பாலுறவுக்கான சட்டபூர்வ வயதை 16 ஆக குறைக்க வேண்டுமா? - மனமொருமித்த காதலை சட்டம் தடுக்கிறதா?

    • எழுதியவர், ஷெர்லின் மோலன்
    • பதவி, பிபிசி நியூஸ்

ஜூலை மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தியாவில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது (தற்போது 18 வயது) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த விஷயத்தின் மூலம், பதின்பருவத்தினருக்கு இடையிலான பாலியல் உறவுகளை ஒரு குற்றமாகக் கருதுவது குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்தது.

16 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவத்தினருக்கு இடையேயான சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுகள், சுரண்டல் அல்லது வன்கொடுமைகள் அல்ல என்று ஜெய்சிங் கூறுகிறார். இதுபோன்ற வழக்குகள் குற்றவியல் வழக்குகளின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"வயது அடிப்படையிலான சட்டங்களின் குறிக்கோள், குழந்தைகளை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும், ஒருமித்த மற்றும் வயதுக்கு ஏற்ற உறவுகளை குற்றமாக்குவதாக இருக்கக்கூடாது" என்று அவர்கள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களில் தெரிவித்தனர்.

ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை எதிர்க்கிறது. அத்தகைய விதிவிலக்கு அங்கீகரிக்கப்பட்டால், இந்தியச் சட்டத்தில் மைனர்களாகக் கருதப்படும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சுரண்டல் மற்றும் வன்கொடுமைகளுக்கான ஆபத்து மேலும் அதிகரிக்கும் என்று அது கூறுகிறது.

இந்த வழக்கு 'சம்மதத்தின் வரையறை' குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. 16 முதல் 18 வயது வரையிலான பதின்பருவத்தினருக்கு இடையிலான ஒருமித்த உறவுகளை இந்தச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி வைக்க இந்தியச் சட்டங்கள், குறிப்பாக 2012 ஆம் ஆண்டின் போக்சோ (POCSO) சட்டம் திருத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

நிபுணர்களின் கருத்து என்ன?

பதின்பருவத்தினர் இந்த வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டால், அவர்களின் சுதந்திரம் அப்படியே பாதுகாக்கப்படும் என்று குழந்தை உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மறுபுறம், இதை எதிர்ப்பவர்கள், அவ்வாறு செய்வது கடத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்ற குற்றங்களை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள்.

பதின்பருவ நபர் ஒருவர் தவறாக கையாளப்பட்டால், அந்த குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தொடர்பான சுமையை அவரால் சுமக்க முடியுமா என்ற கேள்வியையும் நிபுணர்கள் எழுப்புகின்றனர். மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், சம்மதத்தின் வயதை தீர்மானிக்கும் உரிமை யாருக்கு இருக்க வேண்டும், இந்தச் சட்டங்களின் உண்மையான பலனை யார் பெறுகிறார்கள் என்பதுதான்.

உலகின் பல நாடுகளைப் போலவே, இந்தியாவும் 'இருவர் சம்மதத்துடனான உடலுறவுக்கான' சரியான வயதை தீர்மானிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்காவில், இந்த வயது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும், அதேசமயம் இந்தியாவில் இது முழு நாட்டிற்கும் ஒரே மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் உடலுறவுக்கான சட்டப்பூர்வ வயது, என்பது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளை விட அதிகம். இந்த நாடுகளில், இந்த வயது வரம்பு 16 ஆண்டுகள் ஆகும்.

1860ஆம் ஆண்டு இந்திய குற்றவியல் சட்டம் அமலுக்கு வந்தபோது, இந்த வயது வரம்பு 10 ஆண்டுகளாக இருந்தது. 1940 ஆம் ஆண்டு, அது 16 ஆண்டுகளாக திருத்தப்பட்டது.

அடுத்த பெரிய மாற்றம் POCSO சட்டம் ஆகும், இது 2012 இல் 'சம்மத வயதை' 18 ஆக உயர்த்தியது. பின்னர் 2013இல் இது குற்றவியல் சட்டங்களில் இணைக்கப்பட்டது மற்றும் 2024இல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம் அதே வயதை தக்க வைத்துக் கொண்டது.

கடந்த பத்தாண்டுகளில், பல குழந்தை உரிமை ஆர்வலர்களும் நீதிமன்றங்களும் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும் அதை 16 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளன.

தற்போதைய சட்டம் சம்மதத்துடன் கூடிய பதின்பருவ உறவுகளை குற்றமாக்குகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

பெரியவர்கள், பெரும்பாலும் இதுபோன்ற உறவுகளைத் தடுக்க அல்லது அடக்குவதற்கு சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக பெண்கள் விஷயத்தில்.

'பாலியல் உறவுகள்' என்ற தலைப்பு இன்னும் நாட்டில் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படவில்லை, அதே நேரத்தில் பல ஆய்வுகள் மில்லியன் கணக்கான இந்திய இளைஞர்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதாக தெரிவிக்கின்றன.

"சாதி, வர்க்கம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதனால்தான் சம்மத வயது தொடர்பான சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று 'முஸ்கான்- குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஷர்மிளா ராஜே கூறுகிறார்.

2022இல் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சட்ட சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நிர்வாக அமைப்பான இந்திய சட்ட ஆணையத்திற்கு, களத்தில் உள்ள உண்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக, 2022ஆம் ஆண்டில் போக்சோவின் கீழ் சம்மத வயதை மறுபரிசீலனை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல வழக்குகளில், 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காதலித்து, பாலியல் உறவு கொண்டதையும், ஆனால் பின்னர் அந்த பதின்பருவ ஆண்கள் மீது போக்சோ மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அடுத்த ஆண்டு, சட்ட ஆணையம் தனது அறிக்கையில் வயதைக் குறைக்க மறுத்துவிட்டது, ஆனால் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இடையே 'ஒருமித்த உறவுகளில்' இருப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும்போது நீதிமன்றங்கள் 'நீதித்துறை விருப்புரிமையைப்' பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரை இன்னும் சட்ட வடிவம் பெறவில்லை என்றாலும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மேல்முறையீடுகளை விசாரிக்கும்போது, ஜாமீன் வழங்கும்போது, சில வழக்குகளில் விடுவிக்கும்போது அல்லது வழக்குகளை தள்ளுபடி செய்யும்போது இந்தக் கொள்கையைப் பயன்படுத்துகின்றன. இதில், வழக்கின் உண்மைகளையும் பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தையும் நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

ஷர்மிளா ராஜே உள்பட பல குழந்தை உரிமை ஆர்வலர்கள், இந்த விதியை சட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கோருகின்றனர், இதனால் அதன் பயன்பாட்டில் சீரான தன்மை இருக்கும். இது ஒரு பரிந்துரையாக மட்டுமே விடப்பட்டால், நீதிமன்றங்கள் அதைப் புறக்கணிக்கக்கூடும்.

கடந்த ஏப்ரல் மாதம், 17 வயது சிறுமி ஒருவர் 23 வயது நபருடன் காதல் கொண்டிருந்ததாகவும், அவரது பெற்றோர் வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தபோது, அவர் அந்த 23 வயது நபருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தொடரப்பட்ட ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த 23 வயது நபரை விடுதலை செய்து வெளியான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குழந்தைகள் உரிமைகள் அமைப்பான என்ஃபோல்ட் பிராக்டிகல் ஹெல்த் டிரஸ்டின் ஆராய்ச்சியாளரான ஸ்ருதி ராமகிருஷ்ணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், "நீதிமன்றம் போக்சோ சட்டத்தை அப்படியே பயன்படுத்தியது" என்று விவரித்தார், மேலும் இதை "நீதியின் கடுமையான தோல்வி" என்று கூறினார்.

'பலருக்கு, முழு செயல்முறையும் ஒரு தண்டனை தான்'

குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட விசாரணை மற்றும் வழக்கு விசாரணை செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருப்பதால், தண்டனை விதிக்கும்போது நீதித்துறை விருப்புரிமையைப் பயன்படுத்துவது மட்டும் போதாது என்று ஜெய்சிங் வாதிடுகிறார்.

இந்தியாவின் நீதித்துறை அமைப்பு மெதுவாகச் செயல்படுவதற்குப் பெயர் பெற்றது, இங்கு ஒவ்வொரு மட்டத்திலும் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்திய குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்தின் ஆராய்ச்சி அறிக்கையின்படி, ஜனவரி 2023 நிலவரப்படி, போக்சோ வழக்குகளை மட்டுமே விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் சுமார் 2.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

"பலருக்கு, முழு செயல்முறையும் ஒரு தண்டனையாக மாறுகிறது," என்கிறார் ஜெய்சிங்.

"ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகப் பார்ப்பதை நீதிபதிகளிடம் விட்டுவிடுவதும் சரியான தீர்வாகாது, ஏனெனில் இது முடிவுகளில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும், மேலும் ஒருசார்புக்கான சாத்தியக்கூறுகளும் புறக்கணிக்கப்படும்" என்று அவர் கூறுகிறார்.

வழக்கறிஞரும் குழந்தை உரிமை ஆர்வலருமான புவன் ரிபு, "இதுபோன்ற விதிவிலக்குகள் நிபந்தனையின்றி அனுமதிக்கப்பட்டால், அது கடத்தல் மற்றும் குழந்தை திருமணம் போன்ற வழக்குகளில் தவறாகப் பயன்படுத்தப்படலாம்" என்கிறார். நீதித்துறை விருப்புரிமை மற்றும் நீதி அமைப்பில் சீர்திருத்தங்களை அவர் ஆதரிக்கிறார்.

"குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வழக்குகள் தீர்க்கப்படும் ஒரு அமைப்பு நமக்குத் தேவை. இதனுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மறுவாழ்வு வசதிகள் மற்றும் இழப்பீட்டு ஏற்பாடுகளும் இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், 'ஹக்: குழந்தைகள் உரிமைகளுக்கான மையத்தின்' இணை நிறுவனர் எனாக்ஷி கங்குலி, இந்திரா ஜெய்சிங்கிற்கு ஆதரவாக உள்ளார்.

"சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உள்ளது என்பதற்காக மாற்றத்தைத் தவிர்க்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.

ஜெய்சிங்கின் வாதம் புதியதல்ல என்று அவர் கூறுகிறார். "கடந்த பல ஆண்டுகளில், பல ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் இதே போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்."

"சட்டங்கள் பயனுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டுமென்றால், அவை சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்" என்கிறார் கங்குலி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு