விபத்தில் சிக்கி 12 ஆண்டு நினைவுகளை இழந்து, மனைவி கூட அடையாளம் தெரியாமல் தவித்த நபர் - என்ன நடந்தது?

    • எழுதியவர், ஜோ ஃபிட்ஜென், எட்கர் மாடிகாட் & ஆண்ட்ரூ வெப்
    • பதவி, பிபிசி உலக சேவை

விருப்பமில்லாமல் ஒரு டைம் டிராவலராக மாறியவர்தான் மருத்துவர் பியர்தான்டே பிச்சோனி.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் அவரது மூளையில் காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக, அதற்கு முந்தைய 12 ஆண்டு கால நினைவுகள் பியர்தான்டேவின் நினைவில் இருந்து முற்றிலும் அழிந்துவிட்டன.

மறுநாள் மருத்துவமனையில் கண் விழித்தபோது, அது 2001ஆம் ஆண்டு என்று அவர் நினைத்தார். தனது மனைவியையோ, இளைஞர்களாக வளர்ந்துவிட்ட தனது மகன்களையோ பியர்தான்டேவால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு, இனி தன்னால் மருத்துவம் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்த பியர்தான்டே, தனது பழைய வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயன்றார் (அவருக்கு நெருக்கமானவர்களால் 'பியர்' என்று அவர் அழைக்கப்படுகிறார்).

ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தபோது, தனக்கு ஓர் இருண்ட பக்கம் இருப்பதை பியர் கண்டறிந்தார்.

பின்னர், பியரை போலவே, ஒரு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, தனது 12 ஆண்டு கால நினைவுகளை இழக்கும் ஓர் இளம் மருத்துவரின் கதையைக் கொண்ட ஒரு இத்தாலிய டிவி தொடருக்கு, பியரின் விசித்திரமான அனுபவம் தூண்டுகோலாக அமைந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, பியருக்கு சுயநினைவு வந்தது. அவர் கண் விழித்தபோது, இத்தாலியின் லோடி நகரில் அவர் நடத்தி வந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு படுக்கையில் படுத்திருந்தார்.

"நான் முதலில் பார்த்தது ஒரு வெள்ளை நிற விளக்கு. விபத்துக்குப் பிறகு என் சக ஊழியர்கள் என்னை வைத்திருந்த அவசர சிகிச்சை அறையின் வெளிச்சம்தான் அது. நான் சுமார் ஆறு மணிநேரம் கோமாவில் இருந்தேன். கண் விழித்தபோது, என் சக ஊழியர்களின் கண்களைத்தான் முதலில் பார்த்தேன்."

"இன்று என்ன தேதி?" என்று அவர்கள் கேட்டபோது, நான் ஐந்து அல்லது ஆறு விநாடிகள் யோசித்துவிட்டு 'இன்று அக்டோபர் 25, 2001' என்று பதிலளித்தேன்" என்று பியர் கூறுகிறார். பின்னர், அவரது சக ஊழியர் ஒருவர் ஐபேடில் ஏதோ பதிவு செய்வதை பியர் பார்த்தார்.

அது 2001ஆம் ஆண்டில் இல்லாத ஒரு சாதனம். அந்தக் காலகட்டத்தில், தொலைபேசிகள் பிறரை அழைக்கவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும், சில அடிப்படை செய்திகளைப் பெறவும் மட்டுமே பயன்பட்டன.

ஆனால், அதைவிட அதிர்ச்சியான செய்தி அவருக்குக் காத்திருந்தது. "உங்கள் மனைவியைப் பார்க்க விரும்புகிறீர்களா?" என்று அவரிடம் கேட்கப்பட்டது. "நிச்சயமாக, 'எனக்கு 'என் மனைவியைப் பார்க்க வேண்டும்' என்று நான் பதிலளித்தேன்."

"நான் என் மனைவி, 12 வயது இளமையாக அறைக்குள் வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால், உள்ளே வந்தவர் என் மனைவியின் சாயலில் இருந்தாலும், அவர் எனது மனைவியைப் போலத் தோன்றவில்லை. அவருக்கு நிறைய சுருக்கங்கள் இருந்தன," என்று பியர் கூறுகிறார்.

தனது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக வளர்ந்துவிட்டதையும் பியர் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. "நீங்கள் யார்? என் குழந்தைகள் எங்கே? என்று நான் அவர்களிடம் கேட்டேன். ஏனென்றால் அவர்கள் எனது மகன்கள் என நான் நம்பவில்லை" என்று கூறுகிறார் பியர்.

பின்னர், அவரது நினைவில் மிகவும் ஆரோக்கியமாக இருந்த அவரது "அம்மா" மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை அவரது மனைவி அவருக்குத் தெரிவித்தார்.

"நான் கண் விழித்தபோது, எனக்கு 53 வயது என்று நினைத்தேன். ஆனால், பின்னர்தான் எனக்கு 65 வயது ஆகிவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன்" என்கிறார் பியர்.

பியரின் இருண்ட காலம்

தனக்கு மறந்துபோன அந்த 12 வருடங்களில் என்னெவெல்லாம் நடந்தது என்பதற்கான ஆதாரங்களைத் தேடிய பியர், அப்போது அவர் ஓர் இனிமையான மனிதராக இல்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

"நான் என் நண்பர்கள், என் சக ஊழியர்கள், என் மனைவி என எல்லோரிடமும், நான் நல்லவனா? கெட்டவனா? நான் எப்படிப்பட்ட மனிதன்? என்று கேட்டேன்."

"நான் எனது அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரானபோது எனக்குக் கீழே சுமார் 230 பேர் பணியாற்றியதாக என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் சொன்னார்கள்" என்று பியர் பகிர்ந்துகொண்டார்.

