சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்: எஃப்.பி.ஐ.

    • எழுதியவர், மேக்ஸ் மாட்சா
    • பதவி, பிபிசி

சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

“கொரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என எஃப்.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது,” என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகையே பாதிப்பிற்குள்ளாகிய கொரோனா தொற்று எப்படி தோன்றிருக்கும் என்பது பற்றி எஃப்.பி.ஐ. தீர்க்கமான கருத்தை வெளிப்படையாக கூறுவது இதுவே முதன்முறை ஆகும்.

வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்ற குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது. இந்த குற்றச்சாட்டு அவதூறானது என்றும் அந்நாடு கூறியுள்ளது.

கொரோனாவின் தொடக்கம் தொடர்பான விவகாரத்தில் சீனா மிக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் கூறியிருந்த சில தினங்களிலேயே இத்தகைய கருத்தை கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று ஒளிபரப்பான அந்த பேட்டியில், “கொரோனா தொற்றுநோயின் மூலம் தொடர்பாக அடையாளம் காணும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் மழுங்கடிப்பதற்கும் சீனா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இது அனைவருக்கும் துரதிருஷ்டவசமானது” என்று கிறிஸ்டோபர் வ்ரே குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் முன்னணியில் இருக்கும் வைரஸ் ஆய்வகமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் (Wuhan Institute of Virology) இருந்து 40 நிமிட பயணத்தில் இந்த சந்தை அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வையும் இந்த ஆய்வகம் நடத்தியிருந்தது.

சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கக் கூடும் என்று எஃப்.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பிற அரசு முகமை நிறுவனங்கள் இதில் இருந்து மாறுபடுகின்றன.

ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க எரிசக்தி துறை "குறைந்த நம்பிக்கையுடன்" மதிப்பிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன. வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்று இந்நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

இதேபோல், கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பேசுகையில், “என்ன நடந்துள்ளது என்பது தொடர்பாக அமெரிக்காவிடம் இன்னும் தெளிவான ஒருமித்த கருத்து இல்லை” என்று கூறியிருந்தார்.

“நாம் இன்னும் அந்த அளவுக்கு செல்லவில்லை. அமெரிக்க மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் கூற எங்களிடம் எதாவது இருந்தால், நிச்சயமாக அதனை செய்வோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

2021 அக்டோபரில் அமெரிக்காவின் உயர்மட்ட உளவு அதிகாரியால் வெளியிடப்பட்ட அறிக்கையில், நான்கு அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது அது தொடர்பான வைரஸால் கொரோனா உருவானது என்று "குறைந்த நம்பிக்கையுடன்" மதிப்பிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலங்களில், ஆய்வகத்தில் இருந்துதான் இந்த தொற்று பரவியது என்பது சதி கோட்பாடு என்று கூறி மறுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் பலரும் மறுத்தனர்.

ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா தொற்று கசிந்திருக்கும் என்ற கருத்து மிகவும் சாத்தியம் இல்லாதது என்று உலக சுகாதார அமைப்பின் விசாரணையிலும் கூறப்பட்டது. எனினும் இந்த விசாரணை தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, புதிய விசாரணைக்கு உத்தரவிட்ட அமைப்பின் இயக்குநர் ஜெனரல், “அனைத்து ஊகங்களும் வெளிப்படையாக உள்ளன. கூடுதலான ஆய்வு தேவை” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் இதுவரை 75 கோடியே 72 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 68 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் உயிர் இழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: