவரின் மதம் என்ன என்று கேட்டுவிட்டு அவரைச் சுட்டுக் கொன்றதாக ஐஷான்யா கூறினார்.

தன்னையும் கொன்றுவிடுமாறு அவர் தாக்குதல் நடத்தியவர்களிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

"நிறைய நினைவுகளை உருவாக்க எனக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை," என்று அவர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

"இருந்தாலும், நான் வாழ்வதற்குத் தேவையான பல நினைவுகளை சுபம் எனக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்."

அவரது தொலைபேசியின் லாக் ஸ்கிரீனில் இன்றும் அவர்களது திருமணத்தின் ஒரு அழகான புகைப்படம் உள்ளது. கேலரியில் சுபத்தை மீண்டும் காண அவர் பழைய புகைப்படங்களைத் தேடித் தேடிச் செல்கிறார்.

சில நேரங்களில் அவரது பழைய வீடியோக்களைப் போட்டுப் பார்க்கிறார். உன்னிப்பாகக் கவனிக்கிறார்.

"அவர் குரல் எப்படி இருக்கும்... அவர் எப்படிச் சிரிப்பார் என்பதை நினைவுகூர முயல்கிறேன்," என்று அவர் கூறினார்.

ஐஷான்யா திவேதியின் போன் லாக் ஸ்கிரீனில் அவரது திருமணப் புகைப்படம் உள்ளது.

பட மூலாதாரம், Tariq Khan/BBC Hindi

படக்குறிப்பு, ஐஷான்யா திவேதியின் போன் லாக் ஸ்கிரீனில் அவரது திருமணப் புகைப்படம் உள்ளது.

தாக்குதலுக்குப் பிந்தைய மாதங்களில், ஐஷான்யா அடிக்கடி சுபத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். முதலில் மக்கள் கேட்டதால் பேசினார். பின்னர் அது அவருக்கு ஆறுதலாக இருந்ததால் பேசினார்.

"ஊடகங்களிடம் பேசுவது எனக்கு ஒரு சிகிச்சை போல இருக்கிறது," என்று அவர் கூறுகிறார். "நான் அதற்குப் பழகிவிட்டேன்."

ஆனால் துக்கத்தைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதும் சில சிக்கல்களைக் கொண்டு வந்தது.

இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்திய பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று ஐஷான்யா கூறிய பிறகு, இணையத்தில் அவர் ட்ரோல் செய்யப்பட்டார். அந்த எதிர்ப்புகள் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.

"நான் பேசுவேன், வெளியே செல்வேன், நான் விரும்பும் அனைத்தையும் செய்வேன்," என்று அவர் கூறினார். "என் கணவரை இழந்த பிறகு நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல அந்த நபர்களுக்கு(ட்ரோல் செய்தவர்கள்) எந்த உரிமையும் இல்லை."

ஐஷான்யாவைப் பொறுத்தவரை, பேசுவது அவரது துக்கத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு, சொல்லப்படாத விஷயங்களே அந்தத் துக்கத்தைத் தாங்கி நிற்கின்றன.

ராஜேஷ் நர்வாலின் மகன் வினய் நர்வாலும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில், 26 வயதான அந்த இந்தியக் கடற்படை அதிகாரி தனது தேனிலவுக்காகக் காஷ்மீர் சென்றிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைகள் நடந்த சில மணி நேரங்களில், அவரது உடலுக்கு அருகில் அசைவற்று அமர்ந்திருக்கும் அவரது மனைவியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

வினய் நர்வால்

பட மூலாதாரம், BBC Punjabi

படக்குறிப்பு, வினய் நர்வால் அவரது தேனிலவின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்

அவரது வீட்டில், வினய்யின் பொருட்கள் இன்னும் பிரிக்கப்படாமல் மூட்டையாகவே இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள் பலர் அவரது பெயரைச் சொல்லவோ அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசவோ மறுக்கிறார்கள்.

"எங்களிடம் அந்தத் துணிச்சல் இல்லை," என்று ராஜேஷ் கூறினார். "வீட்டில் எங்குமே அவரது புகைப்படத்தை வைப்பதைக் கூட எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை."

ஆனால் நினைவுகள் அவரை எல்லா இடங்களிலும் பின்தொடர்கின்றன.