அவர்கள் அவரைக் குறிப்பிடும் விதம் சற்று வித்தியாசமாக இருந்தது. "எனது செல்லப்பெயர் பிரின்ஸ் ஆஃப் பாஸ்டர்ட்ஸ்(ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் வசைச்சொல்)" என்கிறார் பியர். பணியிடத்தில் 'டாக்' என்று அழைக்கப்படும் பியர் தன்னால், "இதை நம்பவே முடியவில்லை" என்று கூறுகிறார்.

ஏனென்றால், இதற்கு முன்பு தான் ஒரு நல்ல மனிதராக இல்லை என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை.

"நீங்கள் மிக, மிகக் கடுமையானவர். நீங்கள் வலிமையானவர்தான், ஆனால் மற்றவர்களிடம் மிகவும் கடினமாக நடந்துகொள்வீர்கள்' என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்" என்று பியர் கூறுகிறார்.

பியர் தனது உண்மையான சுயத்தை கண்டறிதல்

பியர், தனது நினைவில் இருந்து அழிந்துபோன 12 ஆண்டுகளில் உலகம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை அறிந்த பிறகு, தான் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ளத் தனது உண்மையான சுயத்தைத் தேடத் தொடங்கினார்.

"நான் யார் என்பதைப் புரிந்துகொள்ள, 76,000-க்கும் அதிகமான மின்னஞ்சல்களைப் படித்தேன். சில மின்னஞ்சல்களில், நான் கெட்டவனாக, ஒரு கடுமையான தலைவராக, ஒரு மோசமான நபராக இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது."

"அந்த மின்னஞ்சல்களைப் படித்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன்" என்று கூறும் அவர், அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அவரிடம் கூறியது உண்மைதான் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்.

எனவே, பியர் ஒரு நல்ல மனிதராக மாற முடிவு செய்தார்.

"நான் ஒவ்வொரு நாளும் ஒரு நாட்குறிப்பை எழுத ஆரம்பித்தேன். எனது நாள் அல்லது என் வாழ்வின் முக்கியமான விஷயங்களையும், சாதாரண விஷயங்களையும், நான் என்ன உணர்ந்தேன் என்பதையும் எழுதினேன்" எனக் கூறுகிறார் பியர்.

"நான் தவறான நேரத்தில் ஒரு தவறான மனிதனாக இருந்தேன். அது எனது நேரம் அல்ல,"

"எனக்குப் புரியாத ஒரு உலகத்தில், நான் ஒரு வேற்றுகிரகவாசியைப் போல் இருந்தேன். நான் தனியாக இருப்பது போல் உணர்ந்தேன். என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன்" என்கிறார் பியர்.

பியர் ஓர் இருண்ட காலத்துக்குள் நுழைந்தார். "நான் நீண்ட காலமாகத் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். என் அம்மா இறந்துவிட்டதால், என் குழந்தைகளும் இறந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்."

"அப்படியானால் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்? தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட அந்தத் தருணங்களில் நினைத்தேன். ஏனெனில் இது நான் வாழ்ந்த உலகமாக எனக்குத் தோன்றவில்லை" என்று பியர் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் தனது எதிர்மறை எண்ணங்களில் இருந்து தன்னை மீட்டெடுக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார் பியர்.

மீண்டும் காதலில் விழுந்த பியர்

கார் விபத்தில் தனது 12 வருட நினைவுகளை இழந்துவிட்ட பியர், கார் விபத்துக்கு முன்பு ஒரு நாளைக்கு 15 முதல் 16 மணிநேரம் வேலை செய்து கொண்டிருப்பார். கார் விபத்துக்கு முன்னதாக, பியர் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரான பிறகு, வீட்டிற்கு அதிகமாக வரவே மாட்டார் என்று அவரது மனைவி கூறியுள்ளார்.

"'உங்களுக்கு ஒரு பெண் தோழி இருந்தாரா, அல்லது பல தோழிகள் இருந்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் நீங்கள் அந்த அளவுக்கு உங்களது வேலையில் கவனம் செலுத்தினீர்கள்' என்று என் மனைவி கூறினார்" என்கிறார் பியர்.

தான் கோமாவில் இருந்து எழுந்தவுடன் மீண்டும் தனது மனைவியிடம் காதல் கொண்டதை உணர்ந்த பிறகு, கணவனாகத் தனது பாத்திரத்தை மீண்டும் புதுப்பிக்க பியர் முடிவு செய்தார்.

"என் மனைவி [அறைக்குள் இருந்து வெளியே நடக்க] திரும்பியதும், நான் அவரை [பின்னால் இருந்து] பார்த்தேன். நான் காதலில் இருப்பது போல் உணர்ந்தேன். அந்த உணர்வு, ஆஹா... நன்றாக இருந்தது" என பியர் விவரிக்கிறார். தான் நினைவில் வைத்திருந்த அதே நபரைப் போல தனது மனைவி தெரியவில்லை என்று பியர் கூறுகிறார்.

"என் மனைவி மீதே மீண்டும் காதலில் விழுந்ததன் மூலம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்துவிட்டேன்' என்று சொல்லக்கூடிய ஒரே ஆண் நான் மட்டும்தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் வேறொரு நபராக எனக்குத் தோன்றினார். அப்போதும் நான் அவர் மீது காதலில் விழுந்தேன்" என்கிறார் பியர்.

அவரது புதிய வாழ்வு பிரகாசமானதாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் இருப்பதாக பியர் கூறுகிறார்.

"எனது தனிப்பட்ட பயணத்திற்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் புதிய, அழகான நினைவுகளை உருவாக்குவதில் நான் பெருமைப்படுகிறேன்."

"இதுதான் எனது மந்திரம்" என்கிறார் பியர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு