மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு அதிகரிப்பு - எஸ்ஐஆர் காரணமா?

பட மூலாதாரம், Subham Dutta
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாலை நிலவரப்படி, 91.68 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறுகிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த 'சாபர் இன்ஸ்டிடியூட்' என்ற சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளரான சாபிர் அகமது, பிபிசி வங்க மொழி சேவையிடம் பேசுகையில், "முர்ஷிதாபாத் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவாகி வருகின்றன. இருப்பினும், கடந்த தேர்தல்களில், 2024 மக்களவைத் தேர்தலில்கூட, அப்பகுதியில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் அதிகமாக இருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். இதற்கு ஒரு காரணம், அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதுதான்" என்று கூறினார்.
'புலம்பெயர் தொழிலாளர் ஒற்றுமை மன்றத்தின்' மாநில பொதுச் செயலாளர் ஆசிஃப் ஃபாரூக் பேசுகையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக இந்த முறை வாக்குப்பதிவு விகிதம் அதிகமாக இருந்ததாகக் கூறினார்.
"பிற மாநிலங்களில் பணிபுரியும் பலர் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர். எஸ்ஐஆர் குறித்த அச்சமே இதற்கு காரணம்" என்று ஃபாரூக் கூறினார்.
எனினும் தேர்தல் ஆணையம் பாலினம் சார்ந்த வாக்குப்பதிவு குறித்த விவரங்களை இதுவரை தெரிவிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்றது.
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையைத் தொடர்ந்து, சுமார் 9 மில்லியன் வாக்காளர்கள் - அதாவது மாநில வாக்காளர்களில் ஏறத்தாழ 12% - நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் லட்சக்கணக்கானோர் வராதவர்கள் அல்லது இறந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 27 லட்சம் பேரின் நிலை இன்னும் ஆய்வில் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த முதல் கட்ட வாக்குப்பதிவின் இடையே பல கட்டங்களில் வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.





















