துரந்தர்: பாகிஸ்தானை அச்சுறுத்திய நிழல் உலகம் - அக்ஷய் கன்னா கதாபாத்திரத்தின் நிஜ கதை

பட மூலாதாரம், Screen Grab
- எழுதியவர், ஜாஃபர் ரிஸ்வி
- பதவி, செய்தியாளர், லண்டன்
"கொலை செய்யாதீர்கள்... தவறான வேலை எதையும் செய்யாதீர்கள்... நிலுவையில் உள்ள வழக்குகளை (நீதிமன்றத்தில்) ஒப்படைக்கவும். என்கவுன்ட்டர் செய்யக் கூடாது." ரஹ்மானை (டகாய்த்) கைது செய்த காவல்துறை அதிகாரி சௌத்ரி அஸ்லமிடம், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் சர்தாரி இதைக் கூறினார்.
இஸ்லாமாபாத் மட்டுமின்றி 'ராவல்பிண்டி' வரையும் செல்வாக்குள்ள ஒரு அரசியல்வாதி, பாகிஸ்தானுக்கு வெளியே நடந்த ஒரு சந்திப்பில் ரஹ்மான் டகாய்த் பற்றிய கதையை எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
நீங்கள் பீப்பிள்ஸ் அமன் கமிட்டியின் நிறுவனர் சர்தார் அப்துல் ரஹ்மான் பலூச் என்று அழைத்தாலும் அல்லது கராச்சி நிழல் உலகத்தின் டான் ரஹ்மான் டகாய்த் என்று அழைத்தாலும்... நகரத்தின் பின்தங்கிய பகுதியில் இருந்த ஒரு கதாபாத்திரத்தின் கதை இது.
ஆனால் லியாரி கும்பலின் இந்த 'குற்றப் பிரபுவால்' காவல்துறை மற்றும் ராணுவத்தின் உளவுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை மட்டுமல்ல நாட்டின் அதிபரையே அணுகமுடிந்தது.
எனக்கு இந்தக் கதையைச் சொன்ன அந்த அரசியல்வாதியும் பல அரசாங்கங்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளார், ஆனால் அவர் கராச்சி 'நிழல் உலகம்' பற்றியும் நிறைய அறிந்தவர்.
'துரந்தர்' திரைப்படத்தில் அக்ஷய் கன்னா நடித்தது இந்த ரஹ்மான் டகாய்த் கதாபாத்திரம்தான், அது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
ஜூன் 18, 2006 அன்று ரஹ்மான் டகாய்த் குவெட்டாவில் இருந்து கடைசியாகக் கைது செய்யப்பட்டார். இருப்பினும், இந்தக் கைது ஒருபோதும் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த காலகட்டத்தில், ரஹ்மான் பலூச் (ரஹ்மான் டகாய்த்), தனது தாயின் கொலை உட்பட 79 குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
ரஹ்மான் பலூச் பற்றி பிபிசிக்குக் கிடைத்த விசாரணை அறிக்கை மிகவும் இரகசியமான அரசாங்க ஆவணமாகும். இது அவரது குற்றங்களை மட்டுமல்ல, அரசியலுக்கும் குற்றத்திற்கும் இடையிலான கூட்டணியையும் வெளிப்படுத்துகிறது.

பட மூலாதாரம், JIO/YT/TRAILER GRAB
ரஹ்மான் பலூச் 13 வயதில் குற்றச் செயல்களைத் தொடங்கி, எவ்வாறு நிழல் உலக டான்' ஆனார் என்பதையும், இந்தக் காலத்தில், அவர் எவ்வாறு பெரிய அரசியல் தலைவர்கள், இன அமைப்புகள் மற்றும் தொழிலதிபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் என்பதையும் இந்த அறிக்கை விளக்குகிறது.
கராச்சி துறைமுகத்தின் இருபுறமும் இரண்டு வெவ்வேறு உலகங்கள் உள்ளன. ஒருபுறம் மௌல்வி தமீசுதீன் கான் சாலை, மறுபுறம் எம்.ஏ. ஜின்னா சாலை.
மௌல்வி தமீசுதீன் கான் சாலையைக் கடந்தால், நகரத்தின் பணக்கார மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் மிகவும் விலையுயர்ந்த பொழுதுபோக்கு இடங்களை நீங்கள் காணலாம்.
இந்த துறைமுகத்தின் மறுபுறம், எம்.ஏ. ஜின்னா சாலைக்குப் பின்னால் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக உருவான குற்றங்களின் கோட்டையான லியாரி உள்ளது.
நகரின் தெற்கு முதல் மேற்கு வரை கராச்சியின் மிகப் பழமையான ஆனால் மிகவும் ஏழ்மையான டஜன் கணக்கான குடிசை குடியிருப்புகள் பரவி உள்ளன. இங்குதான் ஒரு பெரிய குற்றப் பேரரசு செழித்து செயல்படுகிறது.
சுவாரஸ்யமாக, இந்த லியாரியில் இருந்துதான் ஜுல்ஃபிகார் அலி பூட்டோ மற்றும் அவரது மகள் பெனாசீர் பூட்டோ ஆகியோர் பிரதமர் பதவிக்கு உயர்ந்தனர், அதே சமயம் பாபு டகாய்த் மற்றும் ரஹ்மான் பலூச் ஆகியோர் குற்ற உலகில் உச்சத்தை அடைந்தனர்.
ரஹ்மான் டகாய்த்தின் குடும்பம்

பட மூலாதாரம், Facebook
பாகிஸ்தான் அரசு ஆவணங்களின்படி, அப்துல் ரஹ்மான் (அல்லது ரஹ்மான் டகாய்த்) 1976 இல் தாத் முஹம்மது என்கிற தாதலுக்குப் பிறந்தார். ரஹ்மானின் தாயார் தாதலின் இரண்டாவது மனைவி.
ரஹ்மானின் உறவுக்கார சகோதரர் என்னிடம், ரஹ்மானின் தந்தைக்கு நான்கு சகோதரர்கள் இருப்பதாகக் கூறினார்: தாத் முஹம்மது (தாதல்), ஷேர் முஹம்மது (ஷேரு), பேக் முஹம்மது (பேகல்) மற்றும் தாஜ் முஹம்மது.
தாதல் லியாரியில் பல சமூகநலப் பணிகளைச் செய்ததாகவும் அவர் கூறினார்.
'குழந்தைகளுக்காக நூலகம், பெரியவர்களுக்காக ஈத்கா, பெண்களுக்காகத் தையல் மற்றும் எம்பிராய்டரி மையம் மற்றும் இளைஞர்களுக்காக குத்துச்சண்டை கிளப்பை நிறுவினார்'. என்கிறார்.
ஆனால் விசாரணை ஆவணங்கள் மற்றும் காவல்துறை, ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் வேறு கதையைச் சொல்கிறார்கள்.
கராச்சி காவல்துறையின் முன்னாள் தலைவர் ஒருவர் என்னிடம், தாதல் மற்றும் அவரது சகோதரர் ஷேரு இருவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறினார். காவல்துறை ஆவணங்களின்படி, ஷேரு ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும் இருந்தார்.
ஆனால் லியாரியில் போதைப்பொருள் கடத்தல் அல்லது பிற குற்றங்களுக்கு ஷேரு-தாதல் கும்பல் மட்டுமே சூத்திரதாரிஅல்ல. இக்பால் என்கிற பாபு டகாய்த்தின் கும்பலும் அருகிலுள்ள காலரி பகுதியில் போதைப்பொருள் கடத்தலின் ஒரு பெரிய வலையமைப்பை நடத்தி வந்தது, மேலும் மூன்றாவது குழு ஹாஜி லாலுவின் கும்பல், இது ஜஹான்பாத், ஷேர்ஷா கல்லறை மற்றும் புராணா கோலிமார் போன்ற பகுதிகளில் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் மற்றும் பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது.
லியாரியின் முன்னாள் எஸ்.பி. ஃபயாஸ் கான், "ஒரே தொழிலில் ஈடுபட்டிருந்த அந்தக் கும்பல்களுக்கு இடையே தொழில் போட்டி மற்றும் பிராந்திய தகராறுகளும் இருந்தன. இந்தக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் சில சமயங்களில் இரத்தக்களரியான சண்டையாகவும் மாறும். அத்தகைய ஒரு மோதலில், ரஹ்மான் பலூச்சின் மாமா தாஜ் முஹம்மது, எதிரிக் கும்பலைச் சேர்ந்த பாபு டகாய்த்தால் கொல்லப்பட்டார்," என்று கூறினார்.
ரஹ்மானின் கதையைச் சொன்ன அரசியல்வாதி, "அப்போது ரஹ்மானுக்கு ரவூஃப் நாஜிம் மற்றும் ஆரிஃப் என்ற இரண்டு சகோதரர்களுடன் நட்பு ஏற்பட்டது, அவர்களின் தந்தை ஹசன் என்கிற ஹசானூக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்தார். போதைப்பொருள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட அந்த இளைஞர்கள் அனைவரின் நட்பும் மெதுவாக ஆரிஃப் நாஜிம் தலைமையில் ஒரு குற்றக் கும்பலாக மாறியது. ரஹ்மான் பின்னர் தலைவன் ஆனார், ஆனால் அடிப்படையில் இது ஆரிஃபின் கும்பல்." என்று கூறினார்.
அனைத்தும் போதைப்பொருள் கடத்தலில் தொடங்கியது

பட மூலாதாரம், Getty Images
கராச்சி காவல்துறை ஆவணங்களின்படி, 13 வயதில், நவம்பர் 6, 1989 அன்று, காலாகோட்டின் ஹாஜி பிக்சர் சாலையில் உள்ள குலாம் ஹுசைன் கடைக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தடுத்ததாக முஹம்மது பக்ஷ் என்பவரை ரஹ்மான் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார்.
இது குற்றப் பாதையில் ரஹ்மானின் முதல் அடி என்று ஒரு அதிகாரி கூறினார்.
காவல்துறையின் கூற்றுப்படி, 1992 ஆம் ஆண்டில் போதைப்பொருள் விநியோகித்து வந்த நதீம் அமீன் மற்றும் அவரது கூட்டாளி நன்னூவுடன் ரஹ்மான் மோதினார்.
காவல்துறை ஆவணங்களின்படி, நதீம் அமீனும் ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி மற்றும் அவர் மீது சுமார் முப்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன். ரஹ்மான் மற்றும் ஆரிஃப் இருவரும் நதீம் மற்றும் நன்னூ இருவரையும் சுட்டுக் கொன்றனர். இது ரஹ்மான் செய்த முதல் கொலைச் சம்பவம்.
1988 ஆம் ஆண்டில், ரஷீத் மின்ஹாஸ் சாலைக்கு அருகில் உள்ள தல்மியா பகுதியில் நிலத்தகராறு காரணமாக ரஹ்மானின் ஒன்றுவிட்ட சகோதரர் ஃபதே முஹம்மது பலூச் கொல்லப்பட்டார் என்று ரஹ்மானின் உறவினர் கூறினார். இந்தக் கொலைக்கு லியாரியின் சங்கோ லேனைச் சேர்ந்த சுலைமான் பிரோஹியின் மகன் கஃபூர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சில காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சுலைமான் பிரோஹிக்கு சிந்துவின் முன்னாள் முதல்வர் ஜாம் சாதிக் உடன் வணிக உறவு இருந்தது, ஆனால் ரஹ்மான் 1998-இல் நார்த் நாஜிமாபாத்தில் உள்ள டிசி சென்ட்ரல் அலுவலகத்திற்கு அருகில் சுலைமான் பிரோஹியைக் கொன்றார்.
இந்தக் கொலை ரஹ்மானை லியாரியின் குற்ற உலகில் ஆதிக்கம் செலுத்தும் பாதையில் இட்டுச் சென்றது.
டான் ஹாஜி லாலுவிடம் இருந்து பாதுகாப்பு கிடைத்தது

பட மூலாதாரம், Getty Images
இந்த பழிவாங்கும் நடவடிக்கையில் லாலுவின் குடும்பம் ரஹ்மானின் குடும்பத்திற்குப் பெரும் உதவியைச் செய்தது என்று ரஹ்மானின் சகோதரர் கூறினார். எனது ஆய்வுகளின்படி, பாபு டகாய்த்தால் ரஹ்மானின் மாமா தாஜ் முஹம்மது கொல்லப்பட்டபோது, லாலு ரஹ்மானைத் தனது பாதுகாப்பில் எடுத்துக் கொண்டார்.
