சிங்கப்பூரில் மனைவிக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர சதி - காருக்குள் கஞ்சா வைத்த கணவர் சிக்கியது எப்படி?

    • எழுதியவர், ஜோயல் கிண்டோ
    • பதவி, பிபிசி செய்தியாளர்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மனைவியை சிக்க வைக்க முயன்ற நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

37 வயதான டான் சியாங்லாங், தனது மனைவியின் காரின் பின் இருக்கைகளுக்கு இடையே அரை கிலோவுக்கும் மேல் அதிக எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனது மனைவியை சிக்க வைத்து மரண தண்டனை கிடைக்க இது வழிவகுக்கும் என்று அவர் நினைத்தார்.

உலகிலேயே கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் அமலில் உள்ளன. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியம் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, சியாங்லாங் தனது மனைவியை அச்சுறுத்தினார், செய்யாத குற்றத்திற்காக அவரை சிக்க வைக்க முயற்சி செய்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தனது திட்டம் வெற்றியடைந்தால், மனைவி கைது செய்யப்பட்டு அவர் மீது கடுமையான குற்றம் சுமத்தப்படும் என்று அவர் நம்பினார்" என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

கஞ்சா வைத்திருந்ததற்காக சியாங்லாங்கிற்கு மூன்று ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பொய் சாட்சியங்களை உருவாக்க முயன்றதாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சியாங்லாங் மனைவியை சிக்க வைக்க நினைத்தது ஏன்?

சியாங்லாங் மற்றும் அவரது மனைவி 2021 இல் திருமணம் செய்து ஒரு வருடம் கழித்து பிரிந்தனர். சிங்கப்பூரில் திருமணமாகி குறைந்தது மூன்று வருடங்களான தம்பதிகளுக்கு மட்டுமே விவாகரத்து வழங்கப்படுகிறது. இதனால் இருவராலும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

சியாங்லாங் தனது மனைவி மீது குற்றவியல் வழக்கு இருக்கும் பட்சத்தில் விவாகரத்து சுலபமான கிடைக்கும் என நினைத்தார்.

கடந்த ஆண்டு தனது காதலியுடன் டெலிகிராம் தளத்தில் சாட் செய்த போது தனது மனைவியை பொய் வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டதாக சியாங்லாங் கூறியுள்ளார்.

அக்டோபர் 16 ஆம் தேதி, அவர் டெலிகிராம் சமூக ஊடக தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிய ஒரு குழுவிடமிருந்து கஞ்சாவை வாங்கியுள்ளார். 500 கிராமுக்கு மேல் எடையுடைய அந்த கஞ்சாவை தன் மனைவியின் காரில் மறுநாள் மறைத்து வைத்துள்ளார். ஆனால் தன் மனைவியின் காரில் கேமரா இருந்த விஷயம் அவருக்குத் தெரியாது போலும்.

சியாங்லாங் காரில் போதைப்பொருளை மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் போது, ​​கேமராவில் இருந்து அவரது மனைவியின் போனுக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

அவரின் மனைவி தன் போனில் லைவ் கேமரா பதிவுகளை சரி பார்த்தபோது, ​​பிரிந்து சென்ற கணவர் தனது வாகனத்தில் இருந்து வெளியேறுவதை கண்டு உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக, போலீசார் காரை சோதனையிட்டனர். காருக்குள் கஞ்சா இருப்பதை கண்டுப்பிடித்து, முதலில் சியாங்லாங்கின் மனைவியை கைது செய்தனர். ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால், அவர்கள் சியாங்லாங்கை விசாரித்து அவரை கைது செய்தனர்.

தண்டனை குறைப்பு

மனைவியை சிக்க வைக்க இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட போது சியாங்லாங் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவரது வழக்கறிஞர் வாதிட முயன்றார். ஆனால் அத்தகைய அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது.

சிங்கப்பூரில் பிடிபட்ட போதைப்பொருளின் அளவைப் பொறுத்தே சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு போதைப்பொருள் கடத்தல் மரண தண்டனைக்கு கூட வழிவகுக்கும்.

சியாங்லாங்கிற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைத்து, ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரது தண்டனை குறைக்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)