சுனிதா வில்லியம்ஸ் எப்போது, எவ்வாறு பூமிக்குத் திரும்புவார்? எளிய விளக்கம்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளை மேற்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விரைவில் பூமிக்குத் திரும்புகின்றனர். எட்டு நாட்கள் மட்டுமே அங்கு தங்க திட்டமிட்ட நிலையில் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னையால் பயணம் நீண்டது. இந்நிலையில், அவர்கள் இந்திய நேரப்படி மார்ச் 19-ஆம் தேதி அதிகாலையில் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுவிட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளை தொடர ஏதுவாக புதிய குழுவினர் அந்த விண்கலத்தில் சென்றுள்ளனர்.

க்ரூ-10 திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா கூறியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர்.

நாசா விண்வெளி வீரர்கள் எப்படி பூமிக்குத் திரும்புகிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. பூமிக்கு திரும்பும் அந்த பயணம் எப்படி இருக்கும்?

எப்போது பூமிக்குத் திரும்புவார்கள்?

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கான கால அட்டவணையை நாசா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய நேரப்படி மார்ச் 19-ஆம் தேதி அதிகாலை 3.27 மணியளவில் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவார்கள். இந்த நேரம், மாற்றத்துக்கு உட்பட்டது என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

பூமிக்குத் திரும்ப வேண்டிய விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்துக்குள் செல்வது முதல் கடலில் அந்த விண்கலம் இறங்குவது வரை பல்வேறு படிநிலைகள் உள்ளன. எளிமையாக சொல்ல வேண்டுமானால், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட குழுவினர் டிராகன் விண்கலத்துக்குள் சென்றவுடன் அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும். பின்னர், விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும். பின்னர், விண்கலத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்து, பாராசூட் விரித்து பாதுகாப்பாக கடலில் இறக்குவார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்பும் இந்த பயணத்தை NASA+ இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பில் காண முடியும்.

பூமிக்கு திரும்பும் பயணம் குறித்து, நாசா இணையதளத்தில் உள்ள தகவல்கள் மற்றும் மொஹாலியில் உள்ள மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் வழங்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் விண்கலம் எப்படி இயங்கும்?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தில் 4 பேர் வரை பயணிக்க முடியும்.

"அந்த விண்கலத்தில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பும் வரை நமக்குத் தேவையான காற்று உள்ளிட்டவை இருக்கும்." என்கிறார் வெங்கடேஸ்வரன்.

முதலில் இந்த விண்கலம் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இணைப்பு, காற்று வெளியேற முடியாதபடி மிகவும் உறுதியான, இறுக்கமான இணைப்பாக இருக்கும்.

முதலில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் உள்ளே செல்வார்கள். பின்னர் விண்கலத்தின் கேப்ஸ்யூலுக்குள் சென்று கதவை முழுவதுமாக மூடும் செயல்முறை (Hatch closing coverage) நடக்கும். அதன்பின், விண்வெளி நிலையத்துக்கும் அந்த விண்கலத்துக்கும் இடையே ஒரு தடுப்பு போடப்படும்.

"இதன்பின், விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சரிவர செயல்படுகிறதா என பாதுகாப்பு குறித்து சோதனைகள் நடைபெறும். எரிபொருள் போதுமான அளவில் இருக்கிறதா, என்ஜின் சரியாக இருக்கிறதா என சோதித்துப் பார்க்கப்படும்." என பாதுகாப்பு செயல்முறைகளை விளக்குகிறார் வெங்கடேஸ்வரன்.

அதன்பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து (undocking) பூமியை நோக்கிய பயணத்தை விண்கலம் தொடங்கும்.

விண்கலம் எங்கு இறங்கும்?

"அமெரிக்கா பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலில்தான் விண்கலத்தைத் தரையிறக்கும். தீவுகள் அல்லாத ஒரு பெரும் கடல் பகுதியில் தான் இறக்குவர்." என கூறுகிறார் வெங்கடேஸ்வரன்.

கடல் பகுதியில் விண்கலத்தை இறக்குவதை ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்கின்றனர். விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர்.

சுனிதா வில்லியம்ஸ் பயணிக்கும் விண்கலம், ஃபுளோரிடா அருகே கடலில் இறங்க உள்ளது. அங்கு நிலவும் பருவநிலை குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதித்து பார்க்கப்பட்டது. அங்கு சாதகமான வானிலை நிலவுவதாக நாசா தெரிவித்துள்ளது.

கடலில் இறங்குவது எப்படி?

"கடலை நோக்கி விண்கலம் வரும்போது, விண்கலத்திலிருந்து 4-5 பாரசூட்கள் திறக்கப்பட்டு அதன் வேகம் குறைக்கப்பட்டு, பாதுகாப்பான வேகத்தில் இறக்கப்படும். கடலில் இறங்கியதும் அந்த விண்கலம் சுற்றியுள்ள காற்றின் காரணமாக மிதக்கும் நிலைக்கு வரும். பின்னர், விண்வெளி வீரர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு நிலப்பகுதிக்குக் கொண்டு வரப்படுவர்." என விளக்கினார் த.வி. வெங்கடேஸ்வரன்.

விண்கலம் பூமியை நோக்கி இறங்கும் போது விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட வேண்டும். அதற்கு, விண்கலம் செல்லும் திசையில் ராக்கெட் ஒன்றை செயல்படுத்தி, அதன் வேகம் குறைக்கப்படுவதாக அவர் விளக்கினார். அதற்கு டீஆர்பிட் பர்ன் (deorbit burn) என்று பெயர்.

விண்கலத்தை பூமியில் இறக்குவதில் உள்ள சவால்கள் என்ன?

"பூமிக்குள் விண்கலம் வரும்போது காற்று உராய்வு காரணமாக வெப்பநிலை பல ஆயிரம் டிகிரி வரை உயரும். இதைத் தடுக்க காற்று தடுப்பு அமைப்பு (heat shield) அந்த விண்கலத்தில் இருக்கும். அது பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த வெப்பப் பாதுகாப்புக் கவசம் சரியாக இல்லாததால்தான் கல்பனா சாவ்லா பயணித்த விண்கலம் வெடித்தது. எனினும், இம்மாதிரியான அமைப்புகளை விண்கலம் புறப்படுவதற்கு முன்பே மிக கவனமாக சோதிப்பார்கள்" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

பூமி திரும்பியவுடன் விண்வெளி வீரர்கள் இயல்பாக உணருவார்களா?

"ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் இருந்து விண்வெளி வீரர்கள் நீண்ட காலத்துக்குப் பின் பூமிக்குத் திரும்பும் போது பூமியின் சூழலுக்குப் பழக சில நாட்களாகும்." என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)