தமிழ்நாட்டு மீனவர்களை ஆபத்தில் தள்ளும் கடல் உயிரினம் – அமெரிக்க கப்பலில் சென்னை வந்ததா?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தென் அமெரிக்க சிப்பி இனத்தால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே பறிபோவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் இந்த உயிரினம் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?

சென்னை மாவட்டம், எண்ணூரில் முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்படை குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு கொசஸ்தலை ஆறு மிக முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

"கடந்த 2021ஆம் ஆண்டில் கொசஸ்தலை ஆற்றின் ஓரத்தில் கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து குவித்தனர். அப்போது, காக்கா ஆழிகள் என்படும் இந்தச் சிப்பி இனங்கள் தென்பட்டன. தண்ணீரில் இறங்கி வலை கட்டும்போது, இவை காலில் தட்டுப்பட்டது.

இதை பச்சாழி ரகத்தைச் சேர்ந்த சிப்பி இனம் என்று நினைத்தோம். கேரளாவில் தோடு என்பார்கள். தொடக்கத்தில் சிறிய அளவில் தென்பட்டபோது, இதன் அபாயம் தெரியவில்லை. இப்போது சமநிலைப் பகுதி முழுவதும் பரவிவிட்டது" என்கிறார், காட்டுப்பாக்கம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் சூலூரான். இவர், காக்கா ஆழிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை கடல் பகுதியில் காக்கா ஆழிகள் பரவியது எப்படி?

"பத்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காக்கா ஆழிகள், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகப் பரவிவிட்டது. எண்ணூர் ஆற்றில் இறால்கள் அதிகமாக வளர்கின்றன. ஆற்றின் சேற்றுப் பகுதிகளில் புதைந்து வளரும் இறால்களின் அழிவுக்கு, இந்தச் சிப்பி இனம் காரணமாக உள்ளது.

இது கருப்பாக இருப்பதால் 'காக்கா ஆழி' என்கின்றனர். ஆங்கிலத்தில் Mytella strigata என்கின்றனர். இவை தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. கப்பல் போக்குவரத்தின் மூலம் மட்டுமே இவை வந்திருக்க முடியும்,” என்கிறார் எண்ணூர் கழிமுகப் பாதுகாப்பு பிரசாரத் தன்னார்வலர் துர்கா.

இவை கம்பளம் போலப் படர்ந்து, ஆற்று நீரின் அளவையும் தாண்டி வளர்வதாகவும், சில இடங்களில் படகுகளை நகர்த்தவே முடிவதில்லை எனவும் அவர் கூறுகிறார். “எண்ணூர் மீனவர்களின் மீன்பிடித் தளங்கள், காக்கா ஆழிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவை பழவேற்காடு ஏரி வரையிலான 16 கி.மீ அளவுக்குப் பரவிவிட்டது."

“மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வாயிலாக இந்தச் சிப்பி இனம் பரவியிருக்கலாம்” என்றொரு காரணத்தையும் துர்கா முன்வைக்கிறார்.

இந்த காக்கா ஆழிகள், ஆற்றின் மணல் மற்றும் சேற்றில் மேல்பகுதியில் தென்பட்டாலும் ஆற்றில் 3 அடி ஆழம் வரையில் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றால் இறால், நத்தை மற்றும் சில மீன் இனங்கள் அழிந்து வருவதாகவும் மீனவர் குமரேசன் சூலூரான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அச்சத்தில் இருக்கும் மீனவர்கள்

இவை பரவும் வேகத்தைக் கண்டு அச்சமடைந்த மீனவர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் தமிழ்நாடு ஈரநிலம் இயக்கத்தில் புகார் மனு கொடுத்தனர். இதன் அடிப்படையில் மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீன்வளத்துறை ஆணையரிடம் கடந்த ஆண்டு புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ‘காக்கா ஆழிகளைச் சேகரித்து மீன் உரம் தயாரிக்கலாம் அல்லது ஆழிகளின் சிப்பிகளை சுண்ணாம்பு தயாரிக்கும் ஆலைகளுக்கு வழங்கலாமா?’ என்பது குறித்து ஆராயவும் மீன்வளத்துறை இணை இயக்குநர், மீன்வளத்துறை ஆணையருக்குக் கடந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

படகுகளை முடக்கிய சிப்பிகள்

"ஆனால், அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிடும் குமரேசன் சூலூரான், "அரசுத் துறையின் ஒத்துழைப்பு கிடைக்காததால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீனவர்களே 2 நாள்களாகக் களமிறங்கி காக்கா ஆழிகளைக் கைகளால் அள்ளியெடுத்து அழித்தனர். அதன் பிறகும் இவை பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார்.

"கழிமுகப் பகுதியில் ஒரு நாளில் 6 மணிநேரம் கடல் நீர் கொசஸ்தலை ஆற்றுக்கும் அடுத்த 6 மணிநேரம் ஆற்று நீர் கடலுக்கும் செல்வது இயல்பானது. பௌர்ணமி, அமாவாசை நாட்களில் அதிகப்படியான தண்ணீர் பாயும். இந்தக் காலங்களில் கப்பல் வாயிலாகப் பரவும் காக்கா ஆழிகளின் குட்டிகள், ஆறுகளில் கலந்துவிடுகின்றன. தற்போது சுமார் 4 இடங்களில் படகுகளையே நகர்த்த முடியாத அளவுக்கு இவை பல்கிப் பெருகிவிட்டன” என்கிறார் குமரேசன்.

குமரேசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், “காக்கா ஆழிகளை அழிப்பதற்கான செயல்திட்டத்தை தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்” என கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் ஆரணியாறு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “வெளிநாட்டு உயிரினமான இந்த சிப்பிகள், பழவேற்காடு ஏரி வரை பரவியுள்ளன. கொசஸ்தலை ஆறு, உப்பங்கழி, பக்கிங்ஹாம் கால்வாய், பழவேற்காடு முகத்துவாரம் வரையில் தூர்வாருவதன் மூலம் காக்கா ஆழிகளை அழிக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், இதை அழிப்பதற்குத் தேவைப்படும் தொகையில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

காக்கா ஆழிகள் பரவ அமெரிக்க கப்பல்கள் காரணமா?

இதுகுறித்து, தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா பிபிசி தமிழிடம் பேசியபோது, “மத்திய மற்றும் தென் அமெரிக்க கப்பல்களில் இருந்து வெளியேறும் உபரி நீரில் இருந்து இவை பரவியிருக்கலாம் என்பதை நிபுணர் குழுதான் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நடந்திருக்கலாம் என்ற யூகம் மட்டுமே முன்வைக்கப்படுகிறது” என்கிறார்.

“துறைமுகங்கள் மூலமாக காக்கா ஆழிகள் பரவியிருக்க வாய்ப்புள்ளதா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆகியவை உள்ளன.

கப்பலில் ஏற்றுமதிக்காக சரக்குகளை ஏற்றும்போது கன்டெய்னர்களில் உள்ள பொருள்களின் எடை காரணமாக, கப்பல் நிலையாக இருக்காது. அதன் நிலைப்புத் தன்மைக்காக உபரி நீரை உள்ளே எடுத்துக் கொள்வார்கள்.

அந்த நீரை, இன்னொரு இடத்தில் சரக்குகளை இறக்கும்போது வெளியேற்றுவார்கள். காமராஜர் துறைமுகத்தின் முக்கிய வேலையே ஏற்றுமதிதான். அங்கு உபரி நீரை வெளியேற்ற வாய்ப்புகள் இல்லை. அதுவே காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, காக்கா ஆழிகள் எவ்வாறு பரவின என்பதை நிபுணர் குழு ஆராய வேண்டும்” என்றார்.

“கப்பல்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பாகவே, உபரி நீரை வெளியேற்ற வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் சமீபத்தில் விதிக்கப்பட்டுள்ளன.” இதற்கான வழிகாட்டுதல்களை கோவாவில் உள்ள தேசிய கடல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறுகிறார், ‘காக்கா ஆழிகள்’ குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் கடல்வாழ் உயிரின ஆய்வாளர் முனைவர்.நவீன் நம்பூதிரி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கப்பலின் அடிப்பகுதியில் உன்னி போல அவை ஒட்டிப் பரவியிருக்கலாம். வெவ்வேறு விதமான காலநிலைகளில் பயணித்து இந்தியா வந்து முட்டைகளைப் போட்டிருக்கலாம். காக்கா ஆழிகள் எப்படிப் பரவுகிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள் பெரிய அளவில் நடக்கவில்லை.

அவை நீரை அரித்து உள்ளே உள்ள வண்டலைச் சாப்பிடும்போது நீர் சுத்தமாகிவிடும். இதனால், இதர உயிரினங்களுக்கான உணவுகள் கிடைப்பதில்லை. இப்படியாக சூழலியல் சமநிலையை காக்கா ஆழிகள் குலைக்கின்றன” என்கிறார் நவீன் நம்பூதிரி.

பசுமைத் தீர்ப்பாயத்தின் எச்சரிக்கை

இந்நிலையில், கடந்த வியாழன் அன்று (ஆகஸ்ட் 8) இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “காக்கா ஆழி பாதிப்பில் இருந்து மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறிய ஓடைகளையும் உப்பங்கழி ஏரிகளையும் பாதுகாப்பது அவசியம். காக்கா ஆழிகளால் இறால், நண்டு, மீன் இனங்கள் வாழவே முடியாத நிலை ஏற்படுகிறது.”

“இதை அழிக்கும் வகையில் தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்துடன் இணைந்து 8.50 கோடி செலவில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “காக்கா ஆழிகள் பரவுவதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதம், பெரும் இழப்பை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வை ஏற்படுத்திவிட்டு, தவறு செய்தவர்களிடம் செலவுத் தொகையை வசூலிக்கலாம்.”

“எனவே, தமிழக அரசு முதலில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்தவர்களிடம் இருந்து செலவுத் தொகையை வசூலிக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.

அதோடு, “தமிழக சுற்றுச்சூழல், மீன்வளத்துறை, நீர்வளம் ஆகிய துறைகளின் செயலர்கள், சதுப்பு நில ஆணைய உறுப்பினர் செயலர், துறைமுகங்களின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி காக்கா ஆழிகளை அழிப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலருடன் கூடி முடிவெடுக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்கும் வகையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

காக்கா ஆழிகளை அழிப்பது தொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அடுத்த விசாரணை வரும் 27ஆம் தேதி நடக்கவுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)