ஹாஜி லாலு ஒரு நிழல் உலக தாதாவாக இருந்தார். லியாரி மற்றும் டிரான்ஸ் லியாரியில் எந்தவொரு குற்றமும் லாலு இல்லாமல் நடக்க முடியாது. ரஹ்மான் வளர்ந்ததில் லாலுவின் பாதுகாப்பிற்கும் ஒரு பெரிய பங்கு உண்டு.
அவரது கூற்றுப்படி, "லாலு ரஹ்மானைப் பாதுகாத்தார், ஏனெனில் பாபு டகாய்த் லாலுவின் தொழில்முறை எதிரி, மேலும் பாபுவைச் சமாளிக்க லாலுவுக்கு இளம் மற்றும் தைரியமான கூட்டாளிகள் தேவைப்பட்டனர்."
ரஹ்மானின் இளம் கும்பலின் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் காவல்துறை அந்தக் கும்பலை ஒழிக்கும் திட்டத்தைத் தீட்டியது.
காவல்துறை ஆவணங்களின்படி, பிப்ரவரி 18, 1995 அன்று, ஆரிஃப் மற்றும் ரஹ்மான் தங்கள் கூட்டாளிகளுடன் உஸ்மானாபாத் மில்ஸ் பகுதியில் உள்ள பாக் பைப் மில்ஸின் காலியான கட்டடத்தில் இருந்தபோது, காவல்துறை அவர்களைச் சுற்றி வளைத்தது. ஆரிஃப் காவல்துறையின் குண்டுக்கு பலியானார், ஆனால் ரஹ்மான் சுவரைத் தாண்டித் தப்பினார். ரஹ்மான் இந்தக் சம்பவத்த்தை ஒப்புக்கொண்டதாக அரசின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தன் தாயையும் கொன்றார்

பட மூலாதாரம், SMVP
இந்தச் சம்பவத்திற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, மே 18, 1995 அன்று, ரஹ்மான் தானா காலாகோட் காவல்துறை எல்லையில் தனது தாய் கதீஜா பிபியையும் கொன்றார்.
அவர் 'தன் தாயைத் அவரது சொந்த வீட்டிலேயே சுட்டுக் கொன்றதாக' அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, அவர் தனது தாய் காவல்துறைக்கு தகவல் சொல்பவராக மாறிவிட்டார் என்று சந்தேகித்தார்.
இந்த அறிக்கைக்கு மாறாக, எனது வட்டாரங்கள், உண்மையில் கொலையின் காரணம் ரஹ்மானுக்கு 'தன் தாயின் நடத்தை மீது சந்தேகம்' இருந்தது என்றும், அவர் தனது தாயை எதிர்க் கும்பலின் ஒருவருடன் 'தொடர்பு வைத்திருந்ததால்' கொன்றதாகவும் கூறுகின்றன.
அரசு ஆவணங்களின்படி, 1995-இல் துணை ராணுவப் படையான ரேஞ்சர்ஸ், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி ரஹ்மானைக் கோலிமாரில் கைது செய்தது. இந்த வழக்கில் ரஹ்மான் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
அரசு அறிக்கையின்படி, ஜூன் 10, 1997 அன்று, ரஹ்மான் பலூச் கராச்சி மத்திய சிறையில் இருந்து லியாரிக்கு அருகிலுள்ள நகர நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார், அங்கிருந்து அவர் தப்பித்து பலுசிஸ்தான் பகுதியான ஹூப்பை அடைந்தார்.
பாகிஸ்தானிய அரசு ஆவணங்களின்படி, ஃபர்சானா, ஷஹனாஸ் மற்றும் சாய்ரா பானு என்ற மூன்று பெண்களை ரஹ்மான் வெவ்வேறு காலங்களில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த மூன்று மனைவிகள் மூலம் அவருக்கு 13 குழந்தைகள் இருந்தனர்.
2006 வாக்கில், ரஹ்மான் கராச்சி மற்றும் பலுசிஸ்தானின் பல பகுதிகளில் 34 கடைகள், 33 வீடுகள், 12 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 150 ஏக்கர் விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரராகிவிட்டார்.
அவர் இரானிலும் சில சொத்துக்களை வாங்கினார். இருப்பினும், 2006 க்குப் பிறகு அவரது சொத்துக்கள் இதைவிட அதிகமாக இருந்ததாகப் பல அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரசியல் வட்டாரங்களுடனும் மற்றும் பலுசிஸ்தானின் அரசியல் மற்றும் இன அமைப்புகளுடனும் ரஹ்மானின் தொடர்புகள் அதிகரித்தன.
லியாரி கும்பல் சண்டையின் கதை

பட மூலாதாரம், Getty Images
போலீஸ் விசாரணையின் போது, ஹூப்பில் காவல்துறையின் 'அனுமதியுடன்' சூதாட்ட விடுதியைத் திறந்ததாகவும், அபின் (லியாரி மக்கள் 'விஷார்' என்று அழைத்தனர்) மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை 'மேலிடத்தில் இருப்பவர்களின்' முழு ஆதரவுடனும் அனுமதியுடனும் தொடர்ந்து கடத்தி வந்ததாகவும் ரஹ்மான் கூறினார்.
அந்தக் காலகட்டத்தில் ரஹ்மான், ஹாஜி லாலு மற்றும் அவரது மகன்கள் இணைந்து போதைப்பொருள் மற்றும் குற்றத் தொழிலை உச்சத்திற்குக் கொண்டு சென்றதாக லியாரியின் முன்னாள் எஸ்.பி. ஃபயாஸ் கான் கூறினார்.
பல மூத்த காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தக் காலத்தில்தான், லாலுவின் செல்வாக்கின் கீழ் இருக்கும்போது, குற்ற உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தனித்து உருவாக்க முடியாது என்பதை ரஹ்மான் உணரத் தொடங்கினார், இறுதியில் ஒரு நாள் லாலு மற்றும் அவரது மகன்களுடன் அவருக்குப் பிரச்னை ஏற்பட்டது.
இந்த மோதல் விரைவில் 'இரத்தக்களரியாக' மாறியது. இது ரஹ்மான் பலூச்சின் நெருங்கிய கூட்டாளியான மாமா ஃபைஸ் முஹம்மது என்கிற ஃபைஜூவைக் கடத்தி கொலை செய்ததன் மூலம் தொடங்கியது.
ஃபைஸ் முஹம்மது ரஹ்மானுக்கு உறவினராகவும் அஜீஸ் பலூச்சின் தந்தையாகவும் இருந்தார். ரஹ்மானுக்குப் பிறகு லியாரி நிழல் உலக தாதா ஆனவர் இந்த அஜீஸ் பலூச்.
ஃபைஜூவின் இந்தக் கொலையில் இருந்துதான் 'லியாரி கும்பல் போர்' என்று அழைக்கப்படும் ஒரு சண்டை தொடங்கியது.
ரஹ்மான் மற்றும் பப்பு இடையே நடந்த லியாரி கும்பல் சண்டையில் கொலைகள் மற்றும் வன்முறைகள் அந்தப் பகுதியை சர்வதேச கவனத்திற்கு கொண்டு சென்றதாக ஊடக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான அஜீஸ் சங்கூரும் லியாரியைச் சேர்ந்தவர்தான். பல ஆண்டுகளாகத் தொடர்ந்த லியாரி கும்பல் சண்டையில் மொத்தத்தில் அனைத்து கும்பல்களையும் சேர்ந்த சுமார் மூன்றாயிரத்து ஐந்நூறு பேர் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறுகிறார்.
ரஹ்மானின் அராஜகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள்

பட மூலாதாரம், Getty Images
லியாரி கும்பல் சண்டை ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியபோது, அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் இந்தக் கொலை மற்றும் வன்முறையை நிறுத்த முயன்றனர்.
லியாரி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் கட்சியின் தலைவரான ஆசிஃப் சர்தாரியை பல உள்ளூர் தலைவர்கள் சந்தித்தனர்.
சர்தாரிக்குத் தெரிந்த ஒருவர், தாம் லாலுவிடம், அவருடைய தரப்பில் ரஹ்மானுக்கு எதிராக நடவடிக்கை அல்லது தாக்குதல் இருக்கக்கூடாது என பேசலாம், ஆனால் ரஹ்மானுக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? என்று கேட்டார்.
இந்தச் சூழ்நிலையில், பலூச் ஐக்கிய இயக்கத்தின் தலைவர் அன்வர் பாய்ஜானை மத்தியஸ்தராக இருக்குமாறு அனைவரும் கோரினர், மேலும் இரு கும்பல்களுக்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரினர்.
லாலுவின் மகன் பப்புவின் மனைவியின் தாய்வழி மாமாதான் அன்வர் பாய்ஜான். லியாரியில் அவருக்கு ஒரு தனி மரியாதை இருந்தது, ஆனால் இவை அனைத்தும் முடிவாவதற்கு முன்பே, ரஹ்மான் அன்வர் பாய்ஜானையே கொன்றார்.
ஜனவரி 8, 2005 அன்று, ஒரு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மேவா ஷா சாலை வழியாக சென்றபோது அன்வர் பாய்ஜானை தான் கொன்றதாக ரஹ்மான் விசாரணை அதிகாரிகளிடம் கூறினார். விசாரணையின் போது, பப்புவுடன் உள்ள உறவு காரணமாக 'அன்வர் பாய்ஜான் லாலு கும்பலுக்குச் சாதகமாக இருந்தார், மேலும் அவரது மத்தியஸ்தம் பாரபட்சமற்றதாக இல்லை' என்று ரஹ்மான் கூறினார்.
இந்தக் கொலையால் மத்தியஸ்த முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. ரஹ்மான் மத்தியஸ்தரையே கொன்றுவிட்டதாகக் கூறி ஆசிஃப் சர்தாரியும் ஒதுங்கிக் கொண்டார்.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரத்தின் பல முக்கியமான வணிகப் பகுதிகள் மற்றும் சாலைகளையும் ரஹ்மான் 'பணம் பறிக்கும்' வழியாக மாற்றினார்.
உதாரணமாக, கராச்சி துறைமுகத்திலிருந்து வெளியேறும் மற்றும் கேமாரி வழியாகச் செல்லும் ஒவ்வொரு கொள்கலனும் ரஹ்மானின் வலையமைப்புக்கு 'பணம்' (மிரட்டி பணம் பறித்தல்) கொடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
வருமானத்தின் மற்றொரு ஆதாரம் குட்கா (புகையிலை கலந்த சுவைக்கும் பொருள்). ரஹ்மான் கும்பல் லியாரியில் சட்டவிரோதமாக குட்கா தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் திறந்தது. இதன் பிறகு, குட்கா போதைப்பொருளை விட அதிக லாபம் தரும் தொழிலாக மாறியது.
ராபின்ஹூட் தோற்றத்தில் ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images
நகரத்தின் மற்ற பகுதிகளில் பலமடைந்து வந்த ரஹ்மான், அதற்குள் லியாரியின் முடிசூடா மன்னராகிவிட்டார் என்பது பல அரசியல் மற்றும் அரசு பிரமுகர்களுடனான உரையாடல்களில் தெரியவந்தது.
2002-ஆம் ஆண்டு வாக்கில், லியாரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் யார் வரவேண்டும், நகர மேலாளர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு ரஹ்மானின் செல்வாக்கு இருந்தது.
இப்போது அவர் பீப்பிள்ஸ் அமன் கமிட்டியின் தலைவர் 'சர்தார் அப்துல் ரஹ்மான் பலூச்' என்று அழைக்கப்படத் தொடங்கினார். அந்த நேரத்தில், லியாரியின் சில பகுதிகளுக்கு, ரஹ்மான் ஒரு ராபின் ஹூட் போன்ற கதாபாத்திரமாக மாறி வந்தார். இப்போது அவர் பள்ளிகள் மற்றும் மருந்தகங்களைத் திறப்பது போன்ற அரசியல் ரீதியாகப் பெயர் ஈட்டும் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
மாநில அமைச்சரவையுடன் தொடர்புடைய ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, மலீர், பர்ன்ஸ் ரோடு, குலிஸ்தான்-இ-ஜௌஹர் மற்றும் பிற சுற்றுப்புறங்களில் அமைதிக் குழுக்களை ரஹ்மான் உருவாக்கியபோது, எம்.க்யூ.எம். அதை ஒரு அரசியல் சவாலாகக் கண்டது.
இதனால் ரஹ்மானை நசுக்குவதற்கு எம்.க்யூ.எம். அரசு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது, மேலும் அரசியல் பிரிவுக்கு இருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிக்க ரஹ்மானின் பாதையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியில் உருவானது.
அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, "இந்தச் சந்தர்ப்பத்தில், மக்கள் கட்சியின் ஒரு தலைவரும், அப்போது ஆசிஃப் சர்தாரியின் நெருங்கிய கூட்டாளியுமான ஒருவர், ரஹ்மான் தங்களுக்குப் பயனுள்ளவராக இருக்க முடியும் என்று நினைத்தார், எனவே அவர் திரைமறைவில் அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்கினார்."
ரஹ்மான் எம்.க்யூ.எம். இன் அரசியல் இலக்காக மாறியபோது, எம்.க்யூ.எம். ரஹ்மானின் நீண்டகால எதிரியான அர்ஷத் பப்புவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியது என்று இந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
எம்.க்யூ.எம். லண்டன் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளராக இருந்த முஸ்தபா அஜீசாபாடி, லியாரி கும்பல் சண்டை அல்லது ரஹ்மான் பலூச் விவகாரத்தில் எம்.க்யூ.எம். இன் எந்தவொரு தொடர்பையும் மறுத்தார்.
"இது பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பே போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே தலைமுறைகளாகத் தொடரும் விரோதத்தின் தொடர்ச்சி. எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என அவர் கூறினார்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் சேர்ந்த ஒரு அதிகாரி, "அரசியல் ஆதரவால் அர்ஷத் பப்பு பலம் பெறத் தொடங்கினார், அரசியல் சக்திகளும் கோபமடைந்தன, எனவே லியாரியில் வாழ்வது ரஹ்மானுக்கு மீண்டும் கடினமானது. அப்போதுதான் ரஹ்மான் பலுசிஸ்தானுக்குச் செல்வதே நல்லது என்று கருதினார், ஆனால் இந்த முறை ஹூப் செல்லாமல், குவெட்டாவின் சாட்டிலைட் டவுனில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் அடைக்கலம் புகுந்தார்."
சர்தாரியின் தொலைபேசி அழைப்பு காப்பாற்றிய தருணம்

பட மூலாதாரம், Getty Images
ரகசியத் தகவலின் அடிப்படையில் ஜூன் 18, 2006 அன்று, சௌத்ரி அஸ்லம் தலைமையிலான லியாரி அதிரடிப் படை குவெட்டாவின் சாட்டிலைட் டவுனில் உள்ள ரஹ்மானின் ரகசிய இடத்தில் திடீரென சோதனை நடத்தியதை பிபிசிக்குக் கிடைத்த மிகவும் ரகசியமான அறிக்கை காட்டுகிறது.
'துரந்தர்' திரைப்படத்தில் சௌத்ரி அஸ்லம் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
சோதனையின் போது கைதாவதை தவிர்க்க கூரையில் இருந்து குதித்துத் தப்பிக்க முயன்றபோது ரஹ்மானின் கால் முறிந்தது.
காயமடைந்த ரஹ்மான் பிடிக்கப்பட்டார், ஆனால் இந்தக் கைது ஒருபோதும் அரசாங்க ஆவணங்களில் காட்டப்படவில்லை என்று தகவலறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஹ்மானின் கதையைச் சொன்ன அரசியல்வாதி, 'என்கவுன்ட்டர்' நடந்திருக்கலாம், ஆனால் திடீரென ஒரு திருப்புமுனையான விஷயம் நடந்து, சௌத்ரி அஸ்லமின் தொலைபேசி மணி அடித்தது என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிந்திருந்த ஒரு அரசியல்வாதி, ரஹ்மான் போன்ற ஆபத்தான குற்றவாளிகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையின்போது அவர் ஒருபோதும் தனது தனிப்பட்ட தொலைபேசியை எடுத்துச் செல்ல மாட்டார் என்று சௌத்ரி அஸ்லம் தன்னிடம் கூறியதாகக் கூறினார். ஏனெனில் என்கவுன்ட்டர் ஏற்பட்டால், அழைப்பாளர் தரவுப் பதிவு (CDR) அல்லது ஜியோ ஃபென்சிங் மூலம் சௌத்ரி அஸ்லம் அப்போது எங்கே இருந்தார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.
இந்த அரசியல்வாதி, சௌத்ரி அஸ்லம் இத்தகைய சந்தர்ப்பத்திற்காக ஒரு தொலைபேசியைப் பயன்படுத்துவார் என்றும், அதன் எண் மூன்று அல்லது நான்கு உயர் அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்.
ரஹ்மானின் இந்தக் (ஒருபோதும் அறிவிக்கப்படாத) கைது நேரத்தில் கூட, சௌத்ரி அஸ்லம் இந்த ரகசிய தொலைபேசியைப் பயன்படுத்தி 'உயர் அதிகாரிகளுடன்' மட்டுமே தொடர்பில் இருந்தார் என்று அவர் கூறினார்.
அந்த அரசியல்வாதியின் கூற்றுப்படி, "அவர் ரஹ்மானை காவலில் எடுத்தவுடன், அந்த தொலைபேசிக்குத் திடீரென ஒரு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என சௌத்ரி அஸ்லம் என்னிடம் கூறினார்"
"சௌத்ரி அஸ்லம் தொலைபேசியை எடுத்தபோது, மறுமுனையில் ஆசிஃப் சர்தாரி இருந்தார். அந்த ரகசிய எண் சர்தாரி சஹாபை எப்படி அடைந்தது என்று அவர் ஆச்சரியப்பட்டார்."
சௌத்ரி அஸ்லம் மற்றும் ஆசிஃப் சர்தாரி இடையேயான உரையாடலைப் பற்றி அறிந்திருந்த ஒரு தலைவர், சர்தாரி சஹாப் சௌத்ரி அஸ்லமிடம், "கொலை செய்ய வேண்டாம். தவறான வேலை எதையும் செய்யாதீர்கள். நிலுவையில் உள்ள வழக்குகளை (நீதிமன்றத்தில்) ஒப்படைக்கவும்... என்கவுன்ட்டர் செய்யக் கூடாது" என்று கூறியதாகக் கூறினார்.
சிந்துவில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரி, "இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, காவல்துறை சுடக்கூடாது என்றும், ரஹ்மானின் இந்தக் கைது இப்போதைக்கு ஆவணங்களில் காட்டப்படாது என்றும் உடனடியாக முடிவு செய்யப்பட்டது. அவர் கராச்சிக்கு அனுப்பப்படுவார், ஆனால் அவரது கைது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாது." என்றார்.
மற்றொரு ரகசிய அரசு ஆவணத்தின்படி, 'இந்த விசாரணைக்குப் பிறகு, கைது அறிவிக்கப்படாததால், ரஹ்மானை இப்போது எங்கு வைப்பது என்ற சிக்கல் ஏற்பட்டது. உயர் அதிகாரிகள், ரஹ்மானை முதலில் லியாரி அதிரடிப் படையின் அதிகாரி இன்ஸ்பெக்டர் நாசிர் உல் ஹசனின் கார்டன் காவல் வளாகத்தில் உள்ள வீட்டில் சில நாட்கள் வைப்பது என்றும், பின்னர் அந்த நேரத்தில் காலாரியின் எஸ்.எச்.ஓ. பஹாவுதீன் பாபரின் மெட்ரோவில்லில் உள்ள தனிப்பட்ட வீட்டிற்கு அனுப்புவது என்றும் முடிவு செய்தனர்.'
இன்ஸ்பெக்டர் பாபரின் வீட்டிலிருந்து ரஹ்மான் துணிகரமான முறையில்' தப்பித்தார். ரஹ்மான் தப்பிய தேதி ஆகஸ்ட் 20, 2006 என்று ரகசிய அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 20, 2006 அன்று இரவு, ஐந்து ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல் நடத்தி ரஹ்மானை விடுவித்தனர்.
ரஹ்மான் தப்பியது காவல்துறை மற்றும் பிற அமைப்புகளின் உயர் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ரஹ்மான் தப்பிய உடனேயே, தான் "பணம் கொடுத்து விடுவிக்கப்பட்டதாக" வதந்தியைப் பரப்பினார்.
ரஹ்மானின் கதையை அறிந்த அரசியல்வாதி மற்றும் சில காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஹ்மான் தப்பிக்க பாபர் உடந்தையாக இருந்ததாக ராணுவ அதிகாரிகள் சந்தேகித்தனர். இன்ஸ்பெக்டர் பாபர் டிசம்பர் 31, 2013 அன்று ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதால், அவரது தரப்பு தெரிய வரவில்லை.
தப்பியோடிய பிறகு, ரஹ்மான் லியாரியை அடைந்து மீண்டும் கொலை மற்றும் வன்முறையைத் தூண்டினார்.
இப்போது ரஹ்மான் பாகிஸ்தானில் உள்ள மக்கள் கட்சிக்கும் பிரச்னைகளை உருவாக்கத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில், லியாரியில் நகர சபை பதவிக்கான மக்கள் கட்சியின் வேட்பாளர் மாலிக் முஹம்மது கான் தோற்கடிக்கப்பட்டதாகவும், ரஹ்மானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் ஊடக ஆய்வுகள் மூலம் தெளிவாகத் தெரிந்தது.
2008 இல் மக்கள் கட்சி அரசாங்கத்தை அமைத்து, ஆசிஃப் சர்தாரி முதல் முறையாக நாட்டின் அதிபரானபோது, ரஹ்மானின் செல்வாக்குள்ள உள்ளூர் தலைவர்களுக்கும் மக்கள் கட்சிக்கும் இடையே மோதல்கள் ஏற்படத் தொடங்கின.
இதனால் மக்கள் கட்சிக்கும் ரஹ்மானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ரஹ்மான் மீதான மக்கள் கட்சியின் இந்த கோபம் 'அமைப்பின்' (System) முழு கவனத்திற்கும் வந்தது. பின்னர் ஒரு நாள் ஆசிஃப் சர்தாரியின் நெருங்கிய கூட்டாளியான ஜுல்ஃபிகார் மிர்சா சிந்துவின் ஆளுநரான டாக்டர் இஷ்ரதுல் இபாத்தை அணுகினார்.
லியாரி விவகாரங்கள் மோசமடைந்துவிட்டதாக ஜுல்ஃபிகார் மிர்சா கூறியதாக இஷ்ரதுல் இபாத், தெரிவித்தார். "கொலை மற்றும் வன்முறை அதிகரித்து வருகிறது. லியாரி கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்."
இஷ்ரதுல் இபாத்தின் கூற்றுப்படி "மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நீங்கள்தான் என்று நான் டாக்டர் சாஹபிடம் கூறினேன். நீங்கள் உத்தரவு பிறப்பிக்கலாம். அதன் அடிப்படையில்தான் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும். இதன் பிறகு, ஜுல்ஃபிகார் மிர்சாவின் உத்தரவின் பேரில், லியாரியில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு எந்த விலை கொடுத்தும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது."
காவல்துறை ரஹ்மானை எவ்வாறு பிடித்தது?

பட மூலாதாரம், Getty Images
இப்போது ரஹ்மான் மூன்று பக்கங்களிலிருந்தும் சூழப்பட்டார். ஒருபுறம், 'மிரட்டிப் பணம் பறித்தல்' மற்றும் அரசியல் செல்வாக்கு குறித்து எம்.க்யூ.எம். கோபமாக இருந்தது.
மறுபுறம், மக்கள் கட்சியும் கோபமாக இருந்தது.
மூன்றாவது பக்கம், காவல்துறை அதிகாரியின் வீட்டிலிருந்து தப்பியது மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்துத் தப்பியதாக வதந்தியைப் பரப்பியது ஆகியவற்றால் ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் குறிப்பாக சௌத்ரி அஸ்லம் ரஹ்மான் மீது கோபமாக இருந்தனர்.
எல்லா பக்கங்களிலிருந்தும் வந்த இந்த எதிர்ப்புக்கு ரஹ்மான் மிகப்பெரிய விலையை தரவேண்டியிருந்தது.
ஆபத்தில் இருக்கும் இந்த உணர்வு மிகவும் அதிகமாக இருந்ததால், ஆகஸ்ட் 8, 2009 அன்று, ரஹ்மான் திடீரென தனது நெருங்கிய மற்றும் நம்பகமான கூட்டாளிகளை அழைத்து, இப்போது நடமாட்டத்தைக் குறைக்குமாறு கூறினார். 'மிகவும் அவசியமானால், வந்து செல்வதற்குக் காருக்குப் பதிலாக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்த வேண்டும்.' என கூறியதாக அந்தத் தலைவர் தெரிவித்தார்.
"இங்கே ரஹ்மானைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த சௌத்ரி அஸ்லம் ஒரு தகவல் அளிப்பவரை அணுகினார். அடுத்த நாளே, ஆகஸ்ட் 9, 2009 அன்று, ரஹ்மான் பலுசிஸ்தானுக்குச் செல்ல முயன்றபோது, அந்த தகவல் அளிப்பவர் மூலம் ரஹ்மான் கராச்சியில் இருந்து வெளியேற முயற்சிப்பது சௌத்ரி அஸ்லமுக்குத் தெரிய வந்தது."
இந்த தலைவரின் கூற்றுப்படி, ரஹ்மான் மற்றும் அவரது மூன்று நெருங்கிய கூட்டாளிகள் அகீல் பலூச், நசீர் பலூச் மற்றும் ஔரங்கசீப் பலூச் மோட்டார் சைக்கிளில் புராணா கோலிமாரை அடைந்தனர், அங்கிருந்து ஒரு காரில் அவர்கள் பலுசிஸ்தானின் மந்த் பகுதியை நோக்கிப் புறப்பட்டனர்.
தகவல் அளிப்பவரிடம் இருந்து சௌத்ரி அஸ்லம் தகவல் பெறுவதற்குள், ரஹ்மான் கராச்சி எல்லையைத் தாண்டிவிட்டார் என்று அந்த தலைவர் கூறினார். இப்போது அஸ்லம் மற்றும் அவரது குழுவினர் ரஹ்மானைத் தேடிப் புறப்பட்டனர்.
ரஹ்மானும் அவரது கூட்டாளிகளும் வெகுதூரம் சென்றுவிட்டதால், உளவுத்துறை அமைப்புகள் அஸ்லமைத் திரும்பி வருமாறு அறிவுறுத்தின. சௌத்ரி அஸ்லம் மற்றும் அவரது குழுவினர் திரும்பி வரும் பயணத்தில் கடானிக்கும் வந்தருக்கும் இடையில் வந்தபோது, ரஹ்மானும் அவரது கூட்டாளிகளும் மீண்டும் கண்காணிப்பு பகுதிக்குள் வந்துவிட்டனர், மேலும் தொலைபேசியைக் கண்காணிப்பவர்களுக்கு அவர்களின் தடயங்கள் கிடைத்தன.
ரஹ்மானின் கூட்டாளியான நசீர் பலூச் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வருவதைப் பற்றித் தெரிவித்து, பிடித்த உணவைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார், இந்த கோரிக்கைதான் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது.
நசீர் பலூச்சின் மனைவி அதே வாகன தொடரில் இருந்த ரஹ்மானின் கூட்டாளியின் மனைவிக்குத் தொலைபேசியில் அழைத்து, விருந்தினர்கள் (ரஹ்மான் மற்றும் அவரது கூட்டாளிகள்) வருவதாகவும், பிடித்த உணவைச் சமைக்கச் சொல்லியிருப்பதாகவும் கூறினார்.
இந்தத் தகவல் சௌத்ரி அஸ்லமுக்குத் தெரிவிக்கப்பட்டது, ரஹ்மானும் அவரது கூட்டாளிகளும் வருவதால் அவர்களைப் பின்தொடருமாறு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அந்த தலைவர் கூறினார்.
சௌத்ரி அஸ்லம் மற்றும் அவரது குழுவினர் ஜீரோ பாயிண்ட் என்று அழைக்கப்படும் இடத்தை அடைந்தனர், அங்கிருந்து ஒரு சாலை குவாடர் கடலோர நெடுஞ்சாலைக்கும் மற்றொன்று குவெட்டாவை நோக்கியும் செல்கிறது.
இந்த சாலை ஆங்கில எழுத்து Y வடிவத்தை எடுக்கும் இடத்தில் காவல்துறைக் குழு நின்றது, இதனால் ரஹ்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் காவல்துறையை எதிர்கொள்ள வேண்டும், அதுதான் நடந்தது.
இறுதியில், ஒரு கருப்பு டொயோட்டா காரில் ரஹ்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் வருவது தெரிந்தது.
அந்த தலைவர் என்னிடம், "அந்த நேரம் வரை அஸ்லமின் குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் காவல்துறையின் சீருடைக்குப் பதிலாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கடலோரக் காவல்படையின் சீருடையை அணிந்திருந்தனர், இதனால் ரஹ்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் கராச்சி காவல்துறையின் சீருடையைப் பார்த்து, குறிப்பாக சௌத்ரி அஸ்லமைப் பார்த்து வேறு எதையும் செய்யாமல், அறியாமலேயே பிடிபடுவார்கள்" என்று கூறினார்.
எப்படியோ, ரஹ்மான் வருவதை சௌத்ரி அஸ்லம் பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் ரஹ்மானுக்குத் தான் அஸ்லமின் வலையில் சிக்கிவிட்டோம் என்று தெரியவில்லை. கார் நிறுத்தப்பட்டபோது ரஹ்மானின் கூட்டாளிகள் எதிர்க்கவில்லை.
அடையாள அட்டை கேட்கப்பட்டபோது, ரஹ்மான் ஒரு போலி அடையாள அட்டையைக் காட்டினார். அதில் அவரது பெயர் ஷோயப் என்று எழுதப்பட்டிருந்தது, ஆனால் திட்டத்தின் படி, ரஹ்மானை அங்கு கடலோரக் காவல்படை சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள், உங்கள் அடையாள அட்டையை காரில் அமர்ந்திருக்கும் கர்னல் சஹாபிடம் சென்று காட்டுங்கள் என்று கூறினர்.
இந்த 'கர்னல் சஹாப்' சௌத்ரி அஸ்லம்தான், ரஹ்மான் கருப்பு கண்ணாடி கொண்ட விவோ காரின் கதவைத் திறந்தவுடன், அவர் சௌத்ரி அஸ்லமை எதிர்கொண்டார். தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ரஹ்மானின் மனதில் வருவதற்கு முன்பே, அவருக்குப் பின்னால் நின்றிருந்த காவல்துறை அதிகாரி மாலிக் ஆதில் அவரை உள்ளே தள்ளி, தானும் காரில் ஏறிக் கொண்டார்.
அந்த தலைவரின் கூற்றுப்படி சாத்தியமான போலீஸ் என்கவுன்ட்டரில் மரணம் நெருங்குவதைக் கண்டு, அஸ்லமிடம் பணம் கொடுத்துச் சமாதானம் பேச ரஹ்மான் முன்வந்தார், ஆனால் அஸ்லம், "நான் பணம் வாங்காதபோது உளவுத்துறை அமைப்புகளின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய அளவு என்னை இழிவுபடுத்தினாய், இப்போது நான் வாங்கினால் என்ன செய்வாய்?" என்று கூறினார்.
அங்கிருந்து (ஜீரோ பாயிண்டில் இருந்து) அவர்கள் அனைவரையும் நேஷனல் ஹைவே ஸ்டீல் டவுனுக்கு அழைத்துச் சென்று, வடக்கு பைபாஸ் வழியாக இந்தக் குழு லிங்க் ரோட்டை அடைந்தது, அங்கு ரஹ்மான் தனது மூன்று கூட்டாளிகளுடன் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார் என்று அந்த அரசியல்வாதி கூறினார்.
இந்தக் கூற்றை பல அதிகாரிகள் தனிப்பட்ட உரையாடல்களில் உறுதிப்படுத்தினர், ஆனால் ரஹ்மான் 'டகாய்த்' இன் மரணம் குறித்த கராச்சி காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஆகஸ்ட் 10, 2009 அன்று அனைத்து செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது.
ஆங்கிலச் செய்தித்தாள்களான 'டான்' மற்றும் 'தி நேஷன்' ஆகியவை இந்த அரசாங்க அறிக்கையைக் குறிப்பிட்டு, ரஹ்மான் டகாய்த் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகள் காவல்துறையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன.
போலீஸ் ரஹ்மான் டகாய்த்தின் காரை நிறுத்த முயன்றது, ஆனால் குற்றவாளிகள் தப்பி ஓட முயன்றதால் காவல்துறை சுட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானதாக அரசு அறிக்கை கூறியது.
போலீஸ் என்கவுன்ட்டரில் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
"கொலை மற்றும் பிணைத்தொகைக்காகக் கடத்தல் போன்ற 80-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ரஹ்மான் தேடப்பட்டார்" என்று அந்த அறிக்கை கூறியது.
அவரது மரணம் கராச்சி காவல்துறையின் மிகப் பெரிய வெற்றி என்று கராச்சி காவல்துறைத் தலைவர் வசீம் அஹ்மதும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
சிந்துவின் முன்னாள் ஆளுநர் இஷ்ரதுல் இபாதும் இது ஒரு 'உண்மையான' போலீஸ் என்கவுன்ட்டர் என்று கூறினார்.
"இந்த நடவடிக்கையை சௌத்ரி அஸ்லம் செய்ததால், சிலருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் இந்த சம்பவத்தில் போலி என்கவுன்ட்டர் என்று சொல்ல முடியாது. இந்த சம்பவத்தில் அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது சாத்தியமில்லை."
இந்த போலீஸ் என்கவுன்ட்டர் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'டான்' தனது அக்டோபர் 14, 2009 செய்தியில், ரஹ்மானின் விதவை ஃபர்சானா, தனது வழக்கறிஞர்களான அப்துல் முஜீப் பீர்சாதா மற்றும் சையத் காலித் ஷா மூலம், சிந்து உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சர்மாத் ஜலால் உஸ்மானியின் நீதிமன்றத்தில் தனது கணவர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக மனு தாக்கல் செய்ததாகத் தெரிவித்தது.
மாநில உள்துறைச் செயலர் உட்பட கராச்சி காவல்துறை மற்றும் சிந்து காவல்துறைத் தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் ரஹ்மானின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள், அவர்கள் இன்றுவரை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
ரஹ்மான் டகாய்த் அரசியல் எதிர்ப்பு மற்றும் அமைப்பின் மீதான கோபத்தால் கொல்லப்பட்டார் என்று தோன்றுகிறது, ஆனால் அமைப்பு ஏன் அவர் மீது கோபமாக இருந்தது?

லியாரியின் உருது கலைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற) பேராசிரியர் தௌசிஃப் அஹ்மத், லியாரி கும்பல் சண்டை திரைக்குப் பின்னால் உள்ள உண்மை வேறு என்று கூறுகிறார். "லியாரியில் நீங்கள் பார்த்த மோதலுக்கான காரணம் உங்களுக்கு இங்கே கிடைக்காது. அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் பலுசிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்."
பலுசிஸ்தானின் இன இயக்கத்திலிருந்து லியாரியைப் பிரிக்க, அரசும் அதன் அமைப்புகளும் பிராந்தியத்தில் அரசியலில் இருந்து குற்றத்தின் வேரைக் களைவதற்குப் பதிலாக, குற்றம் அரசியலில் ஆதிக்கம் செலுத்த எப்போதும் வாய்ப்பளித்தன என்பது பேராசிரியர் தௌசிஃப் அஹ்மத்தின் கருத்து.
"1973 இல் பலுசிஸ்தானில் ராணுவ நடவடிக்கை தொடங்கியபோது, லியாரி பலூச் எதிர்ப்பு இயக்கத்தின் மையமாக மாறிவிடுமோ என்ற அச்சம் இருந்தது, எனவே லியாரியைத் தனிமைப்படுத்த, அரசின் அதிகாரிகள் அதை குற்ற உலைக்குள் தள்ளினர்."
பேராசிரியர் தௌசிஃப், "ராணுவம் லியாரியை கும்பல் சண்டையிடம் ஒப்படைத்தது, மக்கள் கட்சி இதில் ஈடுபட்டது. மக்கள் கட்சி லியாரியின் அரசியல் வாரிசாக இருந்தது. அவர்கள் போராட்டத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை, எளிதான பாதையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் அந்தக் கும்பல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்."
சர்தார் அப்துல் ரஹ்மான் பலூச் என்று அழைக்கப்பட்டாலும் அல்லது ரஹ்மான் டகாய்த் என்று அழைக்கப்பட்டாலும், ஒரு விஷயம் என்னவென்றால், அவரது இறுதி ஊர்வலம் லியாரியின் வரலாற்றில் நடந்த பெரிய இறுதி ஊர்வலங்களில் ஒன்றாகும்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 2014-இல், சௌத்ரி அஸ்லம் தாலிபனின் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












