'சொம்பால் தாக்கிய மாமனார்; அதற்கு உதவிய கணவர்' - தொடரும் குடும்ப வன்முறை அவலம்

'சொம்பால் தாக்கிய மாமனார்; அதற்கு உதவிய கணவர்' - தொடரும் குடும்ப வன்முறை அவலம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மும்பையின் தானேவில் தனது மனைவியைக் கொலை செய்ததாக 45 வயது நபர் கைது செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கான காரணமாக போலீசார் கூறியது என்ன தெரியுமா?

"மேற்கு நகரமான மும்பையின் அருகிலுள்ள தானேவில் ஒரு வங்கியில் பணிபுரியும் நிகேஷ் கக், தனது 40 வயது மனைவி பரிமாறிய ஜவ்வரிசி உப்புமாவில், உப்பு அதிகம் இருந்ததால், அவரது கழுத்தை ஆத்திரத்தில் நெரித்துள்ளார்," என்று காவல்துறை அதிகாரி மிலிந்த் தேசாய் அப்போது பிபிசியிடம் கூறியிருந்தார்.

அதே ஆண்டு ஜனவரி மாதம், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் தனது மனைவி இரவு உணவை வழங்கவில்லை என்பதற்காக அவரைக் கொலை செய்ததாக மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உணவுடன் சாலட் தரவில்லை என உத்தர பிரதேசத்தில் மனைவியை கொலை செய்ததாக கணவர் கைதானார். அதே ஆண்டில், அக்டோபர் மாதம் கோழி இறைச்சியை சரியாக வறுக்கவில்லை என்று தனது மனைவியை ஒருவர் தாக்கியதாகப் புகார் எழுந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு, 60 வயதான ஒருவர் இரவு உணவை தாமதமாக வழங்கியதற்காக மனைவியை சுட்டுக் கொலை செய்ததாக பிபிசியில் செய்தி வெளியானது.

இவை இந்தியாவில் குடும்ப வன்முறையின் தீவிரத்தைக் காட்டும் சில செய்திகள். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தாரால் நிகழும் வன்முறைகளே பெருமளவு பங்கு வகிப்பதாக சமீபத்திய தேசிய குற்ற ஆவண காப்பகத் தரவுகள் உணர்த்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு அவர்களின் வீடுதான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தான இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா சபையின் இரண்டு அமைப்புகள் (UNODC & UN Women) அவர்களின் அறிக்கையில், உலகத்தில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண், அவரது கணவர், குடும்ப உறுப்பினர் போன்ற தெரிந்த ஒருவரால் கொல்லப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது இதனால் ஒவ்வொரு நாளும் 137 பெண்கள் கொல்லப்படுகின்றனர்.

"பல ஆண்டுகளாக நடந்த துன்புறுத்தல்தான் இப்படி கொலையில் முடிவதாகவும், பொறாமை, பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாதது, காவல்துறையிடம் புகார் அளித்ததற்காகப் பழிவாங்குவது" ஆகியவையெல்லாம் கொலைக்கான முக்கியக் காரணங்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்படியான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும், குடும்ப வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்கள் கூறுவது என்ன என்பதை இங்கே அறிந்துகொள்ள முயன்றுள்ளோம்.

குடும்ப வன்முறைகள்

பட மூலாதாரம், TASVEER HASAN

"என் மாமனார் என்னை மிகவும் அடிப்பார். கணவரும் அடித்திருக்கிறார். ஆனால், அதிகம் அடிப்பது மாமனார்தான். அவர் சொல்லிக் கொடுத்துதான் என் கணவரும் அடிப்பார்."

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கறிஞர் அருள்மொழியிடம் கூறிய வார்த்தைகள் இவை. எம்.காம் படித்து தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் விமலா, இந்தியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பல லட்சம் பெண்களில் ஒருவர்.

விமலாவை அவரது கணவர் அடித்ததற்கு என்ன காரணம்?

