சிக்கன் 65 என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு
மொறுமொறுப்பான, காரமான மற்றும் சூடான இந்த வறுத்த சிக்கன் உணவு, இந்தியாவின் பெரும் பகுதிகளில் பலராலும் விரும்பப்படும் உணவாக உள்ளது.
மசாலா பொருட்கள், தயிர் மற்றும் சிக்கன் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கன் 65 பெரும்பாலும் பிரியாணியுடன் சேர்த்து பரிமாறப்படும்.
இதன் சுவை ஒருபுறமிருந்தாலும், பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும்? இது ஏன் சிக்கன் 65 என்று அழைக்கப்படுகிறது?
இதே கேள்வியை உணவியல் எழுத்தாளர் சோயிட்டி பானர்ஜியிடம் கேட்டோம்.
“புஹாரி ஹோட்டலில், அதன் உரிமையாளர் ஏ.எம். புகாரியால் இது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் எல்லா கோட்பாடுகளையும் புறம் தள்ளிவிட்டு வெளிப்படையான ஒரு பதிலை சொன்னார்கள். ‘சிக்கன் 65’ 1965இல் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் அது. அவர் புத்தாண்டு விருந்தை நடத்தினார், இன்று நம்மிடம் உள்ளது போன்ற உணவை பரிமாறியிருக்கிறார், ஒருவர் அவரிடம் அதன் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார்.”
“இது அருமையான, மொறுமொறுப்பான உணவு என்பதால் அதற்கு மொறுமொறுப்பான ஒரு பெயர் தேவை என முடிவு செய்தார். அப்போது கிட்டத்தட்ட 1965 பிறந்திருந்தது. எனவே அவர் அதை சிக்கன் 65 என்று அழைத்தார். அவ்வளவுதான்.” என்கிறார் சோயிட்டி பானர்ஜி.
புஹாரியின் ஆடம்பரமான சமையலறைகளில் பிறந்த சிக்கன் 65, பின்னர் பிரபலமான ‘Street food’ என்ற அந்தஸ்தைப் பெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