வினய் குழந்தையாக இருந்தபோது, தந்தையும் மகனும் முற்றத்தில் கிரிக்கெட் விளையாடுவார்கள். ஒவ்வொரு நாளும் ராஜேஷ் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அதே வழக்கம் தான். வினய் அவருக்காகக் காத்திருப்பார், விளையாடக் கூப்பிடுவார். விடுமுறை நாட்களில் விளையாட்டு நாள் முழுவதும் தொடரும்.

"எங்களால் இந்தத் துக்கத்தைக் கையாளவே முடியவில்லை. நாங்கள் இன்னும் துக்கத்தில் தான் இருக்கிறோம்," என்று ராஜேஷ் கூறினார்.

"வேலை செய்யும் போது என் கவனம் திசைமாறுகிறது," என்று அவர் தொடர்ந்தார். "ஆனால் வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடம்... யாரோ ஒரு காயத்தைத் தொட்டது போல் இருக்கிறது. இந்த வலி தாங்க முடியாதது."

இல்லாமையோடு வாழ இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு வழிகளைக் கற்றுக்கொண்டன.

ஒருவர் அந்த நபரைப் பற்றிப் பேசுவதன் மூலம் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்; மற்றொருவர் மௌனத்தின் மூலம் அதைப் பாதுகாக்கிறார் - ஆனால் இருவருமே இப்போது தங்களுக்குப் பிடித்தவர்கள் இல்லாத அந்த வெற்றிடத்தைச் சுற்றி வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க முயல்கின்றனர்.

தன் மகன் சிறுவனாக இருந்தபோது அவனுடன் கிரிக்கெட் விளையாடியதை ராஜேஷ் நர்வால் அன்புடன் நினைவு கூர்கிறார்.

பட மூலாதாரம், Kamal Saini/BBC Punjabi

படக்குறிப்பு, தன் மகன் சிறுவனாக இருந்தபோது அவனுடன் கிரிக்கெட் விளையாடியதை ராஜேஷ் நர்வால் அன்புடன் நினைவு கூர்கிறார்.

கான்பூரில் இருக்கும் ஐஷான்யா இன்னும் சிதறிய வாழ்க்கையைச் சீரமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு மாலையும், அவர் தனது மாமனார் மாமியாருடன் அமர்ந்து ஒரு மணி நேரம் சுபத்தைப் பற்றிப் பேசுகிறார் - அந்த உரையாடல் அதே நபரைச் சுற்றியும், அதே விவரங்களைச் சுற்றியும் தான் இருக்கும், ஒவ்வொரு முறையும் அது சற்று மாற்றிப் பேசப்படும்.

"ஒரு மகனையோ அல்லது கணவரையோ இழந்த துக்கம் ஒருபோதும் போகாது," என்று அவர் கூறினார். "ஆனால் அதற்காக நாம் வாழ்வதை நிறுத்திவிடவேண்டும் என்பதில்லை."

அவர் இசை கேட்கிறார். எழுதுகிறார்.

"எழுதும்போது அழுதுவிடுவேன்," என்று அவர் கூறினார். "ஆனால் நீங்கள் அழுவதும், கத்துவதும் கூட முக்கியம்."

பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான அவரால் இன்னும் அந்தத் கலைக்குத் திரும்ப முடியவில்லை.

"என் கால்கள் அசைய மறுக்கின்றன," என்று அவர் கூறினார், இருப்பினும் அது மாறும் என்று அவர் நம்புகிறார்.

அவரால் சரியாக விவரிக்க முடியாத சில தருணங்கள் உள்ளன, ஆனால் அவை ஏதோ ஒரு உணர்வைக் கொடுத்தன.

விமானத்தில் செல்லும்போது, சுபத்திற்குப் பிடித்த பாடலைக் கேட்டுக் கொண்டே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் ஒரு வானவில்லைக் கண்டார். ஒரு மாலை வேளையில், பால்கனிக்குச் சென்று நிலவைப் பார்த்தபோது, ஒரு நொடி சுபம் தன்னைப் பார்ப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

இந்த கடந்து செல்லும் தருணங்கள், சுபம் இன்னும் தன்னுடனேயே இருக்கிறார் என்பதற்கான அடையாளங்கள் என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு