டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பில் வாக்குவாதம்: வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, யுக்ரேனிய - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: வார்த்தைப் போரில் இறங்கிய இரு நாட்டுத் தலைவர்கள்!
டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பில் வாக்குவாதம்: வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

ஏற்கனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு வருகை புரிந்தார்.

அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் சுமூகமாக சென்று கொண்டிருந்த பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்தது.

உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் யுக்ரேன் அதிபரை கண்டித்தனர், யுக்ரேனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அவர்கள் இருவரும் குற்றம் சாட்டினர்.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், போரை ராஜ தந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலன்ஸ்கியிடம் கூறிய போது பதற்றம் அதிகரித்தது.

எப்படிப்பட்ட ராஜ தந்திரம்? என்று ஜெலன்ஸ்கி கேட்டார்.

ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறினார். டிரம்பின் தலைமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுததினார்.

அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு அசாதாரண நிகழ்வை தொடர்ந்து அதிர்ச்சி மேலிட பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை," என்று ஒரு கட்டத்தில் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார்.

"நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை." என்றார் டிரம்ப்.

"நான் விளையாடவில்லை," ஜெலன்ஸ்கி பதிலளித்தார்.

"நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்" என்றார் ஜெலன்ஸ்கி.

"நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள்," என்று டிரம்ப் பதிலளித்தார்.

"நீங்கள் செய்வது நாட்டிற்கு, இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது." என்றார் டிரம்ப்.

"இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது 'நன்றி' என்று சொன்னீர்களா? இல்லை" என்று வான்ஸ் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் அங்கே சூழல் முற்றிலுமாக மாறியிருந்தது.

இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த சக ஊடக நண்பர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

"வெள்ளை மாளிகையில் இதுபோன்ற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்க்கவே முடியாது," என்று ஒருவர் என்னிடம் கூறினார்.

செய்தியாளர்கள் ஓவல் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும், பலர் அதிர்ச்சியில் அசையாமல் நின்றிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைவர்களின் சந்திப்பில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை முழுமையாக வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கே ஒரு குழப்பம் ஏற்பட்டது.

இந்த வார்த்தை மோதல் காரணமாக இந்த அமெரிக்கா - யுக்ரேன் இடையே கையெழுத்தாக இருந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமல் ரத்தாகியது.

இருநாட்டு தலைவர்கள் சந்திப்பில் நடந்தது என்ன? முழு தகவலும் இந்த வீடியோவில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)