உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குல்தீப் சிங் செங்காருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், Subhankar Chakraborty/Hindustan Times via Getty
- எழுதியவர், உமாங் போடார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23), முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குல்தீப் செங்காருக்கு 2019இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 2017இல் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் செய்திகளில் இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் எடுத்த முடிவுக்குப் பிறகு, இந்த விவகாரம் மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது தாயார், பல சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த முடிவை எதிர்த்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், குல்தீப் செங்கார் இப்போதே சிறையிலிருந்து வெளியே வர முடியாது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்குடன் தொடர்புடைய மற்றொரு வழக்கிலும் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். 2020ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குல்தீப் செங்கார் இந்த முடிவை எதிர்த்தும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கிலும் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி குல்தீப் செங்கார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024இல், டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது.
எந்தச் சூழ்நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது மற்றும் எந்த அடிப்படையில் குல்தீப் செங்காருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பதை இங்கு பார்ப்போம்.

பட மூலாதாரம், Deepak Gupta/Hindustan Times via Getty
தண்டனை எப்போது நிறுத்தி வைக்கப்படுகிறது?
தண்டனையை நிறுத்தி வைப்பது என்பது ஜாமீன் வழங்குவதற்கு ஒப்பானது. ஒரு நீதிமன்றம் ஒரு நபருக்கு தண்டனை விதிக்கும்போது, அந்த நபருக்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு.
மேல்முறையீட்டு விசாரணையின்போது, தண்டனையை நிறுத்தி வைத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஜாமீன் பெறுவதற்கு உரிமை இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தனது பல முடிவுகளில் கூறியுள்ளது. 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவில், இத்தகைய வழக்குகளில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்தால், அவர் விடுதலையாவதற்கான வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் கூறியது.
உயர் நீதிமன்றம் முதல் பார்வையில் (Prima facie) தீர்ப்பில் ஏதேனும் பெரிய தவறு இருப்பதைக் கண்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில், மேல்முறையீட்டு விசாரணை முடியும் வரை எந்தவொரு குற்றவாளியையும் சிறையில் வைத்திருக்கக்கூடாது, ஏனெனில் முழு விசாரணையும் முடிவடைய நீண்ட காலம் ஆகலாம்.
அதேவேளையில், தீர்ப்பில் எழும் சிறிய தவறுகளுக்காக தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.

பட மூலாதாரம், Getty Images
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு
இந்த வழக்கில், டிசம்பர் 2019இல், குல்தீப் செங்காருக்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ், கடுமையான பாலியல் வன்முறைக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரசு ஊழியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்யும்போது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(2)(b), போக்சோ சட்டத்தின் பிரிவு 5(c) ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்படுகிறது. குல்தீப் செங்காரும் இதே பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டார்.
ஓர் அரசு ஊழியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒரு சாதாரண குடிமகனைவிட அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
கடந்த 2017இல் உன்னாவ் சம்பவம் நடந்த காலகட்டத்தில், அரசு ஊழியர் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டால், அதற்கான குறைந்தபட்ச தண்டனை, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளாக இருந்தது (இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்).
ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கான சாதாரண குடிமகனுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாக இருந்தது.

பட மூலாதாரம், Subhankar Chakraborty/Hindustan Times via Getty
குல்தீப் செங்கார் 'அரசு ஊழியர்' தானா?
இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம், ஏனெனில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்பிருந்த கேள்வி இதுதான்: குல்தீப் செங்காரை ஓர் அரசு ஊழியராகக் கருத முடியுமா?
'உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, எந்தவொரு எம்.எல்.ஏ-வும் ஐபிசி-யின் கீழ் அரசு ஊழியராகக் கருதப்பட மாட்டார்கள் என்பதால், விசாரணை நீதிமன்றம் அவரை அரசு ஊழியராகக் கருதியது தவறு' என்று செங்காரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால் விசாரணை நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பை மேற்கோள்காட்டி, குல்தீப் செங்காரை அரசு ஊழியராகக் கருதலாம் என்று கூறியிருந்தது.
அது 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு. அந்த வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு எம்.எல்.ஏ. பொது ஊழியராகக் கருதப்பட்டார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வரையறை போக்சோ சட்டத்திற்குப் பொருந்தாது என குல்தீப் செங்காரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இருப்பினும், இது ஒரு 'முதல் பார்வை' அவதானிப்பு மட்டுமே என்றும், குல்தீப் செங்காரை ஒரு பொது ஊழியராகக் கருதாவிட்டால், பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இன்னும் பரிசீலிக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
முழுமையான மேல்முறையீட்டு விசாரணையின்போது இது விரிவாகப் பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்பதையும், செங்கார் ஏற்கெனவே 7 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கின் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், குல்தீப் செங்கார் தனது செல்வாக்கின் மூலம் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், தண்டனையை நிறுத்தி வைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும்போது இந்த வாதங்களைக் கருத்தில் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

பட மூலாதாரம், ANI
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாப்பு
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த வழக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அந்தப் பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குல்தீப் செங்கார்தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயாரும் தற்போது சிஆர்பிஎஃப் (CRPF) பாதுகாப்பில் உள்ளனர் என்றும், காவல்துறை தங்கள் பணியை சரியாகச் செய்யவில்லை என்ற பயத்தில் நீதிமன்றம் ஒருவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட பெண் வசிக்கும் பகுதியின் துணை ஆணையரே, அவருக்குப் போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென நீதிமன்றம் கூறியது.
கூடுதலாக, குல்தீப் செங்காரின் ஜாமீனுக்கு நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் விதித்தது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள பகுதிகளுக்குச் செல்லக்கூடாது, ஒவ்வொரு திங்கள் கிழமையும் காவல்துறை முன்பாக ஆஜராக வேண்டும் என்பவையும் அடங்கும்.
குல்தீப் செங்காருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் உள்ளதா, பாதிக்கப்பட்ட பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானபோது மைனராக இருந்தாரா என்பது போன்ற வழக்கின் பிற வாதங்கள் குறித்து நீதிமன்றம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
குல்தீப் செங்கார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மீதமுள்ள தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
"ஒரு தண்டனையை நிறுத்தி வைத்து, குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. ஒரு எம்.எல்.ஏ, அரசு ஊழியர் என்ற வரையறையின் கீழ் வருகிறாரா இல்லையா என்பதுதான் கேள்வி" என்று டெல்லி வழக்கறிஞர் நிபுண் சக்சேனா பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
"இருப்பினும், ஜாமீன் வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், குற்றம் சாட்டப்பட்டவர் வெளியே வந்து சாட்சிகளைப் பாதிக்க முடியுமா என்பதுதான். அதுபோன்ற சூழ்நிலையில், உயர் நீதிமன்றம் தனது இறுதி முடிவை வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்."
கடந்த 2024ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய குல்தீப் செங்காரின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அப்போது, "பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பும் ஒரு முக்கியமான பிரச்னைதான்" என்று கூறியிருந்தது.
குற்றத்தின் தீவிரம், குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றவியல் வரலாறு, பொது மக்களின் நம்பிக்கையில் ஏற்படும் தாக்கம் போன்ற விஷயங்களையும் தீர்ப்பை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
ஐபிசி மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது, அவரது குற்றவியல் வரலாற்றைக் காட்டுவதாக நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், அந்த வழக்கின் உண்மைகள் வேறுபட்டவை. ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த நீதிமன்றம், குல்தீப் செங்காரின் வழக்கறிஞர்கள் அரசுத் தரப்பு வாதத்தில் பல தவறுகளைச் சுட்டிக்காட்டியிருந்தாலும், இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டிய எந்த முதன்மைப் பிழையும் இல்லை என்று கூறியது.

ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், அதாவது நீதிபதிகள் இந்த விஷயங்களில் தங்கள் விருப்பப்படி முடிவு எடுக்கலாம்.
தற்போது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை வழக்கில் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி குல்தீப் செங்கார் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், குல்தீப் செங்காருக்கு எதிராக ஐபிசியின் வேறு சில பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், 2019-ஆம் ஆண்டில், சிபிஐ இந்த மனுவை ஆதரிக்காததால் விசாரணை நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. எனவே, இந்த வாதத்தில் நுழைய முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரு எம்.எல்.ஏ-வுக்கு எதிராக வழக்குத் தொடரக்கூடிய விதிகளை சிபிஐ பரிசீலித்திருக்க வேண்டும் என்றும், மனு நிராகரிக்கப்பட்டபோது அந்தப் பெண் புதிய பிரிவுகள் தொடர்பாக மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் நிபுன் சக்சேனா கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