"விமலாவுக்கு அவருடைய சொந்த ஊரில் உள்ள சொத்தை தனது பெயரில் எழுதி வாங்க வேண்டும் என்பதுதான் கணவரின் எண்ணம். அதைப் பெற்றுத் தரவில்லை என்பதால், குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார். அதன் உச்சகட்டமாக, தண்ணீர் சொம்பு மற்றும் பாட்டிலால் அவரது மாமனார் விமலாவை தாக்கியுள்ளார்.

தனது தந்தை அடிப்பதற்கு வசதியாக விமலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டது அவருடைய கணவர்தான். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விமலா சிகிச்சை பெற்றுள்ளார்" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தன்னிடம் பேசியபோது விமலா தனது கணவர் 'நல்லவர்'தான் எனக் கூறியதாகவும் தெரிவித்தார் அருள்மொழி.

"மாமனார் உங்களை அடிப்பதற்கு கையை பிடித்துக் கொண்டவர் உங்கள் கணவர் என்கிறீர்கள். பின்னர் எப்படி கணவரை நல்லவர் என்கிறீர்கள்?" எனக் கேட்டதற்கு, "அவரது அப்பா சொல்லித் தரவில்லையென்றால், என் கணவர் அடிக்க மாட்டார்" என்று விமலா கூறியதாக அருள்மொழி தெரிவித்தார்.

இப்போதும் தனக்கு விவாகரத்து கோரியோ, தனது கணவர் மற்றும் கணவர் குடும்பத்திற்கு எதிராக நடவடிக்கை கோரியோ விமலா சட்ட உதவியை நாடவில்லை.

வழக்கறிஞர் அருள்மொழி

பட மூலாதாரம், Annamalai Arulmozhi/Facebook

படக்குறிப்பு, குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவர் மீது பெண்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறுகிறார், வழக்கறிஞர் அருள்மொழி

"விமலாவின் மாமனார் தனது மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காகவே என்னை விமலா சந்திக்க வந்தார்," எனக் கூறுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

இதற்கும் மேலாக, எங்கே தனக்கு விவாகரத்து ஆகிவிடுமோ என்ற 'அச்சமும்' விமலாவுக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

அதோடு, "இப்போதும்கூட கணவர் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதால்தான் அவர் தனியாக இருக்கிறார், மீண்டும் கணவர் அழைத்தால் சென்றுவிடுவார். பெண்ணின் குடும்பத்தினரும் விவாகரத்து வேண்டாம் என்றே நினைக்கின்றனர்" என்றும் விவரித்தார்.

விமலாவின் பெற்றோரும் அவரது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகும் பெண்கள்

இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக 4.48 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாக, தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகள் (என்சிஆர்பி) கூறுகின்றன.

இது 2022ம் ஆண்டில் பதிவான வழக்குகளைவிட 0.7% (4.45 லட்சம் வழக்குகள்) அதிகம்.

இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வன்முறைகள் பெண்களின் கணவர் அல்லது அவர்களின் குடும்பத்தாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அதாவது, 29.8% வழக்குகள் குடும்ப வன்முறைகளாக உள்ளன.

பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளில் குடும்ப வன்முறைகள் அதிகமாகப் பங்களிப்பதற்கு என்ன காரணம்?

"குடும்ப வன்முறைக்கு 50% பங்கு, மகள் தன் கணவரைப் பிரிந்து விவாகரத்து செய்வதை சமூக அவலமாகக் கருதும் குடும்ப அமைப்பும், அவர்களுக்குப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் சமூகமும்தான்" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

உணவில் உப்பு குறைவு என்பன போன்ற மிகச்சிறிய பிரச்னைகள்கூட குடும்ப வன்முறைக்குக் காரணமாக அமைந்தாலும், அது பெரியளவில் வெடிக்கும்போது மட்டுமே செய்தியாகின்றன, அல்லது வழக்குகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

'சொம்பை எறிந்து தாக்கிய மாமனார்; தாக்குதலுக்கு உதவிய கணவர்' - குடும்ப வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

பல சந்தர்ப்பங்களில் கணவர் வீட்டாருடன் சமாதானம் செய்து பெண்ணை அவரது வீட்டாரே அனுப்பி வைக்கும் போக்கு நிலவுவதும் இந்தச் சூழல் தொடர்வதற்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கருதுகிறார் அருள்மொழி.

கணவர் வீட்டார் காலில் விழும் பெண்ணின் குடும்பம்

"பல வழக்குகளில் தங்கள் மகனுக்கு இந்த பெண் வேண்டாம் என திருமணமான சில மாதங்களிலேயே குடும்பமாகச் சேர்ந்து முடிவெடுக்கின்றனர். பல சம்பவங்களில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பெண், கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றே முடிவெடுக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் பெண்களின் குடும்பத்தினர் குடும்பமாக கணவரின் வீட்டுக்குச் சென்று அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, பெண்ணைச் சேர்த்துக் கொள்ளுமாறு கூறுகின்றனர். ஓர் ஆண்டுக்குள் இப்படி 5-6 சம்பவங்கள் நடந்ததாக எனக்குத் தெரிய வந்துள்ளது" என்கிறார் அருள்மொழி.

திருமண உறவுக்குள் பெண்களாலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், அப்படியான நேரங்களில் ஆண்கள் வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதாகக் கூறும் சட்ட நிபுணர்கள், தங்களால் முடிந்தாலும்கூட பெரும்பான்மை பெண்கள் தனியே சென்று வாழ்க்கையைத் தொடரத் தயங்குவதாகக் கூறுகின்றனர்.

மனைவியைத் தாக்குவது மட்டும் குடும்ப வன்முறை அல்ல. ஒரு பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் பொருளாதார வன்முறை குறித்து அதிகம் பேசப்படுவதில்லை என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

சென்னையைச் சேர்ந்த 30 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவர் அத்தகைய பொருளாதார வன்முறையால் பாதிக்கப்பட்டவர். அவருடைய கணவர் திடீரென இறந்துவிட, அவர் சம்பாதித்து வாங்கிய வீட்டை 'அபகரிக்க' கணவர் வீட்டார் முயற்சிகள் மேற்கொள்வதாக மற்றொரு உதாரணத்தைக் கூறுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

"அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். அதில் ஒருவர் சிறப்புக் குழந்தை. கணவர் இறப்புக்கு பின் வேலைக்குச் சென்று வாழ்வாதாரம் ஈட்டுகிறார். மேலும், வீட்டின் பகுதியளவை வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால், அந்த வீட்டில் அவரது கணவருடைய அம்மாவும் சட்டபூர்வ உரிமை உள்ளவர் எனக்கூறி, அவர் மூலம் அந்த வீட்டை அபகரிக்க முயல்கிறார் மாமனார்."

'சொம்பை எறிந்து தாக்கிய மாமனார்; தாக்குதலுக்கு உதவிய கணவர்' - குடும்ப வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்துவதும் குடும்ப வன்முறையே என்கின்றனர் சட்ட நிபுணர்கள்

மகன் இறந்துவிட்டால், மருமகளையும் குழந்தைகளையும் வெளியே அனுப்பக்கூடாது, அவரது சொத்துகளில் அந்தப் பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்ற பாதுகாப்பை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது.

அதை சில வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும், பல சந்தர்ப்பங்களில் கணவருடைய பணப் பரிமாற்றங்களைக்கூட அவரின் குடும்பத்தினர் மனைவிக்குத் தெரியவிடுவதில்லை என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

கரூரைச் சேர்ந்த சத்யப்ரியாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது பிரிந்து வந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது, " திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லை. 4 முறை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை இல்லாததால் மாமியார் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். பெரும்பாலும், மாமனாரால் தான் சண்டை ஆரம்பிக்கும். 'நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம்', 'உப்பு சரியில்லை , காரம் சரியில்லை' என்றே பிரச்னை வரும்.

அதை கணவரிடம் கூறினால், 'என் அப்பா நல்லவர், அனுசரித்துப் போ' என்பார். வீட்டில் அனைத்து வேலைகளையும் பார்ப்பேன். பின்னர் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. நாளடைவில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அதைக் கேட்டால் அவ்வளவுதான். ஒருமுறை 6 மாத கர்ப்பமாக இருக்கும்போதே கடுமையாக அடித்தார்" என்கிறார்.

பி.ஏ. படிப்பை வறுமையின் காரணமாக இடைநிறுத்தி விட்டார் சத்யப்ரியா. அவரது கணவர் விவாகரத்து கேட்டாலும்கூட, "எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. வறுமையான குடும்பச் சூழல். கணவருடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் குழந்தைகளை வளர்க்க முடியும், இல்லையெனில் சமூகத்தில் பெயர் கெட்டுவிடும்" என்று கூறுகிறார்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம், Getty Images

'அழிக்கப்படும் சுயமரியாதை'

குடும்ப வன்முறையால் அடிப்படை சுயமரியாதையும் மதிப்பும், கலாசாரம், மதம், பழக்கவழக்கங்களின் பெயரால் அழிக்கப்படுவதாகக் கூறுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

"பெண் குழந்தைகளைப் பெற்றவர் தலைகுனிய வேண்டும் என்ற நிலை தொடர்கிறது. இன்னும் கேட்டால் அது நவீன முறையில் புதுப்பிக்கப்படுகிறது. வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள சில ஆண்கள் முன்வந்தாலும் அவரின் குடும்பங்கள் ஒத்துக்கொள்வதில்லை.

வேலைக்குப் போனாலும் வீட்டு வேலை செய்ய வேண்டுமென்ற நிலையே பெண்களுக்கு உள்ளது. இதில் பிரச்னை ஏற்பட்டால் ஆண்கள் வன்முறையைக் கையில் எடுக்கின்றனர். மனைவியை அடிப்பதைத் தனது பிறப்புரிமையாகக் கருதுகின்றனர்" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

குடும்ப வன்முறைகளைப் பொறுத்தவரை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005, வரதட்சணையால் பாதிக்கப்படுவதைத் தடுக்க வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம், 1961 ஆகியவை பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. தற்போது பிஎன்எஸ் பிரிவு 85, குடும்ப வன்முறை குறித்து விரிவாகப் பேசுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எவையெல்லாம் குடும்ப வன்முறை?

உடல் ரீதியான வன்முறை மட்டுமே குடும்ப வன்முறை அல்ல எனக் கூறும் வழக்கறிஞர் சாந்தகுமாரி, ஆறு வகையான வன்முறைகள் இதன்கீழ் அடங்கும் என விளக்குகிறார். அவர் கூறியதன்படி,

  • உடல் ரீதியான வன்முறை - உடல் ரீதியாக பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தல்
  • மனரீதியான வன்முறை - மிரட்டுவது மூலம் அச்சத்தை ஏற்படுத்துதல், தன்மீதோ அல்லது மனைவி மீதோ அல்லது குழந்தை மீதோ தாக்குதல் நிகழ்த்தப்படும் என மிரட்டுவது போன்றவை மூலம் மன அமைதியைக் குலைப்பது
  • வாய்மொழித் தாக்குதல் (verbal abuse) - ஏளனம், கேலி செய்யும் வசைச் சொற்கள், அசௌகரியத்தை ஏற்படுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை
  • உணர்வுரீதியான வன்முறை - தொடர்ச்சியான விமர்சனங்கள் மூலம் மனரீதியாக காயம் ஏற்படுத்துதல், ஒருவரின் திறன்களைக் குறைவாக மதிப்பிடுவது, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை பார்க்கக் கூடாது எனத் தடுத்தல் உள்ளிட்ட பலவற்றின் மூலம் உணர்வுரீதியான பாதிப்பை ஏற்படுத்துதல்
  • பாலியல் ரீதியான வன்முறை - பாலியல் உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்துதல், கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபடுதல் உள்ளிட்டவை
  • பொருளாதார வன்முறை - மனைவியின் பணம் மற்றும் பொருளாதார ரீதியிலான முடிவுகளைக் கட்டுப்படுத்துதல்

இவை தவிர, வரதட்சணை கொடுமைகள், தன்னையோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களையோ துன்புறுத்துவதாக மிரட்டுதல் போன்றவையும் இதில் அடங்கும் என்று விளக்கினார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு